தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:14-26

தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:14-26 TAERV

மக்களிடம் இவற்றைத் தொடர்ந்து சொல்லுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாதபடி தேவனுக்கு முன்பு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள். அது எவருக்கும் உதவாது. அதைக் கவனிப்பவர்களையும் அழித்து விடும். தேவன் உங்களை ஏற்றுக்கொள்கிறவகையில் அவரிடம் உங்களை ஒப்படைக்க உங்களால் முடிந்த நல்லதைச் செய்யுங்கள். தன் வேலையைப்பற்றி வெட்கப்படாத வேலையாளாக இருங்கள். கிறிஸ்துவின் உண்மையான போதனைகளைச் சரியான வழியில் போதியுங்கள். தேவனிடமிருந்து பெறப்படாத, பயன் இல்லாத காரியங்களைப் பேசுவோரிடமிருந்து விலகி இருங்கள். அவ்வகை பேச்சுகள் ஒருவனை மேலும் தேவனுக்கு எதிராக்கும். அவர்களின் தீய போதனைகள் சரீரத்துக்குள் நோய் பரவுவது போன்று பரவும். இமெநேயுவும், பிலேத்துவும் இத்தகையவர்ளே. அவர்களின் போதனைகள் உண்மையிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன. மரணத்திலிருந்து எழுங்காலம் ஏற்கெனவே நடந்து முடிந்துபோனது என்று அவர்கள் போதிக்கிறார்கள். அந்த இருவரும் சில மனிதர்களின் விசுவாசத்தை அழித்துவிட்டார்கள். ஆனால் தேவனின் பலமான அஸ்திபாரம் அப்படியே தொடர்ந்து உள்ளது. அஸ்திபாரத்தின்மீது, “கர்த்தருக்குத் தன்னைச் சேர்ந்தவர்கள் எவரென்று தெரியும்.” “கர்த்தரில் விசுவாசம் கொள்கிற ஒவ்வொருவரும் தவறு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்னும் வாசகம் எழுதப்பட்டுள்ளது. ஒரு பெரிய வீட்டில் பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட பொருட்கள் உள்ளன. அதோடு மரத்தாலும், மண்ணாலும் செய்யப்பட்ட பொருட்களும் உள்ளன. சில பொருட்கள் சில விசேஷ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மற்றவை பிற காரியங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு உள்ளன. எவனொருவன் தீய காரியங்களில் ஈடுபடாமல் விலகி தன்னைத் தானே சுத்தமாக வைத்துக்கொள்கிறானோ அவன் சிறப்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு எஜமானுக்குப் பயன்படுபவனாக இருப்பான். அவன் எவ்வித நற்பணி செய்யவும் தயாராக இருப்பான். ஓர் இளைஞன் செய்ய விரும்புகிற தீய செயல்களில் இருந்து விலகி இருங்கள். சரியான வழியில் வாழவும், விசுவாசம், அன்பு, சமாதனம் ஆகியவற்றைப் பெறவும் கடுமையாக முயற்சியுங்கள். இவற்றை நீங்கள் சுத்தமான இதயம் உள்ளவர்களோடும் கர்த்தரிடம் நம்பிக்கை உள்ளவர்களோடும் சேர்ந்து செய்யுங்கள். முட்டாள்தனமான அறிவற்ற விவாதங்களில் இருந்தும் விலகி நில்லுங்கள். இப்படிப்பட்ட விவாதங்கள் வளர்ந்து பெரிதாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். கர்த்தருடைய ஊழியன் சண்டைக்காரனாக இருக்கக் கூடாது. அவன் எல்லோரிடமும் இரக்கத்துடன் இருத்தல் வேண்டும். அவன் நல்ல போதகனாகவும் இருக்க வேண்டும். அவன் பொறுமையுள்ளவனாக இருக்க வேண்டும். தன் போதனையை எதிர்க்கிறவர்களோடு கர்த்தரின் ஊழியன் மென்மையாகப் பேச வேண்டும். அவர்களும் உண்மையை ஒப்புக்கொள்ளும் வகையில் தேவன் அவர்களின் மனத்தையும் மாற்றுவார். பிசாசானவன் இத்தகைய மக்களை வலை போட்டுப்பிடித்து தன் விருப்பப்படி செயல்பட வைப்பான். எனினும் அவர்கள் விழித்தெழுந்து, பிசாசு தன்னைப் பயன்படுத்துவதை அறிந்து, தம்மைப் பிசாசின் வலைக்குள் இருந்து விடுவித்துக்கொள்வர்.

தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:14-26 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்