யாத்திராகமம் 30:1-10

யாத்திராகமம் 30:1-10 TAERV

மேலும் தேவன் மோசேயை நோக்கி, “சீத்திம் மரத்தால் ஒரு பலிபீடத்தை தயார் செய்து, நறுமணப்புகை எரிக்கும்படியான தூபபீடமாக அதைப் பயன்படுத்து. பலிபீடம் 1 முழம் நீளமும் 1 முழம் அகலமும் உடைய சதுர வடிவில் இருக்க வேண்டும். அது 2 முழம் உயரம் இருக்கட்டும். நான்கு மூலைகளிலும் கொம்புகள் இருக்கும். இந்த கொம்புகள் ஒரே துண்டாக தூபபீடத்தோடு இணைக்கப்பட வேண்டும். பீடத்தின் மேல் புறத்தையும் பக்கங்களையும் கொம்புகளையும் பொன்னால் மூட வேண்டும். பீடத்தைச் சுற்றிலும் பொன் சட்டத்தைப் பதிக்க வேண்டும். அதன் கீழ் இரண்டு பொன் வளையங்கள் இருக்கட்டும். பீடத்தின் எதிர்ப்பக்கங்களில் இரண்டு பொன் வளையங்கள் இருக்க வேண்டும். பீடத்தைத் தண்டுகளால் சுமப்பதற்கு இவ்வளையங்கள் பயன்படுத்தப்படும். தண்டுகளை சீத்திம் மரத்தால் செய்து பொன்னால் மூடு. விசேஷ திரைக்கு முன்னால் தூபபீடத்தை நிறுத்து. அத்திரைக்குப் பின் உடன்படிக்கைப் பெட்டி இருக்கும். உடன்படிக்கைக்குமேல் இருக்கும் கிருபாசனத்துக்கு முன்னால் பீடம் அமையும். இவ்விடத்தில்தான் நான் உன்னைச் சந்திப்பேன். “ஆரோன் தினந்தோறும் அதிகாலையில் தூபபீடத்தின்மேல் இனிய நறுமணப் புகையை எரிக்க வேண்டும். விளக்குகளை பராமரிக்க வரும்போது அவன் இதைச் செய்வான். மீண்டும் மாலையிலும் அவன் நறுமணப்புகையை எரிப்பான். அதுவும் மாலையில் விளக்கைப் பராமரிப்பதற்கு அவன் வரும் நேரமேயாகும். ஒவ்வொரு நாளும் என்றென்றும் கர்த்தரின் முன் நறுமணப் புகை எரிக்கப்பட வேண்டும். வேறு எந்த நறுமணப் பொருட்களை எரிப்பதற்கோ, வேறு தகனபலிகளை எரிப்பதற்கோ இந்தத் தூபபீடத்தைப் பயன்படுத்தக் கூடாது. தானிய காணிக்கையையோ, பானங்களின் காணிக்கையையோ எரிப்பதற்கு இப்பீடத்தைப் பயன்படுத்தலாகாது. “ஆண்டிற்கொருமுறை கர்த்தருக்கு ஒரு விசேஷ பலியை ஆரோன் செலுத்த வேண்டும். ஜனங்களின் பாவத்தைப் போக்குவதற்கு பாவப்பரிகார பலியின் இரத்தத்தை ஆரோன் பயன்படுத்த வேண்டும். பீடத்தின் கொம்புகளினருகே ஆரோன் இதனைச் செய்வான். இது பாவப்பரிகார நாள் எனப்படும். இது கர்த்தருக்கு மிகவும் பரிசுத்த நாள்” என்றார்.