அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1-9

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1-9 TAERV

சவுல் கர்த்தரின் சீஷரைப் பயமுறுத்தவும், கொல்லவும் எப்பொழுதும் முயன்று கொண்டிருந்தான். எனவே அவன் தலைமை ஆசாரியனிடம் சென்றான். தமஸ்கு நகரத்தில் ஜெப ஆலயங்களிலுள்ள யூதர்களுக்குக் கடிதங்களை எழுதுமாறு அவரைக் கேட்டான். தமஸ்குவில் கிறிஸ்துவின் வழியைப் பின்பற்றுகிற சீஷர்களைக் கண்டுபிடிக்கும் அதிகாரத்தை அவனுக்குக் கொடுக்குமாறு தலைமை ஆசாரியரைக் கேட்டான். அங்கு ஆணோ, பெண்ணோ, விசுவாசிகள் எவரையேனும் கண்டால் அவன் அவர்களைக் கைதுசெய்து எருசலேமிற்குக் கொண்டு வர விரும்பினான். எனவே சவுல் தமஸ்குவிற்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நகரத்திற்கு அருகே வந்தபோது, அவனைச் சுற்றிலும் மிகுந்த பிரகாசமான ஒளி வானிலிருந்து திடீரென வெளிச்சமிட்டது. சவுல் தரையில் விழுந்தான். அவன் தன்னோடு பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். “சவுலே, சவுலே! நீ ஏன் புண்படுத்தும் காரியங்களை எனக்குச் செய்துகொண்டிருக்கிறாய்?” என்றது அச்சத்தம். சவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான். அந்தச் சத்தம் பதிலாக, “நான் இயேசு, நீ புண்படுத்த நினைப்பது என்னையே. நீ எழுந்து நகரத்துக்குள் போ. அங்கிருக்கும் ஒருவர் நீ செய்ய வேண்டியதை உனக்குக் கூறுவார்” என்றது. சவுலோடு பயணம் செய்த மனிதர் நின்றனர். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அம்மனிதர் சத்தத்தைக் கேட்டனர். ஆனால் யாரையும் பார்க்கவில்லை. சவுல் தரையிலிருந்து எழுந்தான். அவன் கண்களைத் திறந்தபோது அவனால் பார்க்க முடிய வில்லை. எனவே சவுலோடு வந்த மனிதர்கள் அவன் கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றனர். மூன்று நாட்கள் சவுலால் பார்க்க முடியவில்லை. அவன் எதையும் உண்ணவோ, எதையும் பருகவோ இல்லை.