நீதிமொழி 11:1-16

நீதிமொழி 11:1-16 TCV

கள்ளத்தராசுகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் சரியான நிறையுள்ள படிக்கற்கள் அவருக்கு விருப்பம். அகந்தை வரும்பொழுது அவமானமும் வரும்; ஆனால் தாழ்மையுடனோ ஞானம் வரும். உத்தமமானவர்களுக்கு அவர்கள் நேர்மையே வழிகாட்டும்; ஆனால் துரோகிகளின் கொடூரம் அவர்களை அழிக்கிறது. நியாயத்தீர்ப்பின் நாளில் செல்வம் பயனற்றது; ஆனால் நீதி மரணத்தினின்று விடுவிக்கும். குற்றமற்றவர்களின் நீதி அவர்களுடைய வழியை நேராக்கும்; ஆனால் கொடியவர்களை அவர்களுடைய கொடுமையே அழிக்கும். நீதிமான்களின் நீதி அவர்களை விடுவிக்கும்; ஆனால் துரோகிகளோ தங்கள் தீய ஆசைகளில் அகப்படுவார்கள். கொடியவர்கள் சாகும்போது, அவர்களுடைய நம்பிக்கையும் அழியும்; அவர்கள் தங்கள் பலத்தினால் எதிர்பார்த்த யாவும் ஒன்றுமில்லாமல் போகும். நீதிமான்கள் கஷ்டத்திலிருந்து தப்புவிக்கப்படுகிறார்கள்; கொடியவர்கள் அதற்குப் பதிலாக கஷ்டப்படுவார்கள். இறைவனற்றவர்கள் தம் வார்த்தையினால் தமது அயலாரை அழிக்கிறார்கள்; ஆனால் நீதிமான்கள் அறிவினால் தப்பிக்கொள்கிறார்கள். நீதிமான்கள் செழிப்படையும்போது, பட்டணம் மகிழ்ச்சியடையும்; கொடியவர்கள் அழியும்போது, அங்கே மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு உண்டாகும். நீதிமான்களின் ஆசீர்வாதத்தால் பட்டணம் உயர்ந்தோங்கும்; ஆனால் கொடியவர்களின் வார்த்தையினாலோ அது அழிந்துபோகும். மதியீனர்கள் தங்களுக்கு அயலாரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் தங்கள் நாவை அடக்குகிறார்கள். புறங்கூறித் திரிகிறவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்; ஆனால் நம்பகமானவர்கள் இரகசியத்தைக் காத்துக்கொள்வார்கள். ஞானமுள்ள வழிகாட்டலின்றி ஒரு நாடு வீழ்ச்சியடைகிறது, ஆனால் அநேக ஆலோசகர்களால் வெற்றி நிச்சயமாகும். இன்னொருவருடைய கடனுக்கு வாக்குறுதி கொடுப்பவர் துன்பத்தை அனுபவிப்பார்கள்; ஆனால் உறுதியளிப்பதில் கைகளை உதறித் தள்ளுகிறவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இரக்ககுணமுடைய பெண் நன்மதிப்பு பெறுவாள்; ஆனால் உழைக்கும் மனிதர்களோ செல்வத்தை மட்டுமே சேர்ப்பார்கள்.