தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:1-13

தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:1-13 TAERV

தீமோத்தேயுவே, நீ என் குமாரனைப் போன்றவன். இயேசு கிறிஸ்துவிற்குள் நாம் கொண்டுள்ள கிருபையில் உறுதியாக இரு. நீ கேட்ட என் போதனைகள் மற்றவர்களுக்கும் கூட போதிக்கப்பட வேண்டும். நீ விசுவாசம் வைத்திருக்கிற மக்களிடம் எல்லாம் அதனைப் போதிப்பாயாக. பிறகு அவர்களாலும் அவற்றை ஏனைய மக்களுக்குப் போதிக்க முடியும். நாம் அனுபவிக்க நேரும் துன்பங்களைப் பகிர்ந்துகொள்வோம். அவற்றை ஒரு உண்மையான போர் வீரனைப்போன்று ஏற்றுக்கொள்வோம். போர் வீரனாயிருக்கும் ஒருவன் எப்பொழுதும் தனது மேலதிகாரியைத் திருப்திப்படுத்தவே விரும்புவான். எனவே அவன் மற்றவர்களைப் போன்று தன் பொழுதை வேறுவகையில் போக்கமாட்டான். விதிமுறைகளின்படி போட்டியிடாமல் எந்த விளையாட்டு வீரனாலும் வெற்றிக் கிரீடத்தை அடைய முடியாது. பாடுபட்டு விளைய வைக்கிற விவசாயியே, விளைச்சலின் முதல் பகுதி உணவை உண்பதற்குத் தகுதியானவன். நான் சொல்லிக்கொண்டிருக்கிற விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார். இவை பற்றிய முழுமையான அறிவை கர்த்தர் உனக்குத் தருவார். இயேசு கிறிஸ்துவை ஞாபகப்படுத்திக்கொள். அவர் தாவீதின் குடும்பத்திலிருந்து வந்தவர். இறந்த பிறகு அவர் மரணத்திலிருந்து எழுந்தார். இதுதான் நான் சொல்லும் நற்செய்தி. நான் இதனைச் சொல்வதால் பலவித துன்பங்களுக்கு உட்படுகிறேன். நான் ஒரு குற்றவாளியைப் போல் சங்கிலிகளால் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கிறேன். ஆனால் தேவனுடைய போதனைகள் கட்டப்படவில்லை. ஆகையால் நான் பொறுமையோடு அனைத்துத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். தேவனால் தேர்ந்தெடுக்கபட்ட அனைவருக்கும் உதவும் பொருட்டே நான் இதனைச் செய்தேன். இதனால் மக்கள் இயேசு கிறிஸ்துவில் இரட்சிப்பைப் பெறுவார்கள். அதனால் முடிவற்ற மகிமையைப் பெறுவர். இந்தப் போதனை உண்மையானது: நாம் இயேசுவோடு மரணமடைந்திருந்தால் பிறகு நாமும் அவரோடு வாழ்வோம். நாம் துன்பங்களை ஏற்றுக்கொண்டால் பிறகு அவரோடு ஆட்சியும் செய்வோம். நாம் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தால் பிறகு அவரும் நம்மை ஏற்க மறுப்பார். நாம் உண்மையுள்ளவராக இல்லாதிருந்தாலும் அவர் தொடர்ந்து உண்மைக்குரியவராக இருப்பார். ஏனென்றால் அவர் தனக்குத்தானே உண்மையற்றவராக இருக்க முடியாது.