பின்பு இயேசு தம் சீஷர்களுடன் கெத்செமனே என்ற இடத்திற்குச் சென்றார். அவர் தம் சீஷர்களிடம், “நான் அங்கே சென்று பிரார்த்தனை செய்யும்வரைக்கும் இங்கேயே அமர்ந்திருங்கள்” என்றார். பேதுருவையும், செபதேயுவின் இரு குமாரர்களையும் தம்முடன் வரக் கூறினார். பின் இயேசு மிகுந்த கவலையும் வியாகுலமும் அடைந்தவராகக் காணப்பட்டார். இயேசு பேதுருவிடமும், செபதேயுவின் இரு குமாரர்களிடமும், “என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்துள்ளது. என் இதயம் துக்கத்தினால் உடைந்துள்ளது. என்னுடன் இங்கேயே விழித்திருந்து காத்திருங்கள்” என்றார். பின் இயேசு அவர்களை விட்டு சிறிது தூரம் சென்றார். பின்பு இயேசு நிலத்தில் முகம்படிய விழுந்து பிரார்த்தித்தார், “என் பிதாவே, முடியுமானால் இந்த வேதனைகள் எனக்கு ஏற்படாமல் செய்யும். ஆனால், உமக்கு விருப்பமானதையே செய்யும். நான் விரும்புவதையல்ல” என்றார். பிறகு தம் சீஷர்களிடம் இயேசு திரும்பி வந்தார். தம் சீஷர்கள் தூக்கத்திலிருப்பதைக் கண்ட இயேசு, பேதுருவிடம் கூறினார், “ஒருமணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் ஆவி சரியானதைச் செய்ய விரும்புகிறது. ஆனால் உங்கள் சரீரமோ பலவீனமாக உள்ளது” என்றார். இயேசு இரண்டாவது முறையாக சென்று பிரார்த்தனை செய்தார், “என் பிதாவே, வேதனை மிகுந்த இக்காரியங்கள் எனக்கு ஏற்படாதிருக்குமாறு செய்ய முடியாதெனில், நீர் விரும்பியபடியே நடக்க நான் வேண்டுகிறேன்” என்றார். பின்பு இயேசு தம் சீஷர்களிடம் திரும்பிச் சென்றார். மீண்டும் அவர்கள் தூக்கத்திலிருப்பதைக் கண்டார். அவர்களது கண்கள் மிகவும் களைப்புடன் காணப்பட்டன. ஆகவே மீண்டும் ஒருமுறை இயேசு அவர்களை விட்டுச் சென்று பிரார்த்தனை செய்தார். மூன்றாவது முறையும் அதையேக் கூறினார். பின் இயேசு தம் சீஷர்களிடம் திரும்பிச் சென்று அவர்களிடம், “இன்னுமா நீங்கள் தூங்கிக் கொண்டும் இளைப்பாறிக் கொண்டுமிருக்கிறீர்கள்? மனித குமாரனைப் பாவிகளிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எழுந்திருங்கள்! நாம் போக வேண்டும். இதோ வந்துவிட்டான் என்னை எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கப் போகிறவன்” என்றார். இப்படிப் பேசிக்கொண்டிருந்தபொழுதே யூதாஸ் அங்கு வந்தான், யூதாஸ் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன். அவனுடன் பலரும் இருந்தனர். அவர்கள் தலைமை ஆசாரியனாலும் மூத்த தலைவர்களாலும் அனுப்பப்பட்டவர்கள். யூதாஸூடன் இருந்தவர்கள் அரிவாள்களையும் தடிகளையும் வைத்திருந்தனர். யார் இயேசு என்பதை அவர்களுக்குக் காட்ட யூதாஸ் ஒரு திட்டமிட்டிருந்தான். அவன் அவர்களிடம், “நான் முத்தமிடுகிறவரே இயேசு. அவரைக் கைது செய்யுங்கள்” என்றான். அதன்படி யூதாஸ் இயேசுவிடம் சென்று, “வணக்கம். போதகரே!” என்று கூறி இயேசுவை முத்தமிட்டான். இயேசு, “நண்பனே, நீ செய்ய வந்த காரியத்தை செய்” என்று கூறினார். பின் யூதாஸூடன் வந்த மனிதர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டார்கள். அவரைக் கைது செய்தார்கள். இது நடந்தபொழுது, இயேசுவுடன் இருந்த சீஷர்களில் ஒருவன் தன் அரிவாளை எடுத்தான். அச்சீஷன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரனை அரிவாளால் தாக்கி அவனது காதை வெட்டினான். இயேசு அச்சீஷனைப் பார்த்து, “அரிவாளை அதன் உறையில் போடு. அரிவாளை எடுப்பவன் அரிவாளாலே சாவான். நான் என் பிதாவைக் கேட்டால் அவர் எனக்கு பன்னிரண்டு தேவ தூதர் படைகளும் அதற்கு அதிகமாகவும் அனுப்புவார் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஆனால் இது இப்படியே வேதவாக்கியங்கள் கூறுகிறபடியே நடக்க வேண்டும்” என்றார். பின்னர் இயேசு தம்மைப் பிடிக்க வந்தவர்கள் அனைவரையும் நோக்கி, “ஒரு குற்றவாளியைப் போல என்னைப் பிடிக்க அரிவாள் தடிகளுடன் வந்திருக்கிறீர்கள். நான் ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் போதனை செய்தேன். ஆனால், என்னை அங்கே கைது செய்யவில்லை. தீர்க்கதரிசிகள் எழுதி வைத்துள்ளபடியே இவை அனைத்தும் நடந்துள்ளன” என்று கூறினார். பின்பு இயேசுவின் எல்லா சீஷர்களும் அவரைத் தனியே விட்டு ஓடிப்போனார்கள்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் மத்தேயு எழுதிய சுவிசேஷம் 26
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: மத்தேயு எழுதிய சுவிசேஷம் 26:36-56
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்