யோவான் எழுதிய சுவிசேஷம் 11:4-15

யோவான் எழுதிய சுவிசேஷம் 11:4-15 TAERV

இயேசு இதனைக் கேட்டு “நோயின் முடிவு மரணம் அன்று. இந்த நோய் தேவனை மகிமைப்படுத்துவதற்காக ஏற்பட்டது. இது, தேவனின் குமாரனுக்குப் புகழைக் கொண்டுவருவதற்காகவே உண்டானது” என்றார். (மார்த்தாள், மரியாள், லாசரு ஆகிய மூவரையும் இயேசு நேசித்து வந்தார்) இயேசு லாசருவின் நோயைப்பற்றி அறிந்தபோது மேலும் இரண்டு நாட்கள் ஏற்கெனவே இருந்த இடத்திலேயே தங்கினார். பிறகு இயேசு தன் சீஷர்களிடம் “நாம் மறுபடியும் யூதேயாவுக்குத் திரும்பிப் போவோம்” என்றார். அவரது சீஷர்கள், “ஆண்டவரே, யூதேயாவில் உள்ள யூதர்கள் உம்மைக் கல்லெறிந்து கொல்ல முயற்சித்தார்கள். அது நடந்தது சமீபகாலத்தில்தான். எனவே, இப்பொழுது அங்கே திரும்பிப் போக வேண்டுமா?” என்று கேட்டனர். இயேசுவோ, “பகலில் பன்னிரண்டு மணிநேரம் வெளிச்சம் இருக்கும். சரிதானே. ஒருவன் பகலில் நடந்தால், அவன் தடுமாறி விழமாட்டான். ஏனென்றால், அவனால் உலகின் வெளிச்சத்தைப் பார்க்க முடியும். ஆனால் ஒருவன் இரவிலே நடந்தால் அவன் தடுமாறுவான். ஏனென்றால் அவனுக்கு உதவி செய்ய வெளிச்சம் இல்லை” என்றார். அவர் மேலும், “நமது நண்பன் லாசரு இப்பொழுது தூங்கிக்கொண்டிருக்கிறான். ஆனால் நான் அவனை எழுப்பப்போகிறேன்” என்றார். அவரது சீஷர்களோ, “ஆண்டவரே, அவன் தூங்கிக்கொண்டிருந்தால் நிச்சயம் குணமாவான்” என்றார்கள். லாசரு இறந்து போனான் என்பதைக்குறித்தே இயேசு அவ்வாறு சொன்னார். ஆனால் அவரது சீஷர்களோ லாசரு உண்மையில் தூங்குவதாக நினைத்துக்கொண்டனர். பிறகு இயேசு தெளிவாக, “லாசரு இறந்துபோனான். அங்கே அப்பொழுது நான் இல்லை என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது என்னை நீங்கள் நம்புவீர்கள். அதனால்தான் மகிழ்கிறேன். நாம் அவனிடம் போவோம்” என்றார்.

யோவான் எழுதிய சுவிசேஷம் 11:4-15 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்