உபாகமம் 7:6-10

உபாகமம் 7:6-10 TAERV

ஏனென்றால் நீங்கள் எல்லோரும் கர்த்தருடைய சொந்த ஜனங்கள். இந்தப் பூமியில் உள்ள எல்லா ஜனங்களிலிருந்தும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைத் தேர்ந்தெடுத்து தமக்கு விசேஷமான ஜனங்களாக ஆக்கினார். ஏன் கர்த்தர் உங்கள் மீது அன்பு செலுத்தி தேர்ந்தெடுத்தார்? மற்ற ஜனங்களைவிட நீங்கள் அதிகமானவர்கள் என்பதால் அல்ல, மற்ற எல்லா ஜனங்களையும்விட நீங்கள் மிகக் குறைவானவர்களே! ஆனால், கர்த்தர் தமது பெரிய வல்லமையினால் எகிப்திலிருந்து உங்களை மீட்டு வந்தார். அவர் உங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். எகிப்து நாட்டு மன்னனாகிய பார்வோனின் கட்டுப்பாட்டிலிருந்து உங்களை கர்த்தர் விடுவித்தார். ஏனென்றால் கர்த்தர் உங்கள்மீது அன்பு செலுத்தி உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற விரும்பினார். “ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அவரிடம் முழு நம்பிக்கை கொள்ளலாம்! அவர் தமது உடன்படிக்கையிலிருந்து விலகமாட்டார். யாரெல்லாம் அவரிடம் அன்பு வைத்து, அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்களோ அவர்களுக்கெல்லாம் தேவன் தமது அன்பையும், அருளையும் பொழிவார். உங்களிடம் மட்டுமின்றி, உங்களின் ஆயிரம் தலைமுறைகளுக்கும் அவர் தமது அன்பையும் அருளையும் தருவார். ஆனால், அவரை வெறுக்கின்றவர்களை கர்த்தர் தண்டிப்பார். அவர்களை அழித்துவிடுவார். அவர்களைத் தண்டிப்பதில் சிறிதும் தயவு காட்டமாட்டார்.