மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:15-29

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 7:15-29 TAERV

“போலி தீர்க்கதரிசிகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களிடம் வரும் போலி தீர்க்கதரிசிகள் செம்மறியாட்டைப் போல இனிமையானவர்களாய்க் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள், ஓநாய்களைப்போல அபாயமானவர்கள். அவர்களது செயல்களிலிருந்து நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளலாம். எவ்வாறு திராட்சைப்பழம் முட்புதரிலும், அத்திப்பழம் முட்செடிகளிலும் காய்ப்பதில்லையோ அவ்வாறே நல்லவை தீய மனிதர்களிடமிருந்து வருவதில்லை. அதுபோலவே, ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனிகளையே கொடுக்கும். தீய மரங்கள் தீய பழங்களையே கொடுக்கும். அது போலவே, நல்ல மரம் தீய கனியைத் தரமுடியாது. கெட்ட மரம் நல்ல கனியைத் தரமுடியாது. நல்ல கனிகளைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும். போலியான மனிதர்களை அவர்களின் செயல்களிலிருந்து நீங்கள் அறியலாம். “என்னைத் தம் கர்த்தர் என்று கூறும் எல்லோரும் பரலோகத்திற்குள் நுழைய முடியாது. பரலோகத்தில் உள்ள என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்கள் மட்டுமே பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியும். இறுதி நாளன்று பலர் என்னிடம் ‘நீரே எங்கள் கர்த்தர். உம்மைப் போற்றினோம். அசுத்த ஆவிகளை உம் பெயரால் விரட்டினோம். அற்புதங்கள் பல செய்தோம்’ என்று கூறுவார்கள். அவர்களிடம் நான் ‘என்னை விட்டு விலகுங்கள். தவறு செய்தவர்கள் நீங்கள். உங்களை எனக்குத் தெரியாது’ என்று வெளிப்படையாகவே சொல்வேன். “என் போதனைகளைக் கேட்டு அதன்படி நடக்கிற எவனும் புத்தியுள்ளவன் ஆவான். புத்தியுள்ள மனிதன் தன் வீட்டைப் பாறையின் மேல் கட்டினான். கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்று வீசி வீட்டைத் தாக்கியது. பாறையின் மேல் கட்டப்பட்டதால் அந்த வீடு இடிந்து விழவில்லை. “என் போதனைகளைக் கேட்டுவிட்டு அதன்படி நடக்காதவர்கள் புத்தியற்ற மனிதனைப் போன்றவர்கள். புத்தியற்ற மனிதன் மணல் மீது தன் வீட்டைக் கட்டினான். கனமழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுத்தது. காற்றுவீசி வீட்டைத்தாக்கியது. பலத்த ஓசையுடன் வீடு இடிந்து விழுந்தது.” இயேசு இவற்றைக் கூறி முடித்தபொழுது, மக்கள் அவரது போதனைகளைக் குறித்து வியப்படைந்தனர். வேதபாரகராகிய நியாயப்பிரமாண ஆசிரியர்களைப் போலல்லாது, இயேசு அதிகாரம்மிக்கவராகப் போதனை செய்தார்.