சாமுவேலின் முதலாம் புத்தகம் 25:36-44

சாமுவேலின் முதலாம் புத்தகம் 25:36-44 TAERV

அபிகாயில் நாபாலிடம் திரும்பிப் போனாள். அவன் தன் வீட்டில் ஒரு ராஜாவைப் போன்று உணவு உண்டு கொண்டிருந்தான். நன்றாக குடித்து போதையில் சுகபோகமாக இருந்தான். எனவே அபிகாயில் விடியும்வரை அவனிடம் எதுவும் சொல்லவில்லை. மறுநாள் காலையில் நாபால் போதை தெளிந்தபோது, அவனது மனைவி அவனிடம் நடந்ததைக் கூறினாள். அவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அவனது உடல் பாறையாக இறுகியது! பத்து நாட்களில் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார். நாபால் மரித்துப்போனதை தாவீது கேள்விப்பட்டு, “கர்த்தரைப் போற்றுங்கள்! நாபால் என்னைப் பற்றி அவதூறு சொன்னான். கர்த்தர் எனக்கு உதவினார். நான் தீமை செய்யாதபடி கர்த்தர் என்னை விலக்கினார். நாபால் கேடு செய்ததால் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்” என்றான். பிறகு தாவீது அபிகாயிலிடம் தனது மனைவியாகுமாறு செய்தி அனுப்பினான். தாவீதின் ஆட்கள் கர்மேலுக்குச் சென்று அபிகாயிலிடம், “உங்களை அழைத்துவர தாவீது எங்களை அனுப்பினார். நீங்கள் அவரது மனைவியாக வேண்டுமென்று விரும்புகிறார்” என்றார்கள். அபிகாயில் தன் முகம் தரையில் படும்படி வணங்கி, “நான் உங்கள் வேலைக்காரி. உங்களுக்கு சேவைசெய்ய தயார். எனது எஜமானனாகிய தாவீதின் வேலைக்காரரின் பாதங்களையும் கழுவ ஆயத்தமாக இருக்கிறேன்” என்றாள். அவள் உடனே ஒரு கழுதையின் மீது ஏறித் தாவீதின் ஆட்களுடன் புறப்பட்டாள். அவள் தன்னோடு 5 பணிப்பெண்களையும் அழைத்து வந்து, தாவீதின் மனைவி ஆனாள். யெஸ்ரயேல் ஊரினவளாகிய அகினோவாளையும் தாவீது மணம் செய்துகொண்டான். அகினோவாளும், அபிகாயிலும், தாவீதின் மனைவிகள். தாவீது ஏற்கெனவே சவுலின் குமாரத்தியான மீகாளையும் மணந்திருந்தான். ஆனால் சவுல் அவளை எடுத்து கல்லீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்கு மணமுடித்து கொடுத்து விட்டிருந்தான்.