எஸ்தரின் சரித்திரம் 7

7
ஆமான் தூக்கிலிடப்படுகிறான்
1எனவே ராஜாவும், ஆமானும் இராணி எஸ்தரோடு விருந்து உண்ணச் சென்றனர். 2பிறகு இரண்டாம் நாள் விருந்தில் அவர்கள் திராட்சைரசம் குடிக்கும்போது, ராஜா மீண்டும் இராணியிடம் கேள்வி கேட்டான். அவன், “எஸ்தர் இராணியே, நீ என்னிடம் என்ன கேட்க விரும்புகிறாய்? எதை வேண்டுமானாலும் கேள். அது உனக்குக் கொடுக்கப்படும். உன்னுடைய விருப்பம் என்ன? எனது நாட்டில் பாதி வேண்டுமானாலும் நான் உனக்குக் கொடுப்பேன்” என்றான்.
3பிறகு, எஸ்தர் இராணி, “ராஜாவே, நீர் என்னை விரும்பினால், இது உமக்கு விருப்பமானால் என்னை வாழவிடுங்கள். எனது ஜனங்களையும் வாழவிடுங்கள் என்று கேட்கிறேன். அதுதான் உம்மிடம் வேண்டுகிறேன். 4ஏனென்றால், நானும் எனது ஜனங்களும் அழியவும், கொல்லப்படவும் விற்கப்பட்டோம். அடிமைகளாக விற்கப்பட்டால் கூட நான் மௌனமாக இருப்பேன். ஏனென்றால் அது ராஜாவைத் துன்புறத்துகிற ஒரு பிரச்சினையாக இருக்கமுடியாது” என்றாள்.
5பிறகு ராஜா அகாஸ்வேரு எஸ்தர் இராணியிடம், “இதனை உனக்குச் செய்தவன் யார்? உனது ஜனங்களுக்கு இத்தகைய கொடுமையைச் செய்ய துணிந்த மனிதன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான்.
6எஸ்தர், “எங்களுக்கு எதிரானவன் எங்கள் பகைவன் இந்த கெட்ட ஆமான்தான்” என்றாள்.
பிறகு, ராஜா மற்றும் இராணி முன்னால் ஆமான் திகில் அடைந்தான். 7ராஜா மிகவும் கோபம் அடைந்தான். அவன் எழுந்து திராட்சைரசம் விருந்தைவிட்டு, தோட்டத்திற்குள் சென்றான். ஆனால் ஆமான் உள்ளே இருந்து எஸ்தர் இராணியிடம் தன் உயிரைக் காப்பாற்றுமாறு கெஞ்சினான். அவன் தன் உயிருக்காக மன்றாடினான். ஏனென்றால், அவனைக் கொல்லுமாறு ஏற்கெனவே ராஜா முடிவுச் செய்துவிட்டதை அவன் அறிந்தான். 8ராஜா தோட்டத்திலிருந்து திரும்பி விருந்து அறைக்குள்ளே நுழையும்போது, இராணி எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையில் ஆமான் விழுந்து கிடந்தான். ராஜா மிகவும் கோபமான குரலில், “நான் இந்த வீட்டில் இருக்கும்போதே நீ இராணியைத் தாக்குகிறாயோ?” எனக் கேட்டான்.
ராஜா இவ்வாறு சொன்ன உடனேயே வேலைக்காரர்கள் வந்து ஆமானின் முகத்தை மூடினார்கள். 9பிரதானிகளில் ஒருவனான ராஜாவுக்கு சேவைச் செய்பவனின் பெயர் அற்போனா. அவன் ராஜாவிடம், “ஆமானின் வீட்டின் அருகில் 75 அடி உயரத்தில் ஒரு தூக்குமரம் கட்டப்பட்டுள்ளது. அதில் மொர்தெகாயைத் தூக்கிலிடவேண்டும் என்றே ஆமான் அதைக் கட்டினான். மொர்தெகாய் உமக்கு உதவிச் செய்த ஆள், உம்மை கொல்லத் திட்டமிட்டத் தீயர்வர்களைப்பற்றி உமக்குச் சொன்னவன்” என்றான்.
ராஜா, “ஆமானை அதே மரத்தில் தூக்கில் போடுங்கள்” என்றான்.
10எனவே, அவர்கள் ஆமானை அவன் மொர்தெகாய்க்காக கட்டிய தூக்கு மரத்தில் போட்டனர். பிறகு ராஜா தன் கோபத்தை நிறுத்தினான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எஸ்தரின் சரித்திரம் 7: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்