ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 8

8
அசீரியா விரைவில் வரும்
1கர்த்தர் என்னிடம் கூறினார், “ஒரு பெரிய சுருளை எடுத்துக்கொள். இந்த வார்த்தைகளை எழுத ஒரு பேனாவை எடுத்துக்கொள். அதில் மகேர்-சாலால்-அஷ்-பாஸ் (‘அங்கே விரைவில் களவும் சூறையாடலும் நடக்கும்’ என்பது பொருள்) என்று எழுது” என்றார்.
2நான் சிலரைச் சேகரித்தேன். அவர்கள் நம்பிக்கைக்குரிய சாட்சிகள். (அவர்கள் ஆசாரியனான உரியா, சகரியா, யெபெரெகியா ஆகியோர்). இவர்கள் நான் எழுதுவதைக் கவனித்தார்கள். 3பிறகு நான் தீர்க்கதரிசியான ஒரு பெண்ணிடம் சென்றேன். நான் அவளோடு இருந்தபிறகு அவள் கர்ப்பவதியானாள். அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். பிறகு கர்த்தர் என்னிடம், “அப்பையனுக்கு மகேர்-சாலால்-அஷ்-பாஸ்” என்னும் பெயரிடு. 4ஏனென்றால், இவன் “அம்மா, அப்பா” என்று சொல்லக் கற்பதற்கு முன்னால் தேவன், தமஸ்கு மற்றும் சமரியாவிலுள்ள செல்வங்களை எடுத்து அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்துவிடுவார் என்றார்.
5மீண்டும் கர்த்தர், என்னிடம் கூறினார். 6என் ஆண்டவர், “இந்த ஜனங்கள் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீரை மறுத்துவிட்டார்கள். இவர்கள் ரேத்சீனையும் ரெமலியாலின் குமாரனையும் ஏற்று மகிழ்ச்சிகொண்டார்கள்.” 7ஆனால் கர்த்தராகிய நான் அசீரியாவின் ராஜாவையும் அவனது வல்லமையயும் உங்களுக்கு எதிராகக் கொண்டுவருவேன். அவர்கள் ஐபிராத்து ஆற்றின் பெருவெள்ளத்தைப்போன்று வருவார்கள். அது குளத்தில் தண்ணீர்மட்டம் உயருவதுபோன்று இருக்கும். 8அந்த வெள்ளம் ஆற்றிலிருந்து வெளியே வந்து யூதாவின்மேல் பாய்வதுபோல இருக்கும். அந்த வெள்ளம் யூதாவின் கழுத்துவரை வந்து அதனை மூழ்கடிக்கும்.
“இம்மானுவேலே, உமது நாடு முழுவதிலும் பரவும்வரை அந்த வெள்ளம் வரும்” என்றார்.
9நாடுகளே, நீங்கள் போருக்குத் தயாராகுங்கள்!
நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்.
கவனியுங்கள், தூர நாடுகளில் உள்ளவர்களே!
போருக்குத் தயாராகுங்கள் நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்.
10போருக்கான திட்டங்களைத் தீட்டுங்கள்.
உங்கள் திட்டங்கள் தோற்கடிக்கப்படும்.
உங்கள் படைகளுக்கு கட்டளையிடுங்கள்!
உங்கள் கட்டளைகள் பயனற்றுப்போகும். ஏனென்றால், தேவன் எங்களோடு இருக்கிறார்!
ஏசாயாவிற்கு எச்சரிக்கைகள்
11கர்த்தர் தன் பெரும் வல்லமையோடு என்னுடன் பேசினார். கர்த்தர், மற்ற ஜனங்களைப்போன்று இருக்கவேண்டாம் என்று என்னை எச்சரித்தார். 12கர்த்தர், “ஒவ்வொருவரும் மற்றவர்கள் தனக்கெதிராகத் திட்டம் தீட்டுவதாகக் கூறுகின்றனர். நீ அவற்றை நம்பவேண்டாம். அவர்கள் பயப்படுகின்றவற்றுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்” என்றார்!
13சர்வ வல்லமையுள்ள கர்த்தர் ஒருவருக்கே நீ பயப்பட வேண்டும். அவர் ஒருவருக்கே நீ மரியாதை செலுத்த வேண்டும். அவர் ஒருவருக்கே நீ அஞ்சவேண்டும். 14நீ கர்த்தரை மதித்து அவரைப் பரிசுத்தமானவர் என்று எண்ணுவாயேயானால், அவரே உனக்கேற்ற பாதுகாப்பான இடமாயிருப்பார். ஆனால் நீ அவரை மதிப்பதில்லை. எனவே, அவர் நீங்கள் விழத்தக்கப் பாறையைப்போன்றிருப்பார். இஸ்ரவேலின் இரு குடும்பங்களை இடறச்செய்யும் பாறை இது. கர்த்தர் எருசலேம் ஜனங்களைப் பிடிக்கின்ற வலையைப்போன்று இருக்கிறார். 15(ஏராளமானோர் இப்பாறையில் விழுந்தார்கள். அவர்கள் விழுந்து நொறுங்கிப்போவார்கள். அவர்கள் வலைக்குள்ளே அகப்படுவார்கள்).
16ஏசாயா, “ஒரு ஒப்பந்தத்தைச்செய்து முத்திரை இடுவோம். எதிர்காலத்திற்காக என் போதனைகளைப் பத்திரப்படுத்துங்கள். என்னைப் பின்பற்றுகிறவர்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போதே இதனைச் செய்யுங்கள்.”
17இது தான் அந்த ஒப்பந்தம்: நமக்கு உதவும்படி நான் கர்த்தருக்காகக் காத்திருப்பேன்.
யாக்கோபின் குடும்பத்தைப்பற்றி கர்த்தர் அவமானமடைகிறார்.
அவர்களைப் பார்க்க அவர் மறுத்துவிட்டார்.
ஆனால் நான் கர்த்தருக்காகக் காத்திருப்பேன் அவர் நம்மைக் காப்பாற்றுவார்.
18இஸ்ரவேல் ஜனங்களின் அடையாளமாகவும் ஆதாரமாகவும் நானும் எனது பிள்ளைகளும் இருக்கிறோம். “சீயோன் மலையில் குடியிருக்கும் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எங்களை அனுப்பியிருக்கிறார்” என்றான்.
19சிலர், “என்ன செய்யலாம் என்பதையும் எதிர்காலம் பற்றி சொல்பவர்களையும், அஞ்சனம் பார்க்கிறவர்களையும் கேளுங்கள்” என்றனர். குறி சொல்லுகிறவர்களும், அஞ்சனம் பார்க்கிறவர்களும் பறவைகளைப்போன்று பேசுவார்கள். மறை பொருள் அறிந்தவர்கள் என்று கேட்பவர்கள் எண்ணும்படியாக கிசு கிசுத்து அவர்கள் பேசுவார்கள். ஆனால், நான் சொல்கிறேன் ஜனங்கள் உதவிக்காக தம் தேவனைக் கேட்க வேண்டும்! குறிசொல்லுகிறவர்களும், அஞ்சனம் பார்க்கிறவர்களும் என்ன செய்யலாம் என்று மரித்துபோனவர்களைக் கேட்கிறார்கள். உயிரோடு இருக்கிறவர்கள் மரித்துப்போனவர்களிடம் ஏன் இதுபோல் கேட்க வேண்டும்?
20நீங்கள் போதனைகளையும், ஒப்பந்தத்தையும் பின்பற்ற வேண்டும். அந்தக் கட்டளைகளை நீங்கள் பின்பற்றாவிட்டால், பின்னர் நீங்கள் தவறான கட்டளைகளைப் பின்பற்றுவீர்கள். (தவறான கட்டளைகள் என்பது குறிகாரர்களும் அஞ்சனக்காரர்களும் கூறுவதாகும். அக்கட்டளைகள் பயனற்றவை. அக்கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எந்த பயனையும் பெற முடியாது).
21நீங்கள் அந்தத் தவறான கட்டளைகளைப் பின்பற்றினால், நாட்டில் துன்பமும், பசியும் ஏற்படும். ஜனங்களுக்குப் பசி ஏற்படும். எனவே, அவர்கள் கோபங்கொண்டு தம் ராஜாவுக்கும் அவனது தெய்வங்களுக்கும் எதிராகப் பேசுவார்கள். பிறகு அவர்கள் தம் உதவிக்கு தேவனிடம் வேண்டுவார்கள்.
22அவர்கள் அந்த நாட்டில் தம்மைச் சுற்றிலும் பார்த்தால், துன்பத்தையும் கடும் இருளையும் காண்பார்கள். அத்துன்பமாகிய இருள் அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்யும். அந்த இருள் வலைக்குள் சிக்கிக்கொண்டவர்கள் அதிலிருந்து விடுதலை பெறமுடியாது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 8: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்