மத்தேயு எழுதிய சுவிசேஷம் 5:1-12

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 5:1-12 TAERV

அங்குக் கூட்டமாயிருந்த மக்களைப் பார்த்த இயேசு ஒரு குன்றின்மீது சென்று அமர்ந்தார். அவரது சீஷர்கள் அவரிடம் வந்தார்கள். இயேசு மக்களுக்குக் கீழ்க்கண்டவாறு போதனை செய்தார்: “ஆவியில் எளிமை கொண்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது. இம்மையில் துக்கம் அடைந்த மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தேற்றுவார். பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் வாக்களித்த இடத்தை அவர்கள் பெறுவார்கள். மற்ற எதைக் காட்டிலும் நீதியான செயல்களைச் செய்ய விரும்புகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு முழுத்திருப்தியைத் தேவன் அளிப்பார். மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கருணை காட்டப்படும். தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தேவனின் அருகாமையிலிருப்பார்கள். அமைதிக்காகச் செயலாற்றுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தன் குமாரர்கள் என அழைப்பார். நன்மை செய்வதற்காகத் தண்டிக்கப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது. “உங்களுக்கெதிராகத் தீய சொற்களைப் பேசி மக்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதினிமித்தம் எல்லாவிதமான தீய சொற்களையும் உங்களுக்கெதிராகச் சொல்வார்கள். ஆனால் மக்கள் உங்களுக்கு அவற்றைச் செய்யும்பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அதற்காக மகிழ்ச்சியடையுங்கள். தேவனுடைய மகத்தான வெகுமதி உங்களுக்குக் காத்திருக்கிறது. உங்களுக்கு முன்பு வாழ்ந்த தீர்க்கதரிசிகளுக்கும் மக்கள் அதே விதமான தீமைகளைச் செய்தார்கள்.