செப்பனியா 3:2-9

செப்பனியா 3:2-9 TCV

அவள் ஒருவருக்கும் கீழ்ப்படிய மாட்டாள், அவள் எந்த சீர்திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். அவள் யெகோவாவை நம்புவதில்லை, அவள் தனது இறைவனிடத்தில் நெருங்குவதுமில்லை. அவளுடைய அதிகாரிகள் கெர்ச்சிக்கும் சிங்கங்கள். அவளுடைய ஆளுநர்கள் மாலை நேரத்து ஓநாய்கள். காலைப்பொழுதிற்காக ஒன்றையும் விட்டுவைக்காத ஓநாய்கள். அவளுடைய இறைவாக்கினர் அகந்தை உடையவர்கள்; அவர்கள் துரோகிகள். அவளுடைய ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தை கறைப்படுத்தி, சட்டத்தை மீறுகிறார்கள். இன்னும் அவள் நடுவில் இருக்கும் யெகோவா நீதியுள்ளவர்; அவர் அநியாயம் செய்வதில்லை; அவர் காலைதோறும் தமது நீதியை வெளிப்படுத்துகிறார். அவர் ஒவ்வொரு புதிய நாளிலும் தவறாமல் அதை வெளிப்படுத்துகிறார், ஆயினும் நீதியற்றவர்கள் தங்கள் தீமையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்; அவர்கள் வெட்கத்தை அறியமாட்டார்கள். நான் நாடுகள் பலவற்றை முழுவதும் தண்டித்துப்போட்டேன்; அவர்களின் கோட்டைகள் அழிக்கப்பட்டுவிட்டன. நான் அவர்களின் வீதிகளில் யாரும் கடந்துபோகாதபடி, அவற்றை வெறிச்சோடப் பண்ணினேன். அவர்களுடைய பட்டணங்கள் அழிக்கப்பட்டன; ஒருவரும் மீந்திருக்கவில்லை. நடந்ததைச் சொல்வதற்குக்கூட ஒருவருமே இல்லை. எனவே நான் எருசலேம் பட்டணத்தைப் பார்த்து, “நிச்சயமாக நீ என்னில் பயமுள்ளவளாயிரு, என் சீர்திருத்தலை ஏற்றுக்கொள்!” என்று சொன்னேன். அப்போது அவளுடைய குடியிருப்பு அகற்றப்படுவதில்லை. என் தண்டனைகள் எல்லாம் அவள்மேல் வருவதில்லை என நான் எண்ணினேன். ஆனால் அவர்களோ தாங்கள் செய்த எல்லாத் தீமையான செயல்கள்மீதும், இன்னும் வாஞ்சையாயிருந்தார்கள். ஆகவே, “நான் எழுந்து குற்றஞ்சுமத்தும் நாள் வருமளவும் நீ எனக்காகக் காத்திரு” என்று யெகோவா அறிவிக்கிறார். நான் எல்லா நாடுகளையும் அரசுகளையும் ஒன்றுகூட்டி, என் கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவதற்குத் தீர்மானித்துள்ளேன். அப்பொழுது என் வைராக்கியமான கோபத்தின் நெருப்பினால் முழு உலகமும் சுட்டெரிக்கப்படும். நான் அவ்வேளையில் மக்கள் கூட்டங்களின் உதடுகளைத் தூய்மைப்படுத்துவேன். அவர்கள் யாவரும், யெகோவாவின் பெயரை வழிபட்டு, தோளுக்குத் தோள்கொடுத்து பணிசெய்வார்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த செப்பனியா 3:2-9