மத்தேயு 2:1-12

மத்தேயு 2:1-12 TCV

யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபின், ஏரோது அரசனாக இருந்தபொழுது, கிழக்கிலிருந்து அறிஞர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். அவர்கள், “யூதருக்கு அரசனாகப் பிறந்தவர் எங்கே இருக்கிறார்? நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கிழக்கிலே கண்டோம். அவரை வழிபட வந்திருக்கிறோம்” என்றார்கள். ஏரோது அரசன் இதைக் கேட்டபோது, அவனும் அவனோடுகூட எருசலேம் மக்கள் எல்லோரும் கலக்கமடைந்தார்கள். அப்பொழுது அவன் எல்லா தலைமை ஆசாரியர்களையும், மோசேயின் சட்ட ஆசிரியர்களையும் ஒன்றுகூட்டி, “கிறிஸ்து எங்கே பிறப்பார்?” எனக் கேட்டான். அவர்களோ, “யூதேயாவிலுள்ள பெத்லகேமில்” என்றார்கள், “ஏனெனில் இறைவாக்கினன் எழுதியிருப்பது இதுவே: “ ‘யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவை ஆளுபவர்களில் நீ அற்பமானவனல்ல; ஏனெனில், உன்னிலிருந்து ஆளுநர் ஒருவர் வருவார். அவர் எனது மக்களான இஸ்ரயேலுக்கு மேய்ப்பராயிருப்பார்,’” என பதிலளித்தார்கள். அதற்குப் பின்பு ஏரோது அறிஞர்களை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் தோன்றிய சரியான நேரத்தை குறித்து அவர்களிடம் கவனமாய்க் கேட்டு அறிந்துகொண்டான். ஏரோது அவர்களிடம், “நீங்கள் போய் கவனமாய் விசாரித்து குழந்தையைத் தேடுங்கள். அவரைக் கண்டதும், நானும் போய் அவரை வழிபடும்படி, உடனே எனக்கும் அறிவியுங்கள்” என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். அரசன் கூறியதைக் கேட்டபின், அவர்கள் தங்கள் வழியே சென்றார்கள். அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம், அவர்களுக்கு முன்னாகச் சென்றது. அது குழந்தை இருக்கும் இடம்வரை வந்து, அதற்கு மேலாக நின்றது. அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து, குழந்தை அதன் தாயாகிய மரியாளுடன் இருக்கக் கண்டு, தரையில் விழுந்து அவரை வழிபட்டார்கள். பின்பு தங்கள் திரவியப் பெட்டியைத் திறந்து தங்கம், நறுமணத்தூள் மற்றும் வெள்ளைப்போளம் ஆகியவற்றைப் பிள்ளைக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். அதற்குப் பின்பு ஏரோதிடம் திரும்பிச் செல்லக்கூடாது என அவர்கள் கனவில் எச்சரிக்கப்பட்டிருந்ததால், தங்கள் நாட்டிற்கு வேறு வழியாய்த் திரும்பிச் சென்றார்கள்.