நீதிமொழி 11:17-31

நீதிமொழி 11:17-31 TCV

இரக்கமுள்ளவர்கள் தங்களுக்கு நன்மையை உண்டாக்குகிறார்கள்; ஆனால் கொடூரமானவர்கள் தங்களுக்குக் கேட்டை வருவித்துக் கொள்கிறார்கள். கொடியவர்கள் பெறும் கூலி ஏமாற்றமாய் முடியும்; ஆனால் நீதியை விதைப்பவர்கள் உண்மையான பலனை அறுவடை செய்வார்கள். உண்மையாகவே நீதிமான்கள் வாழ்வைப் பெறுவார்கள்; ஆனால் தீமையைப் பின்பற்றுபவர்கள் மரணத்தைக் காண்பார்கள். யெகோவா இருதயத்தில் வஞ்சகமுள்ளோரை அருவருக்கிறார்; ஆனால் குற்றமற்ற வழியில் நடப்போரில் அவர் மகிழ்ச்சியடைகிறார். இது நிச்சயம்: கொடியவர்கள் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள், ஆனால் நீதிமான்கள் விடுவிக்கப்படுவார்கள். புத்தியில்லாத பெண்ணின் அழகு பன்றியின் மூக்கிலுள்ள தங்க மூக்குத்தியைப் போன்றது. நீதிமான்களின் ஆசை நன்மையில் முடியும், ஆனால் கொடியவர்கள் நியாயத்தீர்ப்பை மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஒருவர் தாராளமாய்க் கொடுத்தும், இன்னும் அதிகமாய் பெற்றுக்கொள்கிறார்; இன்னொருவர் தேவைக்கதிகமாய் வைத்துக்கொண்டும் வறுமை அடைகிறார். தாராள குணம் உள்ளவர்கள் செழிப்படைவார்கள்; மற்றவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும். தானியத்தைத் தனக்கென்று பதுக்கிவைக்கும் மனிதரை மக்கள் சபிப்பார்கள்; ஆனால் அவற்றை விற்க மனதுடையவர்களை மக்கள் ஆசீர்வதிப்பார்கள். நன்மையைத் தேடுகிறவர்கள் தயவைப் பெறுவார்கள்; தீமையைத் தேடுகிறவர்களுக்கோ தீமையே வரும். தனது செல்வத்தை நம்பியிருக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள், ஆனால் நீதிமான்கள் பசுந்தளிரைப்போல் செழிப்பார்கள். தனது குடும்பத்திற்கு துன்பத்தைக் கொண்டுவருபவர்கள், வெறும் காற்றையே சுதந்தரிப்பார்கள்; மூடர்களோ ஞானிக்கு வேலைக்காரர்களாய் இருப்பார்கள். நீதிமான்களின் பலனோ வாழ்வுதரும் மரம், ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறவர்கள் ஞானமுள்ளவர்கள். நீதிமான்கள் தங்கள் வெகுமதியைப் பூமியில் பெறுவார்களானால், இறை பக்தியற்றவர்களும் பாவிகளும் தங்களுக்குரிய தண்டனையைப் பெறுவது எவ்வளவு நிச்சயம்!