ராஜாக்களின் முதலாம் புத்தகம் 20

20
பெனாதாத்தும் ஆகாபும் போரிடல்
1பெனாதாத் ஆராமின் ராஜா. அவன் தனது படையைத் திரட்டி 32 ராஜாக்களோடும் குதிரைகளோடும் இரதங்களோடும் சமாரியாவைத் தாக்கி முற்றுகையிட்டான். 2அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபுக்குத் தூதுவர்களை அனுப்பினான். அவனுடைய செய்தி கீழ்க்கண்டவாறு இருந்தது. 3“உனது வெள்ளியையும் பொன்னையும் எனக்குக் கொடுக்கவேண்டும். உனது தேர்ந்தெடுக்கப்பட்ட மனைவியரையும் குழந்தைகளையும் எனக்குக் கொடுக்கவேண்டும்.”
4இஸ்ரவேலரின் ராஜாவோ, “என் எஜமானனாகிய ராஜாவே, இப்போது நான் உமக்குரியவன் என்னைச் சார்ந்த அனைத்தும் உமக்கு உரியது ஆகும்” என்றான்.
5மீண்டும் தூதுவர்கள் ஆகாபிடம் வந்தனர். “நாங்கள் ராஜாவிடம் நீங்கள் சொன்னவற்றைக் கூறினோம். பெனாதாத், ‘ஏற்கெனவே உங்கள் வெள்ளி, பொன், மனைவி ஜனங்கள் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும் என்று கூறியிருந்தேன். 6நாளை என் ஆட்களை அனுப்புவேன். அவர்கள் உங்கள் வீடுகளுக்கும் அதிகாரிகளின் வீடுகளுக்கும் வருவார்கள். உங்களது மதிப்பிற்குரிய பொருட்களைக் கொடுத்துவிட வேண்டும்’ என்றான்” என்றனர்.
7எனவே ஆகாப் தன் நாட்டிலுள்ள மூப்பர்களை அழைத்து ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் போட்டான். அவன், “பாருங்கள், பெனாதாத் தொல்லை தர வந்துள்ளான். முதலில் அவன் எனது வெள்ளி, பொன், மனைவி, ஜனங்கள் அனைத்தையும் கேட்டான். நான் அவற்றைக் கொடுக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்போது அவன் எல்லாவற்றையும் விரும்புகிறான். நாம் என்ன செய்யலாம்” என ஆலோசித்தான்.
8ஆனால் மூப்பர்களும் மற்றவர்களும், “அவனுக்குக் கீழ்ப்படிந்து அவன் சொன்னபடி செய்ய வேண்டாம்” என்றனர்.
9எனவே ஆகாப் பெனாதாத்துக்குத் தூதுவனை அனுப்பி, “நான் உனது முதல் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன். ஆனால் இரண்டாவது கட்டளைக்குக் கீழ்ப்படியமாட்டேன்” என்றான்.
பெனாதாத் செய்தியை அறிந்துக்கொண்டான். 10அவனது ஒரு தூதுவனை அனுப்பி, “நான் சமாரியா முழுவதையும் அழிக்கப்போகிறேன். நகரத்தில் எதுவும் மீதியாகாது. எனது ஆட்கள் எடுத்துக்கொள்ள எதுவும் இருக்காது! இவ்வாறு நான் செய்யாவிட்டால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்!” என்றான்.
11அதற்கு ஆகாப், “பெனாதாத்திடம் சொல். ஆயுதம் அணிந்திருப்பவன் ஆயுதத்தை உரிந்து போடுபவனைப் போன்று பெருமைபடக்கூடாது” என்று சொல்லி அனுப்பினான்.
12கூடாரத்தில் பெனாதாத் மற்றவர்களோடு குடித்துக்கொண்டிருந்தான். அப்போது தூதுவர்கள் ஆகாபின் செய்தியைச் சொல்ல, சமாரியாவைத் தாக்கும்படி ஆணையிட்டான். படைகளும் நகர்ந்தன.
13அப்போது, ஆகாபிடம் ஒரு தீர்க்கதரிசி வந்து, “ராஜாவே, அந்த பெரும்படையைப் பார். நானே கர்த்தர், என்று நீ அறியும்படி நான் அப்படையை உன் மூலம் தோற்கடிப்பேன்” என்று கர்த்தர் கூறுகிறார்.
14அதற்கு ஆகாப், “யார் மூலம்?” என்று கேட்டான்.
அதற்கு அத்தீர்க்கதரிசி, “அரசாங்க அதிகாரிகளின் ‘இளம் உதவியாளர்கள் மூலம்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான்.
மேலும் ராஜா, “போரை யார் துவக்க வேண்டும்?” என்று கேட்க,
தீர்க்கதரிசி, “நீ தான்” என்று பதில் சொன்னான்.
15எனவே ஆகாப் அரசாங்க அதிகாரிகளின் இளம் உதவியாளர்களில் 232 பேரைச் சேர்த்தான். இதனோடு இஸ்ரவேல் படையின் எண்ணிக்கை 7,000 ஆயிற்று.
16நடுமத்தியான வேளையில் ராஜாவாகிய பெனாதாத்தும் அவனது உதவிக்கு வந்த 32 ராஜாக்களும் குடித்துக்கொண்டு தம் கூடாரத்தில் மயங்கிக்கிடந்தார்கள். அப்போது, ஆகாப் அவர்களைத் தாக்கினான். 17முதலில் இளம் உதவியாளர்கள் தாக்கினர். பெனாதாத்தின் ஆட்கள் ராஜாவிடம் சென்று இவர்கள் சமாரியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். 18அதற்கு அவன், “அவர்கள் போரிட வந்திருக்கலாம். அல்லது சமாதானத்திற்கு வந்திருக்கலாம் அவர்களை உயிரோடு பிடியுங்கள்” என்றான்.
19ஆகாபின் இளைஞர்கள் தீவிரமாகத் தாக்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து இஸ்ரவேலின் படை சென்றது. 20எதிரே வருபவர்களைக் கொன்றனர். சீரியாவிலிருந்து வந்தவர்கள் ஓட ஆரம்பித்தனர். இஸ்ரவேல் படை அவர்களை விரட்டியது. பெனாதாத் இரதத்தில் ஏறி தப்பித்து ஓடினான். 21ஆகாப் ராஜா படையோடு போய் சீரியா நாட்டு குதிரைகளையும் இரதங்களையும் கைப்பற்றிக் கொண்டான். சீரியாவின் படையின் மீது ஆகாப் பெருவெற்றியை பெற்றான்.
22பிறகு தீர்க்கதரிசி, ஆகாபிடம் போய், “சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் மீண்டும், அடுத்த ஆண்டு போரிட வருவான். எனவே உங்கள் படையைப் பலப்படுத்துங்கள். அவனிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ள கவனமாக திட்டங்களைச் செய்யுங்கள்” என்றான்.
பெனாதாத் மீண்டும் தாக்கினான்
23பெனாதாத்தின் அதிகாரிகள், “இஸ்ரவேலின் தெய்வங்கள் மலைத் தெய்வங்களாக உள்ளனர். அதனால் வென்றுவிட்டனர். எனவே நாம் சமவெளியில் போர்செய்யவேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும்! 24இனிமேல் செய்ய வேண்டியது இதுதான். 32 ராஜாக்களும் கட்டளையிடும்படி அனுமதிக்காதே. ஒவ்வொரு தளபதியும் தம் படைகளை நடத்தட்டும். 25இப்போது நீ அழிக்கப்பட்ட ஒரு படையை கூட்ட வேண்டும். இரதங்களையும் குதிரைகளையும் சேர்க்க வேண்டும். சமவெளியில் சண்டையிட வேண்டும். பிறகு வெல்வோம்” என்றனர். அவர்கள் சொன்னபடியே பெனாதாத்தும் செய்தான்.
26அடுத்த ஆண்டில், அவன் ஆப்பெக்குக்கு இஸ்ரவேலரோடு சண்டையிடச் சென்றான்.
27இஸ்ரவேலரும் போருக்குத் தயாராக இருந்தனர். அவர்கள் சீரியாவுக்கு எதிராக முகாம்கள் அமைத்தனர். சீரியா படையோடு ஒப்பிடும்போது, இவர்கள் படை சிறிய ஆட்டு மந்தையைப்போல் இருந்தனர். ஆனால் சீரியா, வீரர்கள் முழு பகுதியையும் சூழ்ந்தனர்.
28இஸ்ரவேல் ராஜாவிடம் தேவமனிதன் ஒருவன் கீழ்க்கண்ட செய்திகளோடு வந்தான். கர்த்தர் சொன்னார், “‘கர்த்தராகிய நான் மலைகளின் தேவன் என்று ஆராமியர் சொன்னார்கள். சமவெளிப் பிரதேசங்களுக்கு நான் தேவன் அல்ல’ என்று அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே இந்த பெரும் படையைத் தோற்கடிக்க உன்னை அனுமதிக்கிறேன். பிறகு நீங்கள் அனைவரும் எல்லா இடங்களுக்கும் நானே கர்த்தர் என்பதை உணர்வீர்கள்.”
29படைகள் ஒன்றுக்கொன்று எதிராக ஏழு நாட்கள் முகாமிட்டிருந்தன. ஏழாவது நாள் போர் தொடங்கியது, ஒரே நாளில் 1,00,000 பேரை இஸ்ரவேலர்கள் கொன்றனர். 30பிழைத்தவர்கள் ஆப்பெக் நகருக்குள் ஓடிப் போனார்கள். மீதியுள்ள 27,000 பேர் மீது சுவரிடிந்து விழுந்தது. பெனாதாத்தும் ஓடிப்போனான். ஒரு அறைக்குள் ஒளிந்துக்கொண்டான். 31அவனிடம் அவனது வேலைக்காரர்கள், “இஸ்ரவேல் மன்னர்கள் இரக்கமுள்ளவர்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நாங்கள் இரட்டுகளை இடுப்பிலும் கயிறுகளைத் தலையிலும் கட்டி அவர்களிடம் போய் கெஞ்சினால் உம்மை உயிரோடுவிடுவர்” என்றனர்.
32பின் அவ்வாறே போய் இஸ்ரவேல் ராஜாவை சந்தித்தனர். “உங்கள் அடிமையான பெனாதாத் ‘எங்களை உயிரோடு விடுங்கள்’ என்று வேண்டுகிறார்” என்றனர்.
அதற்கு ஆகாப், “அவன் இன்னும் உயிரோடு இருக்கிறானா? அவன் என் சகோதரன்” என்றான். 33அவர்கள், பெனாதாத்தைக் கொல்லாமல் இருக்க வாக்குறுதிகளைக் கேட்டனர். ஆகாப் பெனாதாத்தைச் சகோதரன் என அழைத்ததும் அவனது ஆலோசகர்களும், “ஆமாம், அவன் உன் சகோதரன்” என்றனர்.
ஆகாப், “என்னிடம் அவனைக் கொண்டு வா” என்றான். எனவே பெனாதாத் ராஜாவிடம் வந்தான். ஆகாப் ராஜா அவனிடம், அவனோடு இரதத்தில் ஏறுமாறு சொன்னான்.
34பெனாதாத்தோ, “ஆகாப், என் தந்தை எடுத்துக்கொண்ட உங்கள் நகரங்களைத் திரும்பத்தருவேன். நீங்கள் தமஸ்குவிலே, கடை வீதிகளை என் தந்தை சமாரியாவில் செய்ததுபோன்று வைத்துக்கொள்ளலாம்” என்றான்.
ஆகாபோ, “இதற்கு நீ அனுமதித்தால், நான் உன்னை விட்டுவிடுவேன்” என்றான். இவ்வாறு இருவரும் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். பெனாதாத் விடுதலை பெற்றான்.
ஆகாபுக்கு எதிராகத் தீர்க்கதரிசி பேசியது
35ஒரு தீர்க்கதரிசி இன்னொருவனிடம், “என்னைத் தாக்கு!” என்றான். ஏனென்றால் கர்த்தருடைய கட்டளை என்றான். அவனோ தாக்கவில்லை. 36அதற்கு அவன், “நீ கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே உன்னை ஒரு சிங்கம் கொல்லும்” என்றான். அவ்வாறே அவன் அந்த இடத்தை விட்டுப்போனதும் சிங்கம் அவனைக் கொன்றது.
37அந்த தீர்க்கதரிசி இன்னொருவனிடம் போய், “என்னைத் தாக்கு” என்றான்.
அதற்கு அவன் தாக்கி காயப்படுத்தினான். 38எனவே, அந்த தீர்க்கதரிசி தன் முகத்திலே சாம்பலைப்போட்டு வேஷம்மாறி ராஜாவுக்காக வழியில் காத்திருந்தான். 39ராஜா வந்ததும் அவனிடம், “நான் போரிட சென்றேன். நம்மில் ஒரு மனிதன் பகை வீரனை அழைத்து வந்தான். அவன், ‘இந்த மனிதனைப் பாதுகாப்பாக வைத்திரு. இவன் தப்பினால் இவனுக்காக உன் உயிரைக் கொடுக்கவேண்டும் அல்லது அபராதமாக 75 பவுண்டுகளைத் தரவேண்டும்’ என்றான். 40நான் வேறு வேலைகளில் இருந்தபோது அவன் தப்பித்துவிட்டான்” என முறையிட்டான்.
அதற்கு இஸ்ரவேல் ராஜா, “நீ ஒரு வீரனை தப்பவிட்டதற்கான குற்றவாளி ஆகிறாய். எனவே அவன் சொன்னபடிசெய்” என்றான்.
41பிறகு அவன் தன் முகத்தில் உள்ள துணியை விலக்கவே, ராஜாவுக்கு அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்பது தெரிந்தது. 42தீர்க்கதரிசி ராஜாவிடம், “கர்த்தர் உம்மிடம், ‘நான் உன்னிடம், மரிக்க வேண்டும் என்று சொன்னவனை விடுதலைச் செய்தாய். எனவே நீ அவனது இடத்தை அடுத்து நீ மரிப்பாய்! உனது ஜனங்கள் அவர்களின் பகைவர்களது இடத்தை எடுப்பார்கள். உன் ஜனங்களும் மரிப்பார்கள்!’ என்று சொல்லச்சொன்னார்” என்றான்.
43இதனால் சலிப்பும் துக்கமும் அடைந்து ராஜா சமாரியாவிற்கு திரும்பினான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 20: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்