பிரசங்கி 2:16-26

பிரசங்கி 2:16-26 TAERV

ஞானமுள்ளவனும் முட்டாளும் மரித்துப்போகின்றனர். ஜனங்கள் ஞானவான்களையும், முட்டாள்களையும் என்றென்றும் நினைவில் வைத்திருப்பதில்லை. எதிர்காலத்தில் தாங்கள் செய்தவற்றையெல்லாம் ஜனங்கள் மறந்துபோகிறார்கள். எனவே ஞானமுள்ளவனும் முட்டாளும் உண்மையில் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். இது என்னை வாழ்வை வெறுக்கும்படி செய்தது. இவ்வாழ்வில் உள்ள அனைத்துமே பயனற்றது என்ற எண்ணம் எனக்கு வருத்தத்தைத் தந்தது. இது காற்றைப் பிடிப்பதுபோன்ற முயற்சி. நான் செய்த கடினமான உழைப்பு அனைத்தையும் வெறுத்தேன். நான் கடினமாக உழைத்திருக்கிறேன். ஆனால் நான் உழைத்தவற்றுக்கான பலனை எனக்குப் பின்னால் வாழ்பவர்களுக்கு வைத்துப் போக வேண்டும். நான் அவற்றை என்னோடு எடுத்துச் செல்ல இயலாது. வேறு ஒருவன் நான் உழைத்ததும், கற்றதுமான அனைத்தையும் ஆளுவான். அவன் ஞானமுள்ளவனா முட்டாளா என்பதை நான் அறியேன். இதுவும் அறிவற்றதுதான். எனவே, நான் செய்த அனைத்து உழைப்பைப்பற்றியும் வருத்தம் அடைந்தேன். ஒருவனால் தனது ஞானம், அறிவு, திறமை ஆகியவற்றைப் பயன்படுத்தி உழைக்கமுடியும். ஆனால் அவன் இறந்ததும், அவனது உழைப்பை மற்றவர்கள் பெறுகின்றனர். அவர்கள் எந்த உழைப்பையும் செய்வதில்லை. ஆனால் அனைத்தையும் பெறுகின்றனர். இது எனக்குச் சோர்வுண்டாக்குகிறது. இது நேர்மையற்றதாகவும் அர்த்தமற்றதாகவும் உள்ளது. ஒருவனது அனைத்து உழைப்புக்கும் போராட்டங்களுக்கும் பிறகு வாழ்வில் அவனுக்கு என்ன கிடைக்கிறது? அவனது வாழ்வு முழுவதும் வலியும், சலிப்பும், கடின உழைப்புமே மிஞ்சுகிறது. இரவிலும்கூட அவனது மனம் ஓய்வு பெறுவதில்லை. இதுவும் அர்த்தமற்றதுதான். என்னைவிட வேறு எவராது வாழ்வில் மகிழ்ச்சிபெற முயற்சி செய்ததுண்டா? எனவே ஒரு மனிதன் செய்யவேண்டியது என்னவென்றால் நன்றாக உண்பது, குடிப்பது, செய்யவேண்டியவற்றை மட்டும் மகிழ்ச்சியாக செய்வதுதான். இதையே நான் கற்றுக்கொண்டேன். இவை தேவனிடமிருந்து வருகிறது என்பதையும் நான் பார்த்தேன். ஒருவன் நன்மையைச் செய்து தேவனைப் பிரியப்படுத்தினால், தேவன் அவனுக்கு ஞானம், அறிவு, மகிழ்ச்சி ஆகியவற்றைக்கொடுக்கிறார். ஆனால் பாவம் செய்கிறவனுக்கு கூட்டுகிற வேலையையும், சுமக்கிற வேலையையும் தருகிறார். தேவன் கெட்டவர்களிடம் உள்ளவற்றை எடுத்து நல்லவர்களுக்குக்கொடுக்கிறார். ஆனால் இவை அனைத்தும் பயனற்றவை. இது காற்றைப் பிடிக்கும் முயற்சிதான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த பிரசங்கி 2:16-26