சங்கீதம் 83:9-18

சங்கீதம் 83:9-18 TCV

இறைவனே, நீர் மீதியானியருக்குச் செய்தது போலவும், கீசோன் நதியருகே சிசெராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போலவும் அவர்களுக்கும் செய்யும். அவர்கள் எந்தோரில் அழிந்து நிலத்தின் குப்பைபோல் ஆனார்களே. அவர்களுடைய தலைவர்களை ஓரேபையும், சேபையும் போலாக்கும். அவர்களுடைய இளவரசர்கள் எல்லோரையும் சேபாவையும், சல்முனாவையும் போலாக்கும். “அவர்கள் இறைவனின் மேய்ச்சல் நிலங்களை எங்கள் உடைமையாக்குவோம்” என்று சொன்னார்களே. என் இறைவனே, அவர்களைக் காய்ந்த சருகைப் போலவும், காற்றில் பறக்கும் பதரைப்போலவும் ஆக்கும். காட்டை நெருப்பு எரித்து அழிப்பது போலவும், நெருப்புச் சுவாலை மலைகள் முழுவதையும் கொழுந்துவிட்டெரியச் செய்வதுபோலவும், அவர்களை உமது புயலினால் பின்தொடர்ந்து துரத்தும்; உமது சூறாவளியினால் திகிலடையச் செய்யும். யெகோவாவே, மனிதர்கள் உமது பெயரைத் தேடும்படி, அவர்களுடைய முகங்களை வெட்கத்தால் மூடும். அவர்கள் எப்பொழுதும் வெட்கமடைந்து, மனம்சோர்ந்து போவார்களாக; அவர்கள் அவமானத்தால் அழிவார்களாக. யெகோவா என்ற பெயருள்ள நீர் ஒருவரே, பூமியெங்கும் மகா உன்னதமானவர் என்பதை அவர்கள் அறிவார்களாக.