முதலாவது பயங்கரம் கடந்துபோயிற்று; இன்னும் இரண்டு பயங்கரங்கள் வரவிருந்தன.
ஆறாவது இறைத்தூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது இறைவனுக்கு முன்பாக இருந்த தங்கப் பலிபீடத்தின் கொம்புகளிலிருந்து வந்த, ஒரு குரலைக் கேட்டேன். அது எக்காளத்தை வைத்திருந்த ஆறாவது தூதனிடம், “ஐபிராத்து என்ற பெரிய நதியருகே கட்டி வைக்கப்பட்டிருக்கிற, நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு” என்று சொன்னது. அப்பொழுது மனிதரில் மூன்றில் ஒரு பங்கினரைக் கொல்லும்படி, அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள். அவர்கள் இந்த வேளைக்கென்றும், இந்த நாளுக்கென்றும், இந்த மாதத்திற்கென்றும், இந்த ஆண்டுக்கென்றும், ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இருபது கோடியாயிருந்த குதிரைவீரர்களின் படையை வழிநடத்தினார்கள். அவைகளின் எண்ணிக்கை சொல்லப்படுவதை நான் கேட்டேன்.
நான் என்னுடைய தரிசனத்தில் குதிரைவீரர்களையும் குதிரைகளையும் இவ்வாறு கண்டேன்: அவர்களுடைய மார்புக்கவசங்கள் நெருப்பு நிறமாகவும், கருநீலமாகவும், கந்தகத்தைப் போன்ற மஞ்சள் நிறமாகவும் இருந்தன. அந்தக் குதிரைகளின் தலைகளோ, சிங்கங்களின் தலைகளைப்போல் காணப்பட்டன. அவைகளின் வாய்களிலிருந்து நெருப்பும், புகையும், கந்தகமும் வெளிவந்தன. அவைகளின் வாய்களிலிருந்து வந்த நெருப்பு, புகை, கந்தகம் ஆகிய மூன்று வாதைகளினாலும், மனிதரில் மூன்றில் ஒரு பங்கினர் கொல்லப்பட்டார்கள். அந்தக் குதிரைகளின் வல்லமை, அவைகளின் வாய்களிலும், அவைகளின் வால்களிலும் இருந்தது. அவைகளின் வால்களோ பாம்புகளைப்போல் இருந்தன, அவைகள் தங்கள் தலைகளால் காயத்தை ஏற்படுத்தின.
இந்த வாதைகளினால் கொல்லப்படாமல் மீதியாயிருந்தவர்களோ, தங்கள் செயல்களைவிட்டு இன்னும் மனந்திரும்பாமலேயே இருந்தார்கள்: அவர்கள் பிசாசுகளையும், தங்கம், வெள்ளி, வெண்கலம், கற்கள், மரத்தால் செய்யப்பட்ட மற்றும் பார்க்கவோ, கேட்கவோ, நடக்கவோ முடியாதவைகளை வணங்குவதையும் நிறுத்தவில்லை. அவர்கள் தங்களுடைய கொலைகளையோ, மந்திர வித்தைகளையோ, பாலியல் முறைகேடுகளையோ, களவுகளையோ, மற்ற எவைகளையும் விட்டு மனந்திரும்பவில்லை.