ஆதியாகமம் 42

42
கனவுகள் நிறைவேறுகின்றன
1கானான் தேசத்திலும் கொடிய பஞ்சம் இருந்தது. யாக்கோபு எகிப்தில் உணவுப் பொருட்கள் இருப்பதாக அறிந்தான். எனவே அவன் தன் குமாரர்களிடம், “எதுவும் செய்யாமல் இங்கே இருந்து என்ன பயன்? 2எகிப்தில் உணவுப் பொருட்களை விற்பதாகக் கேள்விப்பட்டேன். எனவே நாம் செத்துப் போவதற்குப் பதிலாக அங்கே போய் உணவுப் பொருட்களை வாங்கி வருவோம்” என்றான்.
3எனவே, யோசேப்பின் பத்து சகோதரர்களும் உணவுப் பொருட்கள் வாங்க எகிப்து நாட்டிற்குப் போனார்கள். 4யாக்கோபு பென்யமீனை அவர்களோடு அனுப்பவில்லை. (அவனே யோசேப்பின் முழுமையான சகோதரன்) அவனுக்கும் ஏதாவது கேடு ஏற்படலாம் என்று யாக்கோபு பயந்தான்.
5கானான் பகுதியில் பஞ்சம் மிகவும் கொடுமையாக இருந்தது. எனவே ஏராளமான ஜனங்கள் எகிப்துக்குப் போனார்கள். அவர்களுள் இஸ்ரவேலின் குமாரர்களும் இருந்தனர்.
6யோசேப்புதான் எகிப்தின் ஆளுநராக அச்சமயத்தில் இருந்தான். எகிப்துக்கு வரும் ஜனங்களுக்கு விற்கப்படும் தானியத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு அவனிடமே இருந்தது. எனவே யோசேப்பின் சகோதரர்கள் அவனிடம் வந்து குனிந்து வணங்கி நின்றனர். 7யோசேப்பு தன் சகோதரர்களைப் பார்த்ததும், உடனே அடையாளம் கண்டுகொண்டான். எனினும் தெரிந்துகொண்டதைப்போல் காட்டிகொள்ளாமல் அவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டான். “எங்கேயிருந்து வருகின்றீர்கள்?” என்று கேட்டான்.
அவர்கள், “நாங்கள் கானான் பகுதியிலிருந்து வருகிறோம். உணவுப் பொருட்களை வாங்குவதற்காக வந்தோம்” என்றனர்.
8யோசேப்புக்கு அவர்கள் அனைவரும் தன் சகோதரர்கள் என்று புரிந்தது. ஆனால் அவர்களுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. 9அவன் தன் சகோதரர்களைப்பற்றி தான் கண்ட கனவை நினைத்துப் பார்த்தான்.
யோசேப்பு அவர்களிடம், “நீங்கள் உணவுப் பொருட்கள் வாங்க வரவில்லை, நீங்கள் ஒற்றர்கள். எங்கள் நாட்டின் பலவீனத்தைத் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்கள்” என்றான்.
10அவர்களோ, “இல்லை ஐயா! நாங்கள் உங்கள் வேலைக்காரர்களாக வந்திருக்கிறோம். உணவுப் பொருட்களை வாங்கவே வந்துள்ளோம். 11நாங்கள் அனைவரும் சகோதரர்கள். எங்கள் அனைவருக்கும் ஒரே தந்தை. நாங்கள் நேர்மையானவர்கள். நாங்கள் தானியம் வாங்கவே வந்தோம்” என்றனர்.
12பின்னும் யோசேப்பு, “இல்லை! நீங்கள் எங்கள் பலவீனத்தை அறியவே வந்துள்ளீர்கள்” என்றான்.
13அவர்களோ, “இல்லை நாங்கள் அனைவரும் சகோதரர்கள். மொத்தம் பன்னிரெண்டு பேர். எல்லோருக்கும் ஒரே தந்தை. எங்கள் இளைய தம்பி வீட்டில் தந்தையோடு இருக்கிறான். இன்னொரு சகோதரன் பல ஆண்டுகளுக்கு முன் மரித்து போனான். இப்போது உங்கள் முன் வேலைக்காரர்களைப் போன்று இருக்கிறோம். நாங்கள் கானான் நாட்டிலிருந்து வந்துள்ளோம்” என்றார்கள்.
14ஆனால் யோசேப்போ, “இல்லை! நீங்கள் ஒற்றர்களே. 15ஆனால், நீங்கள் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்க அனுமதிக்கிறேன். உங்கள் இளைய சகோதரன் வந்தால் நீங்கள் போகலாம், இது பார்வோன்மேல் நான் இடுகிற ஆணை. 16உங்களில் ஒருவர் மட்டும் ஊருக்குப் போய் இளைய சகோதரனை அழைத்துவர அனுமதிக்கிறேன். மற்றவர்கள் அனைவரும் சிறையில் இருக்கவேண்டும். நீங்கள் சொல்வது உண்மையா என்று பார்ப்பேன். ஆனால் உங்களை நான் ஒற்றர்கள் என்றே நினைக்கிறேன்” என்றான். 17பின்பு அவர்களை மூன்று நாட்களுக்குச் சிறையில் அடைத்தான்.
சிமியோன் ஜாமீனாக வைக்கப்படுகிறான்
18மூன்று நாட்கள் ஆனதும் யோசேப்பு அவர்களிடம், “நான் தேவனுக்குப் பயந்தவன். நான் சொல்கிறபடி செய்தால் உங்களை விடுவேன். 19நீங்கள் உண்மையில் நேர்மையானவர்கள் என்றால் உங்களில் ஒருவன் சிறையில் இருக்கட்டும். மற்றவர்கள் உணவுப் பொருட்களோடு உங்கள் நாட்டிற்கு செல்லுங்கள். 20ஆனால் நீங்கள் உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்துவர வேண்டும். அதனால் உங்களது வார்த்தைகள் உண்மை என்று அறிவேன். நீங்களும் மரிக்காமல் இருக்கலாம்” என்றான்.
சகோதரர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர். 21அவர்கள் ஒருவருக்கொருவர், “நாம் நமது இளைய சகோதரனுக்குச் செய்த தீமைக்கே இந்தத் தண்டனை. அவன் துன்பப்படுவதைப் பார்த்தோம். தன்னைக் காப்பாற்றும்படி அவன் எவ்வளவோ கெஞ்சினான். ஆனால் நாம் அவன் சொன்னதைக் கவனிக்க மறுத்துவிட்டோம். இப்போது அதற்கு அனுபவிக்கிறோம்” என்று பேசிக்கொண்டனர்.
22பிறகு ரூபன் அவர்களிடம், “அவனுக்கு எந்தத் தீமையும் செய்யவேண்டாம் என்று நான் உங்களிடம் சொன்னேன். ஆனால் நான் சொன்னதை நீங்கள் கேட்கவில்லை. அவனது மரணத்துக்கு நாம் இப்போது தண்டனை அனுபவிக்கிறோம்” என்றான்.
23-24யோசேப்பு மொழி பெயர்ப்பாளனைக் கொண்டு அவர்களோடு பேசியதால் தாங்கள் சொன்னதை அவன் புரிந்துகொள்ளமாட்டான் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் யோசேப்பு அவர்கள் சொன்னவற்றையெல்லாம் புரிந்துகொண்டான். அவர்களின் வார்த்தைகள் அவனைப் பெரிதும் வருந்தச்செய்தது. எனவே, அவன் அவர்களை விட்டுப் போய் கதறி அழுதான். பிறகு அவர்களிடம் வந்து, சகோதரர்களுள் ஒருவனான சிமியோனைக் கைது செய்தான். மற்ற சகோதரர்கள் இதைப் பார்த்தார்கள். 25யோசேப்பு வேலைக்காரர்களிடம் அவர்களின் பைகளை உணவுப் பொருட்களால் நிரப்பிய பின்னர் அவர்கள் கொடுத்த பணத்தை அவர்கள் பையிலேயே போட்டு, அவர்களின் பயணத்துக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுத்து அனுப்பச் சொன்னான்.
26சகோதரர்கள் உணவுப் பொருட்களைக் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு போனார்கள். 27அன்று இரவு வழியில் ஓரிடத்தில் தங்கினார்கள். அப்போது ஒருவன் கழுதைக்காக உணவு எடுக்கப் பையைத் திறந்து பார்த்தபோது உள்ளே பணம் இருந்தது. 28அவன் மற்ற சகோதரர்களிடம், “பாருங்கள். இங்கே பணம் இருக்கிறது. நான் தானியத்துக்குப் பணம் கொடுத்தேன். ஆனால் பணம் என் பையில் திரும்பப் போடப்பட்டிருக்கிறது” என்றான். அவர்கள் பயந்தார்கள், “தேவன் நமக்கு என்ன செய்கிறார்?” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டனர்.
சகோதரர்கள் யாக்கோபிடம் தெரிவிக்கிறார்கள்
29அவர்கள் கானான் பகுதிக்குப் போய் தம் தந்தையான யாக்கோபைச் சந்தித்து, நடந்தவை அனைத்தையும் சொன்னார்கள். 30“அந்நாட்டின் ஆளுநர் எங்களிடம் மிகக் கடுமையாகப் பேசினான். எங்களை ஒற்றர்கள் என்று குற்றம் சாட்டினான்” 31நாங்கள் அவ்வாறு இல்லை என்று மறுத்தோம். நாங்கள் நேர்மையானவர்கள் என்றோம். 32நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள் என்றும் தந்தையைப்பற்றியும் இளைய தம்பியைப்பற்றியும் சொன்னோம்.
33“பிறகு அந்த ஆளுநர் ‘நீங்கள் கௌரவமானவர்கள் என்பதை இதன் மூலம் நிரூபியுங்கள். ஒரு சகோதரனை விட்டு விட்டுப் போங்கள். உங்கள் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். 34பிறகு உங்கள் இளைய சகோதரனை அழைத்துக்கொண்டு வாருங்கள். அதன் பிறகு நீங்கள் கௌரமானவர்களா, இல்லை ஒற்றர்களா என்பதை அறிந்துகொள்வேன். நீங்கள் சொன்னது உண்மை என்றால் உங்கள் சகோதரனை விட்டு விடுவோம். நீங்களும் இந்த தேசத்திலே வியாபாரம் பண்ணலாம், என்று சொன்னான்’” என்றார்கள்.
35பிறகு சகோதர்கள் அனைவரும் தங்கள் பைகளை அவிழ்த்து தானியத்தை வெளியே எடுத்தனர். எல்லாப் பைகளிலும் பணம் இருந்தது. சகோதரர்களும் தந்தையும் அவற்றைப் பார்த்து அஞ்சினார்கள்.
36யாக்கோபு அவர்களிடம், “நான் எனது எல்லா குமாரர்களையும் இழக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? யோசேப்பு போய்விட்டான். சிமியோனும் போய்விட்டான். நீங்கள் இப்போது பென்யமீனையும் கொண்டுபோகிறீர்களா?” என்று கேட்டான்.
37அதற்கு ரூபன், “தந்தையே, நான் பென்யமீனை மீண்டும் உங்களிடம் அழைத்து வராவிட்டால் எனது இரண்டு குமாரர்களையும் கொன்றுவிடுங்கள். என்னை நம்புங்கள். நான் பென்யமீனைத் திரும்ப அழைத்துக்கொண்டு வருவேன்” என்றான்.
38ஆனால் யாக்கோபு, “பென்யமீனை உங்களோடு அனுப்பமாட்டேன். அவனது ஒரே சகோதரன் மரித்துபோனான். ராகேலின் குமாரர்களில் இவன் ஒருவன் மட்டுமே உள்ளான். எகிப்துக்கு போகிற வழியில் ஏதாவது நடந்தால் அதுவே என்னைக் கொன்றுவிடும். வயதான என்னை துக்கத்துடனே கல்லறைக்கு அனுப்புவீர்கள்” என்றான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஆதியாகமம் 42: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்