“நீங்கள் பூமியில் உங்களுக்காகச் செல்வங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம். இங்கே அவை பூச்சி அரித்தும், துருப்பிடித்தும் அழிந்துவிடும். திருடரும் உடைத்துத் திருடுவார்கள். ஆனால் உங்களுடையச் செல்வத்தைப் பரலோகத்திலே சேர்த்துவையுங்கள். அங்கே அவை பூச்சி அரித்தோ, துருப்பிடித்தோ அழிவதில்லை. அங்கே திருடரும் உடைத்துத் திருடமாட்டார்கள். ஏனெனில் உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும்.
“கண் உடலின் விளக்காய் இருக்கிறது. உனது கண் நல்லதாய் இருந்தால், உன் முழு உடலும் வெளிச்சத்தால் நிரம்பியிருக்கும். ஆனால் உன் கண் கெட்டதாயிருந்தால், உன் முழு உடலும் இருளால் நிறைந்திருக்கும். அப்படியானால், உன்னில் இருக்கும் வெளிச்சமே இருளாயிருந்தால், அந்த இருள் எவ்வளவு பெரியதாயிருக்கும்!
“எந்த வேலைக்காரனும், இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவனில் அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும், பணத்துக்கும் பணிசெய்ய முடியாது.
“ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதை உண்ணுவோம் எதைக் குடிப்போம் என உங்கள் உயிரைக்குறித்துக் கவலைப்பட வேண்டாம்; அல்லது எதை உடுத்துவோம் என உங்கள் உடலைக்குறித்தும் கவலைப்பட வேண்டாம். உங்கள் உயிர் உணவைவிடவும், உங்கள் உடல் உடையைவிடவும் முக்கியமானதல்லவா? ஆகாயத்துப் பறவைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதோ, அறுவடை செய்வதோ, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதோ இல்லை. அப்படி இருந்தும் உங்கள் பரலோக பிதா அவைகளுக்கும் உணவளிக்கிறார். நீங்கள் அவற்றைவிட அதிக மதிப்பு வாய்ந்தவர்கள் அல்லவா? கவலைப்படுவதால், உங்களில் யார் தன் வாழ்நாளில் ஒருமணி நேரத்தைக் கூட்டமுடியும்?
“உடையைக் குறித்தும் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்கள் எப்படி வளர்கின்றன என்று பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்கிறதுமில்லை. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப்போல் உடை உடுத்தியதில்லை. விசுவாசக் குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு நெருப்பிலே எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே, இறைவன் இவ்வாறு உடுத்துவாரானால், உங்கள் பிதா உங்களுக்கு, எவ்வளவு அதிகமாய் உடுத்துவிப்பார்? எனவே என்னத்தை உண்போம்? என்னத்தைக் குடிப்போம்? என்னத்தை உடுப்போம்? என்று சொல்லிக் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் இறைவனை அறியாதவர்கள் இவற்றின் பின்னால் ஓடுகிறார்கள். உங்கள் பரலோக பிதாவோ இவை உங்களுக்குத் தேவை என அறிந்திருக்கிறார். எனவே முதலாவதாக இறைவனுடைய அரசையும் அவரது நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு அவற்றோடுகூடக் கொடுக்கப்படும். நாளைக்கு என்ன நடக்கும் என்று கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நாளையத்தினம், நாளைக்கான தேவையைப் பார்த்துக்கொள்ளும். ஒவ்வொரு நாளுக்கும், அன்றன்றுள்ள பிரச்சனையே போதும்.