யோவான் எழுதிய சுவிசேஷம் 1:35-42

யோவான் எழுதிய சுவிசேஷம் 1:35-42 TAERV

மறுநாள் மறுபடியும் யோவான் அங்கே இருந்தான். அவனோடு அவனைப் பின்பற்றுகிற சீஷர்களில் இரண்டு பேர் இருந்தனர். இயேசு நடந்துசெல்வதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர்தான் தேவனின் ஆட்டுக்குட்டி” என்றான். அந்த இரு சீஷர்களும் யோவான் கூறுவதைக் கேட்டார்கள். ஆகையால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு திரும்பி அவர்களைப் பார்த்து கேட்டார். அந்த இருவரும், “போதகரே, நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டனர். “என்னோடு வாருங்கள். நீங்கள் கண்டுகொள்வீர்கள்” என்று இயேசு பதிலுரைத்தார். எனவே அவர்கள் இருவரும் அவர் பின்னால் சென்றனர். இயேசு தங்கியிருக்கும் இடத்தையும் கண்டனர். அன்று அவர்கள் அவரோடு அங்கே தங்கியிருந்தனர். அப்பொழுது நேரம் சுமார் நான்கு மணி. இயேசுவைப்பற்றி யோவான் சொன்னதன் மூலமாகத் தெரிந்துகொண்டதால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த இருவரில் ஒருவன் பெயர் அந்திரேயா. அவன் சீமோன் பேதுருவின் சகோதரன். முதல் காரியமாக அவன் தன் சகோதரன் சீமோன் பேதுருவைப் போய்ப் பார்த்தான். “நாங்கள் மேசியாவைக் (அதன் பொருள் கிறிஸ்து) கண்டுகொண்டோம்” என்று கூறினான். பிறகு அந்திரேயா சீமோனை இயேசுவிடம் அழைத்துக் கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “நீ யோவானுடைய குமாரனான சீமோன். நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். (“கேபா” என்பதற்கு “பேதுரு” என்று அர்த்தம்.)