தானியேலின் புத்தகம் 11:37-45

தானியேலின் புத்தகம் 11:37-45 TAERV

“அந்த வடபகுதி ராஜா தனது பிதாக்கள் தொழுத தெய்வங்களைப்பற்றி கவலைப்படமாட்டான். அவன் பெண்களால் தொழுகை செய்யப்படும் விக்கிரகங்களைப் பற்றியும் கவலைப்படமாட்டான். அவன் எந்த தேவனைப்பற்றியும் கவலைப்படமாட்டான். அதற்குப் பதில் அவன் தன்னைத் தானே புகழுவான். அவன் மற்ற தெய்வங்களைவிடத் தன்னையே முக்கியமானவனாக ஆக்கிக்கொள்வான். வடபகுதி ராஜா எந்தத் தேவனையும் தொழுதுகொள்ளமாட்டான். ஆனால் அவன் அதிகாரத்தைத் தொழுதுகொள்வான். அதிகாரமும் வல்லமையுமே அவனது தெய்வங்கள். அவன் பிதாக்கள் தன்னைப் போல் வல்லமையை நேசிக்கவில்லை. அவன் அதிகாரமாகிய தேவனை பொன்னாலும், வெள்ளியாலும் விலைமதிப்புள்ள நகைகளாலும், அன்பளிப்புகளாலும், பெருமைப்படுத்துவான். “அந்த வடபகுதி ராஜா பலம் வாய்ந்த கோட்டைகளை அந்நிய தெய்வங்களின் உதவியுடன் தாக்குவான். அவன் தன்னோடு சேர்ந்த அயல்நாட்டு ராஜாக்களுக்கு மிகுந்த மரியாதையைக் கொடுப்பான். அந்த ராஜாக்களுக்குக் கீழே அவன் பல ஜனங்களை வைப்பான். அவர்கள் ஆளும் நாடுகளுக்காக வரி வசூலிப்பான். “முடிவின் காலத்தில் தென்பகுதி ராஜா வடபகுதி ராஜாவோடு போர் செய்வான். வட பகுதி ராஜா அவனைத் தாக்குவான். இரதங்களோடும், குதிரைப்படை வீரர்களோடும், பல பெரிய கப்பல்களோடும் வந்து தாக்குவான். வடபகுதி ராஜா நாட்டை விட்டு வெள்ளத்தைப் போன்று வேகமாக ஓடுவான். வடபகுதி ராஜா அழகான தேசத்தைத் தாக்குவான். வடபகுதி ராஜாவால் பல நாடுகள் தோற்கடிக்கப்படும். ஆனால் ஏதோம், மோவாப், அம்மோன் தலைவர்கள் அவனிடமிருந்து காப்பாற்றப்படுவர். வடபகுதி ராஜா பல நாடுகளில் தன் வல்லமையைக் காட்டுவான். எகிப்தும் தான் எவ்வளவு வல்லமையானவன் என்பதை தெரிந்துகொள்ளும். அவன் எகிப்திலுள்ள பொன்னும் வெள்ளியுமான எல்லாச் செல்வங்களையும் பெறுவான். லீபியரும், எத்தியோப்பியரும் அவனுக்கு அடிபணிவார்கள். ஆனால் வடக்கத்தி ராஜா கிழக்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் அவனை அச்சமும் கோபமும் கொள்ளத்தக்கச் செய்திகளைக் கேட்பான். அவன் பல தேசங்களை முழுமையாக அழிக்கப் போவான். கடல்களுக்கு இடையிலுள்ள அழகான பரிசுத்த மலையில் தனது இராஜ கூடாரத்தை அமைத்துக்கொள்வான். ஆனால் இறுதியில், அத்தீய ராஜா சாவான். அவனது முடிவுகாலம் வரும்போது அவனுக்கு உதவிச் செய்ய யாரும் இருக்கமாட்டார்கள்.”