மாற்கு 9:2-8
மாற்கு 9:2-8 TCV
ஆறு நாட்களுக்குபின் இயேசு தம்முடன் பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, உயரமான மலைக்கு ஏறிப்போனார். அங்கே அவர்கள் தனிமையாய் இருக்கையில், அவர்களுக்கு முன்பாக இயேசு மறுரூபமடைந்தார். அவருடைய உடைகள் மிகவும் பிரகாசமான வெண்மையாயிருந்தன. அவை இந்தப் பூமியிலுள்ள எவராலும், வெளுக்க முடியாத அளவுக்கு வெண்மையாயிருந்தன. அத்துடன் எலியாவும் மோசேயும் அவர்களுக்குமுன் தோன்றி, இயேசுவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். உடனே பேதுரு இயேசுவிடம், “போதகரே, நாம் இங்கே இருப்பது நல்லது. ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக, நாம் மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றான். அவர்கள் மிகவும் பயமடைந்திருந்தபடியால், என்ன சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. அப்பொழுது ஒரு மேகம் தோன்றி, அவர்களை மூடிக்கொண்டது. அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் கேட்டது: “இவர் என் மகன், நான் இவரில் அன்பாயிருக்கிறேன். இவர் கூறுவதைக் கேளுங்கள்.” திடீரென அவர்கள் சுற்றிப் பார்த்தபோது, இயேசுவைத் தவிர தங்களோடு வேறு எவரையும் அவர்கள் காணவில்லை.


