மல்கியா 2:1-7

மல்கியா 2:1-7 TAERV

“ஆசாரியர்களே, இந்த விதி உங்களுக்குரியது. என்னைக் கவனியுங்கள்! நான் சொல்கின்ற வற்றில் கவனம் செலுத்துங்கள்! எனது பேரைக் கனம்பண்ணுங்கள். நீங்கள் என் நாமத்தை மதிக்காவிட்டால் பிறகு உங்களுக்குத் தீமை ஏற்படும். நீங்கள் ஆசீர்வாதம் சொல்வீர்கள். ஆனால் அவை சாபங்களாகும். நான் உங்களுக்குத் தீமை ஏற்படும்படிச் செய்வேன். ஏனென்றால் நீங்கள் என் நாமத்திற்கு மரியாதை செய்யவில்லை!” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார். “பாருங்கள். நான் உங்கள் சந்ததிகளைத் தண்டிப்பேன். விடுமுறையில் உங்கள் ஆசாரியர்கள் எனக்குப் பலி கொடுக்கிறார்கள். நீங்கள் மரித்த மிருகங்களின் சாணத்தையும் மற்ற பகுதிகளையும் எடுத்து வெளியே எறிகிறீர்கள். நான் அந்தச் சாணத்தை உங்கள் முகத்தில் இறைப்பேன். நீங்கள் அதனோடு வெளியே எறியப்படுவீர்கள். பின்னர் நான் ஏன் இந்தக் கட்டளையைக் கொடுத்தேன் என்பதைக் கற்றுக் கொள்வாய். நான் இவற்றை உனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். லேவியோடு நான் கொண்ட எனது உடன்படிக்கைத் தொடரும்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார். கர்த்தர், “நான் அந்த உடன்படிக்கையை லேவியோடு செய்தேன். நான் அவனுக்கு வாழ்வையும், சமாதானத்தையும் கொடுப்பதாக வாக்குறுதியளித்தேன். நான் அவனுக்கு அவற்றைக் கொடுத்தேன். லேவி என்னை மதித்தான். அவன் எனது நாமத்திற்கு மரியாதைச் செலுத்தினான். லேவி சத்திய வேதத்தைப் போதித்தான். அவன் பொய்யானவற்றை போதிக்கவில்லை. லேவி நேர்மையானவன். அவன் சமாதானத்தை நேசித்தான். லேவி என்னைப் பின் தொடர்ந்தான். அநேகர் தங்கள் பாவ வழிகளை விட்டுவிலகச் செய்தான். அவர்களைக் காப்பாற்றினான். ஒரு ஆசாரியன் தேவனுடைய போதனைகளை கற்றிருக்கவேண்டும். ஜனங்கள் ஆசாரியனிடம் சென்று தேவனுடைய போதனைகளை கற்றுக்கொள்ளவேண்டும். ஒரு ஆசாரியன் தேவனுடைய தூதுவனாக ஜனங்களுக்கு இருக்க வேண்டும்” என்றார்.