நீதிமொழிகள் 1:3-14

நீதிமொழிகள் 1:3-14 TAERV

இந்த ஞானவார்த்தைகள் ஜனங்களுக்குத் தங்களுடைய மனம் நேர்மையான வழியில் செல்ல போதிக்கும். ஜனங்கள் நேர்மையோடும், நியாயத்தோடும் நல்லவர்களாகவும் தங்கள் புத்தியைச் சரியான வழியில் செலுத்த இந்த ஞானவார்த்தைகள் போதிக்கும். ஞானத்தை அடைய விரும்பும் ஜனங்களுக்கு இந்த ஞானவார்த்தைகள் போதிக்கும். இந்த ஞானவார்த்தைகள் இளந்தலைமுறையினருக்கு அவர்கள் அறிய வேண்டியவற்றையும் அதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்தும் போதிக்கும். அறிவாளிகள்கூட இந்த வார்த்தைகளைக் கவனிக்கவேண்டும். இதை அவர்கள் கற்று மேலும் ஞானிகளாவார்கள். பிரச்சனைகளைச் சரிசெய்துகொள்ளும் திறமைகொண்ட ஜனங்கள் இவற்றின்மூலம் மேலும் புரிந்துகொள்ளும் திறமையைப் பெறலாம். பின்னர் நீதிக்கதைகளையும், அதன் அர்த்தங்களையும் அந்த ஜனங்களால் புரிந்துகொள்ள முடியும். அறிவாளிகள் சொல்வதை அந்த ஜனங்களால் புரிந்துகொள்ள முடியும். ஒருவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், கர்த்தருக்கு கனம் செலுத்துவதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் கற்றுக்கொள்ளவேண்டும். அது தம்மை உண்மையான ஞானத்தைப்பெற வழிநடத்தும். ஆனால், தீய ஜனங்கள் உண்மையான ஞானத்தையும் ஒழுக்கத்தையும் வெறுக்கிறார்கள். என் மகனே! உன் தந்தை உன்னை திருத்தும்போது கீழ்ப்படியவேண்டும். நீ உன் தாயின் போதனைகளையும் தள்ளிவிடவேண்டாம். உனது தாயும் தந்தையும் சொல்லுகிற வார்த்தைகள் உன் தலைக்கு அலங்காரமான கிரீடமாக இருக்கும். அவை உன் கழுத்துக்கு அழகான மாலையாக விளங்கும். என் மகனே! பாவத்தை விரும்புகிறவர்கள், அவர்கள் உன்னையும் தீயசெயல்களை செய்யும்படி தூண்டுவார்கள். நீ அவர்களைப் பின்பற்றக் கூடாது. அந்தப் பாவிகள் உன்னிடம், “எங்களோடு வா, நாம் ஒளித்திருப்போம். ஒன்றும் அறியாதவர்களைக்கொல்லும்படிக் காத்திருப்போம். நாம் அவர்களை மரண இடத்திற்கு அனுப்புவோம். நாம் அவர்களை அழித்து கல்லறைக்கு அனுப்புவோம். நாம் விலைமதிப்புள்ள உயர்ந்த பொருட்களையெல்லாம் திருடுவோம். நாம் இவற்றால் நம் வீடுகளை நிரப்புவோம். எனவே எங்களோடு வா. இவற்றைச் செய்ய உதவு. இதில் கிடைப்பதை நாம் பங்கிட்டுக்கொள்வோம்” என்பார்கள்.