நீதிமொழி 25:1-13

நீதிமொழி 25:1-13 TCV

யூதாவின் அரசனான எசேக்கியாவின் மனிதர்கள் தொகுத்த சாலொமோனின் நீதிமொழிகள்: காரியங்களை மறைப்பது இறைவனின் மகிமை; ஆராய்ந்து அறிவதோ அரசனுக்கு மகிமை. வானங்கள் உயரமாயும் பூமி ஆழமாயும் இருப்பதுபோல், அரசர்களின் இருதயங்களும் ஆராய்ந்து அறிய முடியாது. வெள்ளியிலிருந்து மாசை அகற்று, அப்பொழுது ஒரு கொல்லன் அதிலிருந்து ஒரு பாத்திரத்தை உருவாக்க முடியும்; அரசனின் முன்னிருந்து தீய அதிகாரிகளை அகற்று; அப்பொழுது நியாயத்தினால் அவனுடைய சிங்காசனம் நிலைநிறுத்தப்படும். அரசனின் முன்பாக உன்னை நீயே உயர்த்தாதே, பெரியோர்கள் மத்தியில் இடம்பிடிக்க முயற்சி செய்யாதே; அரசன் உன்னை பெரியோர்கள் முன்பாக சிறுமைப்படுத்துவதைவிட, “நீ மேலே, இங்கே வா” என்று உனக்கு சொல்வது மேலானது. நீ உன் கண்களாலே கண்டதைப் பற்றிச் சொல்ல, அவசரப்பட்டு நீதிமன்றத்திற்கு ஓடாதே; முடிவில் உன் அயலான் நீ சொல்வது பிழையென்று காட்டி உன்னை வெட்கப்படுத்தினால் நீ என்ன செய்வாய்? அயலானோடு உன் வழக்கை வாதிடும்போது, நீ இன்னொருவனின் இரகசியத்தை வெளிப்படுத்தாதே; அப்படிச் செய்தால் அதைக் கேட்கிறவன் உன்னை வெட்கப்படுத்துவான், உனக்கு உண்டாகும் கெட்ட பெயரும் உன்னைவிட்டு நீங்காது. ஏற்ற நேரத்தில் பேசப்படும் சரியான வார்த்தை, வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட தங்கப்பழங்களைப் போன்றது. ஞானமுள்ளவனின் கண்டனம் செவிகொடுத்துக் கேட்பவனுக்கு அது தங்கக் காதணியும் தரமான தங்க நகையும் போல இருக்கிறது. நம்பகமான தூதுவன் தன்னை அனுப்புகிறவர்களுக்கு அறுவடை நாளில் உறைபனிக் குளிர்ச்சிபோல் இருப்பான்; அவன் தன் எஜமானின் மனதைக் குளிரப்பண்ணுவான்.