மாற்கு 13:1-13

மாற்கு 13:1-13 TCV

இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படுகையில், அவருடைய சீடர்களில் ஒருவன் அவரிடம், “போதகரே! பாரும். இவை எவ்வளவு பெரிய கற்கள்! இவை எவ்வளவு மாபெரும் கட்டிடங்கள்!” என்றான். அதற்கு இயேசு அவர்களிடம், “ஆம்; நீங்கள் இந்தப் பெரும் கட்டிடங்கள் எல்லாவற்றையும் காண்கிறீர்கள் அல்லவா? ஆனால் இங்கே, ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி, ஒவ்வொரு கல்லும் இடிக்கப்படும்” என்றார். பின்பு, ஆலயத்திற்கு எதிரேயுள்ள ஒலிவமலையில் இயேசு உட்கார்ந்திருக்கையில், பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் தனிமையாக அவரிடத்தில் வந்து, “இந்தக் காரியங்கள் எப்பொழுது நிகழும்? இவையெல்லாம் நிறைவேறப்போகிறது என்பதற்கு எது முன் அடையாளமாக இருக்கும்? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம்: “உங்களை யாரும் ஏமாற்றாதபடி விழிப்பாயிருங்கள். பலர் என்னுடைய பெயரால் வருவார்கள். ‘நான்தான் அவர்,’ என்று சொல்லி, பலரை ஏமாற்றுவார்கள். நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களைப்பற்றிய செய்திகளையும் கேள்விப்படும்போது, பதற்றப்பட வேண்டாம். இவை நிகழ வேண்டியவையே. ஆனால் முடிவு வர, இன்னும் காலம் இருக்கிறது. நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசிற்கெதிராய் அரசு எழும்பும். பல இடங்களில் பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் ஏற்படும். இவை எல்லாம் பிரசவ வேதனையின் ஆரம்பமே. “அப்பொழுது, நீங்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். நீங்கள் நீதிமன்றங்களில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். நீங்கள் ஜெப ஆலயங்களில் சவுக்கினால் அடிக்கப்படுவீர்கள். நீங்கள் என் நிமித்தம் ஆளுநர்களுக்கும், அரசர்களுக்கும் முன்பாக என் சாட்சிகளாய் நிற்பீர்கள். மேலும், எல்லா நாடுகளுக்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும். நீங்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் கொண்டுவரப்படும் போதெல்லாம், என்ன பேசவேண்டும் என்று முன்னதாகவே கவலைப்படாதிருங்கள். அந்த வேளையிலே, உங்கள் மனதில் என்ன கொடுக்கப்படுகின்றதோ, அதைச் சொல்லுங்கள். ஏனெனில் பேசுவது நீங்கள் அல்ல, உங்கள் மூலமாய் பரிசுத்த ஆவியானவரே பேசுகிறார். “சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராக எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள். என் நிமித்தமாக எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவுவரை பொறுமையாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான்.