யோவான் எழுதிய சுவிசேஷம் 8:3-11

யோவான் எழுதிய சுவிசேஷம் 8:3-11 TAERV

வேதபாரகரும், பரிசேயரும் ஒரு பெண்ணை அவரிடம் கொண்டுவந்தனர். அவள் விபசாரம் செய்ததற்காகப் பிடிக்கப்பட்டவள். அவளை மக்களுக்கு முன்னால் நிற்கும்படி யூதர்கள் வற்புறுத்தினர். அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் ஒருவனிடம் கள்ளத்தனமாக உறவுகொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டாள். மோசேயின் சட்டப்படி இவ்வாறு பாவம் செய்கிற ஒவ்வொரு பெண்ணையும் கல் எறிந்து கொல்லவேண்டும். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீர் சொல்கிறீர்?” என்று கேட்டனர். யூதர்கள் இந்தக் கேள்வியை இயேசுவைச் சோதிப்பதற்காகக் கேட்டனர். இயேசுவின் மீது ஏதாவது குற்றம் சுமத்தவே அவர்கள் விரும்பினர். ஆனால் இயேசுவோ குனிந்து தரையில் தன் விரலால் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். யூதத் தலைவர்கள் அதே கேள்வியை இயேசுவிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். ஆகையால் இயேசு எழுந்து நின்று, “பாவமே செய்யாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா? இருந்தால் பாவம் செய்யாத அந்த மனிதன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்றார். பிறகு இயேசு மறுபடியும் கீழே குனிந்து தரையில் ஏதோ எழுத ஆரம்பித்தார். இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள் ஒவ்வொருவராக விலகிப் போயினர். முதலில் முதியவர்கள் விலகினர்; பிறகு மற்றவர்கள் விலகினர். அந்தப் பெண்ணோடு இயேசு மட்டும் தனியாக விடப்பட்டார். அவள் அவருக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தாள். இயேசு அவளை ஏறிட்டுப்பார்த்து, “பெண்ணே, எல்லோரும் போய்விட்டார்கள். ஒருவனும் உன்னைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவள், “ஆண்டவரே, எவரும் என்னைத் தண்டனைக்குட்படுத்தித் தீர்ப்பளிக்கவில்லை” என்றாள். பிறகு இயேசு, “நானும் உனக்குத் தீர்ப்பளிக்கவில்லை. இப்பொழுது நீ போகலாம், ஆனால் மறுபடியும் பாவம் செய்யாதே” என்றார்.