தீத்து 1:8-16

தீத்து 1:8-16 TCV

அவன் மற்றவர்களை உபசரிக்கிறவனாகவும், நன்மையை நேசிக்கிறவனாகவும், சுயக்கட்டுப்பாடு உடையவனாகவும், நீதிமானாகவும் இருக்கவேண்டும். அவன் பரிசுத்தமுள்ளவனாகவும், ஒழுக்கமுடையவனாகவும் இருக்கவேண்டும். தனக்குப் போதித்துக் கொடுக்கப்பட்ட நம்பத்தக்க இந்தச் செய்தியை அவன் உறுதியாய் நம்பியிருக்கவேண்டும். அப்பொழுதே அவன் ஆரோக்கியமான போதனையினால் மற்றவர்களை உற்சாகப்படுத்துவான். அதற்கு முரண்பாடாய் இருக்கிறவர்களையும் எதிர்த்துச் சரியானதை எடுத்துச்சொல்வான். ஏனெனில், அநேகர் சரியான போதனையை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் பயனற்றவைகளைப் பேசுகிறவர்களும், ஏமாற்றுகிறவர்களுமாய் இருக்கிறார்கள். விசேஷமாக விருத்தசேதனத்தை வலியுறுத்துகிறவர்கள் இப்படியானவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுடைய வாய்களை அடக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் போதிக்கக்கூடாத காரியங்களை போதித்து, முழுக் குடும்பங்களையும் பாழாக்குகிறார்கள். இழிவான விதத்தில் தாங்கள் ஆதாயம் பெறவே, இப்படிச் செய்கிறார்கள். அவர்களைச் சேர்ந்த ஒரு தீர்க்கதரிசியே அவர்களைக்குறித்து, “கிரேத்தா தீவைச் சேர்ந்தவர்கள் எப்பொழுதும் பொய் பேசுகிறார்கள். அவர்கள் கொடிய மிருகங்கள். சோம்பேறிகளான உணவுப்பிரியர்” என்று கூறியிருக்கிறான். இந்த சாட்சி உண்மையானதே. ஆகவே அவர்களைக் கடுமையாய் கடிந்துகொள். அப்பொழுதுதான் அவர்கள் விசுவாசத்தில் உறுதியுடையவர்களாய் இருந்து, யூதருடைய கட்டுக் கதைகளுக்கும், சத்தியத்தைப் புறக்கணிப்பவர்களின் கட்டளைகளுக்கும் செவிகொடாதிருப்பார்கள். தூய்மையானவர்களுக்கு எல்லாம் தூய்மையானதே. ஆனால் சீர்கெட்டுப் போனவர்களுக்கும், விசுவாசிக்காதவர்களுக்கும் எதுவுமே தூய்மையானதல்ல. உண்மையாகவே அவர்களுடைய புத்தியும் மனசாட்சியும் சீர்கெட்டிருக்கின்றன. அவர்கள் தாங்கள் இறைவனை அறிந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் அவர்களுடைய செயல்களினாலேயே, இறைவனை மறுதலிக்கிறார்கள். அவர்கள் அருவருப்புக்குரியவர்கள், கீழ்ப்படியாதவர்கள், நன்மையான எதையுமே செய்யத் தகுதியற்றவர்கள்.

தீத்து 1:8-16 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்