அவர்கள் மற்றச் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமான மக்கள் சூழ்ந்திருப்பதையும், மோசேயின் சட்ட ஆசிரியர்கள் சீடர்களுடன் விவாதித்துக் கொண்டிருப்பதையும் கண்டார்கள். மக்கள் எல்லோரும் இயேசுவைக் கண்ட உடனே வியப்பு நிறைந்தவர்களாய், ஓடிப்போய் அவரை வாழ்த்தினார்கள்.
இயேசு அவர்களிடம், “நீங்கள் எதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன், “போதகரே, நான் என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அவனை ஒரு தீய ஆவி பிடித்திருப்பதால், அவன் பேசும் ஆற்றலை இழந்துவிட்டான். அது அவனைப் பிடிக்கும் போதெல்லாம், அவனைத் தரையில் வீழ்த்துகிறது. அவன் வாயில் நுரைதள்ளி, பல்லைக்கடித்து நெரிக்கிறான், அவனது உடல் விறைத்துப் போகிறது. நான் அந்தத் தீய ஆவியைத் துரத்தும்படி, உமது சீடர்களிடம் கேட்டேன்; ஆனால் அவர்களால் அதைத் துரத்த முடியவில்லை” என்றான்.
அப்பொழுது இயேசு, “விசுவாசமில்லாத தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? அந்தச் சிறுவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார்.
எனவே அவர்கள், அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அந்த தீய ஆவி இயேசுவைக் கண்டவுடனே, சிறுவனை வலிப்புறச் செய்து, அவனைக் கீழே வீழ்த்தியது. அவன் தரையில் விழுந்து புரண்டான். அவன் வாயிலிருந்து நுரை வந்தது.
இயேசு அந்தச் சிறுவனுடைய தகப்பனிடம், “இது எவ்வளவு காலமாக இப்படியிருக்கிறது?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “இவனுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே இப்படி இருக்கிறது” என்றான். “இந்த தீய ஆவி இவனைக் கொல்லும்படி நெருப்புக்குள்ளும், தண்ணீருக்குள்ளும் பலமுறை வீழ்த்தியிருக்கிறது. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால், எங்கள்மேல் இரக்கங்கொண்டு, எங்களுக்கு உதவிசெய்யும்” என்றான்.
அதற்கு இயேசு, “சாத்தியமா என்று கேட்கிறாயோ? விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியம்” என்றார்.
உடனே அந்தச் சிறுவனின் தகப்பன், “நான் விசுவாசிக்கிறேன்; ஆனால், என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவிசெய்யும்” என்றான்.
மக்கள் திரண்டு, அவ்விடத்திற்கு ஓடிவருவதை இயேசு கண்டார். அப்போது, அவர் அந்த அசுத்த ஆவியைப் பார்த்து, “செவிடும், ஊமையுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ; இனி ஒருபோதும் இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்றார்.
அந்தத் தீய ஆவி கூச்சலிட்டு, அவனை அதிகமாய் வலிப்புக்குள்ளாக்கி, அவனைவிட்டு வெளியே வந்தது. பலர் அவனைப் பார்த்து, “இவன் இறந்துவிட்டான்” என்று சொல்லுமளவிற்கு அவன் இறந்தவனைப்போல கிடந்தான். ஆனால் இயேசுவோ அவனது கையைப் பிடித்து, அவனைத் தூக்கி நிறுத்தினார். அவன் எழுந்து நின்றான்.
பின்பு இயேசு வீட்டிற்குள் போனபோது, அவருடைய சீடர்கள் தனியாக அவரிடம், “எங்களால் ஏன் அதைத் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள்.
அதற்கு இயேசு, “இவ்வகையான தீய ஆவி மன்றாட்டினாலும், உபவாசத்தினாலும் மட்டுமே வெளியேறும்” என்றார்.