ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 22:11-20

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 22:11-20 TAERV

அச் சட்ட புத்தகத்திலுள்ள வார்த்தைகளைக் கேட்டதும் (துக்கத்தின் மிகுதியால்) ராஜா தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். பிறகு ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனான அகீக்காமுக்கும், மிகாயாவின் குமாரனான அக்போருக்கும் செயலாளரான சாப்பானுக்கும் ராஜாவின் வேலைக்காரனான அசாயாவுக்கும் ராஜா ஆணைகள் இட்டான். ராஜா இவர்களிடம், “சென்று நாம் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தரிடம் கேளுங்கள். எனக்காகக், கர்த்தரிடம் இந்த ஜனங்களுக்காகவும் யூத நாட்டிற்காகவும் கேளுங்கள். இப்புத்தகத்தில் காணப்படும் வார்த்தைகளைப்பற்றி கேளுங்கள். கர்த்தர் நம்மீது கோபமாக இருக்கிறார். ஏனென்றால் நமது முற்பிதாக்கள் இப்புத்தகத்தில் கூறியுள்ளவற்றை கவனிக்காமல் போனார்கள். நமக்காக எழுதப்பட்ட இதன்படி அவர்கள் செய்யவில்லை!” என்றான். எனவே இல்க்கியா எனும் ஆசாரியனும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும் அசாயாவும், பெண் தீர்க்கதரிசி உல்தாவிடம் சென்றனர். அவள் அர்காசின் குமாரனான திக்வாவின் குமாரனான சல்லூம் என்பவனின் மனைவி. அவன் ஆசாரியர்களின் துணிகளுக்குப் பொறுப்பானவன். அவள் எருசலேமின் இரண்டாம் பகுதியில் குடியிருந்தாள். அவர்கள் போய் அவளோடு பேசினார்கள். பிறகு உல்தாள் அவர்களிடம், “என்னிடம் உங்களை அனுப்பியவனிடம் போய், இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறதாவது: ‘இந்த இடத்திற்குத் துன்பத்தைக் கொண்டு வருவேன். இங்குள்ள ஜனங்களுக்கும் துன்பத்தைக் கொண்டு வருவேன். யூத ராஜாவால் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள துன்பங்கள் இவையே. யூத ஜனங்கள் என்னை விட்டுவிட்டு அந்நியத் தெய்வங்களுக்கு நறுமணப்பொருட்களை எரிக்கின்றனர். அவர்கள் எனக்கு மிகுதியான கோபத்தை உண்டாக்குகிறார்கள். அவர்கள் ஏராளமான விக்கிரகங்களை ஏற்படுத்தியுள்ளனர். அதனால்தான் நான் இவர்களுக்கு எதிராக என் கோபத்தைக் காட்டுகிறேன். என் கோபம் தடுக்க முடியாத நெருப்பைப் போன்று விளங்கும்!’ “யூதாவின் ராஜாவாகிய யோசியா, உங்களை அனுப்பி கர்த்தருடைய ஆலோசனைகளைக் கேட்கிறான். அவனிடம் இவற்றைக் கூறுங்கள்: ‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நீங்கள் கேள்விப்பட்ட செய்திகளைக் கூறுகிறார். இந்த நாட்டைப் பற்றியும், இங்கு வசிப்பவர்களைப்பற்றியும் நான் சொன்னதை நீங்கள் கேட்டீர்கள். உங்கள் இதயம் மென்மையாக ஆயிற்று. எனவே, அதைக் கேட்டதும் நீங்கள் மிகவும் வருத்தம் கொண்டீர்கள். இந்த இடத்தில் (எருசலேமில்) பயங்கரமான சம்பவங்கள் நடக்கப்போகின்றன என்று சொல்லி இருக்கிறேன். உன் துக்கத்தைப் புலப்படுத்த உன் ஆடையைக் கிழித்துக்கொண்டு அழத்தொடங்கினாய். அதற்காகத் தான் நீ சொன்னதைக் கேட்டேன்.’ கர்த்தர் இதைச் சொன்னார். ‘எனவே, இப்போது உன்னை உனது முற்பிதாக்களிடம் சேர்ப்பேன். நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்வாய், நான் எருசலேமிற்குத் தரப்போகும் துன்பங்கள் எல்லாவற்றையும் உன் கண்கள் பார்க்காது’ என்று சொல்லுங்கள்” என்றாள். பிறகு இதனை ராஜாவிடம் போய் ஆசாரியனாகிய இல்க்கியா, அகீக்கா, அக்போர், சாப்பான், அசாயா ஆகியோர் சொன்னார்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 22:11-20