யோவான் எழுதிய சுவிசேஷம் 5:17-24

யோவான் எழுதிய சுவிசேஷம் 5:17-24 TAERV

ஆனால் இயேசுவோ யூதர்களிடம், “எனது பிதா (தேவன்) வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை. நானும் வேலை செய்துகொண்டிருக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட யூதர்கள் இயேசுவைக் கொன்றுவிடக் கடுமையாக முயற்சி செய்தார்கள். அவர்கள், “முதலில் இயேசு ஓய்வு நாளின் சட்டத்தை உடைத்துவிட்டார். பிறகு அவர் தேவனை அவரது பிதா என்று கூறுகிறார். அவர் தன்னை தேவனுக்குச் சமமாகக் கூறி வருகிறார்” என்று விளக்கம் கூறினர். ஆனால் இயேசுவோ, “உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், இந்தக் குமாரன் தனியாக எதுவும் செய்வதில்லை. இவர் தன் பிதாவிடம் எதைப் பார்க்கிறாரோ அவற்றையே செய்து வருகிறார். பிதா குமாரனை நேசிக்கிறார். அவர் தான் செய்பவற்றையெல்லாம் தனது குமாரனுக்குக் காட்டி வருகிறார். இந்த மனிதன் குணமானான். இதைவிட மேலான காரியங்களைப் பிதாவானவர் தனது குமாரன் மூலம் செய்வார். பின்பு நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். பிதாவானவர் இறந்தவர்களை உயிரோடு எழுப்புகிறார். இதைப்போலவே அவரது குமாரனும் தமது விருப்பத்தின்படி இறந்துபோனவர்களை உயிரோடு எழச் செய்வார். “அத்துடன் பிதாவானவர் யாருக்கும் தீர்ப்பளிப்பதில்லை. ஆனால் அவர் இத்தகைய தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை தன் மகனிடம் ஒப்படைத்திருக்கிறார். தேவன் இதைச் செய்தார். எனவே அனைத்து மக்களும் பிதாவுக்குச் செய்கிற மரியாதையைக் குமாரனுக்கும் செய்ய வேண்டும். ஒருவன் குமாரனுக்கு மரியாதை செய்யாவிட்டால் அவன் பிதாவையும் அவமரியாதை செய்தவனாகிறான். பிதாவே தன் குமாரனை நம்மிடம் அனுப்பியிருக்கிறார். “நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், நான் சொல்கிறதை எவன் கேட்டு என்னை அனுப்பினவரை நம்புகிறானோ அவனுக்கு நித்தியமான வாழ்வு உண்டு. அவன் தீர்ப்புக்கு உட்படமாட்டான். அவன் ஏற்கெனவே மரணத்தை விட்டு நீங்கி ஜீவனைப் பெற்றவனாகிறான்.