வெளிப்படுத்தல் 14:9-16

வெளிப்படுத்தல் 14:9-16 TCV

மூன்றாவது இறைத்தூதன் அவர்களைத் தொடர்ந்து வந்து, உரத்த குரலில் சொன்னதாவது: “யாராவது மிருகத்தையும், மிருகத்தின் உருவச்சிலையையும் வணங்கி, அதனுடைய அடையாளத்தைத் தனது நெற்றியிலோ அல்லது கையிலோ பெற்றுக்கொண்டால், அவனும் இறைவனுடைய கோபத்தின் மதுவைக் குடிப்பான்; அது அவருடைய கோபத்தின் கிண்ணத்தில், முழு வலிமையுடன் ஊற்றப்பட்டிருக்கிறது. அவன் பரிசுத்த இறைத்தூதருக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் எரிகின்ற கந்தகத்தினால் வரும் வேதனையை அனுபவிப்பான். அவர்களது வேதனையின் புகை என்றென்றுமாய் எழும்புகிறது. மிருகத்தையோ, அதனுடைய உருவச்சிலையையோ வணங்குகிறவர்களுக்கும், அதனுடைய பெயருக்குரிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்கிறவர்களுக்கும் இரவிலோ பகலிலோ இளைப்பாறுதல் இல்லை.” ஆகவே, இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, இயேசுவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கும் பரிசுத்தவான்கள், தங்கள் துன்புறுத்தல்களைப் பொறுமையோடு சகிப்பதற்கு, இது உற்சாகமூட்டட்டும். அப்பொழுது நான், பரலோகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்: “இதுமுதல், கர்த்தரில் விசுவாசிகளாகவே மரிக்கின்றவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றெழுது” என்று அது சொன்னது. அதற்கு பரிசுத்த ஆவியானவர், “ஆம், அவர்கள் தங்களுடைய உழைப்பிலிருந்தும், சோதனையிலிருந்தும் இளைப்பாறுவார்கள். ஏனெனில், அவர்களுடைய நற்செயல்களும் அவர்களுடனேயேகூடப் போகும்” என்றார். பின்பு நான் பார்த்தபொழுது, எனக்கு முன்பாக ஒரு வெள்ளை மேகத்தைக் கண்டேன். அந்த மேகத்தின்மேல் மானிடமகனைப் போல், ஒருவர் அமர்ந்திருந்தார். அவருடைய தலையின்மேல் ஒரு தங்கக்கிரீடமும், கையிலே ஒரு கூரிய அரிவாளும் இருந்தன. அப்பொழுது, இன்னொரு இறைத்தூதன் ஆலயத்தைவிட்டு வெளியே வந்து, மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவரை உரத்த குரலில் கூப்பிட்டு, “உம்முடைய அரிவாளை எடுத்து அறுவடை செய்யும். அறுவடைக்கான காலம் வந்துவிட்டது. ஏனெனில், பூமியின் அறுவடை முற்றிவிட்டது” என்றான். எனவே மேகங்களின்மேல் உட்கார்ந்திருந்தவர், தனது அரிவாளை பூமியின்மேல் நீட்டி அறுவடை செய்தார். அப்பொழுது பூமியின் விளைவு அறுவடை செய்யப்பட்டது.