நீதிமொழிகள் 15:18-33

நீதிமொழிகள் 15:18-33 TAERV

எளிதில் கோபப்படுகிறவர்கள் துன்பங்களுக்குக் காரணமாக இருக்கிறார்கள். பொறுமையுள்ளவர்களோ சமாதானத்துக்குரியவர்கள். எல்லா இடங்களிலும் சோம்பேறி துன்பம் அடைகிறான். ஆனால் நேர்மையானவனுக்கு வாழ்வு எளிதாக இருக்கும். அறிவுள்ள குமாரன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் அறிவற்றவனோ தாய்க்கு அவமானத்தைத் தருகிறான். முட்டாள்தனமானவற்றைச் செய்வதில் அறிவற்றவன் மகிழ்கிறான். அறிவுள்ளவனோ சரியானவற்றைச் செய்வதில் எச்சரிக்கையாக இருக்கிறான். ஒருவன் போதுமான அறிவுரையைப் பெறாவிட்டால் அவனது திட்டங்கள் தோல்வியுறும். ஆனால் அறிவுள்ளவர்களின் அறிவுரைகளைக் கவனமுடன் கேட்கிறவன் தன் செயல்களில் வெற்றிபெறுகிறான். நல்ல பதிலைத் தருபவன் மகிழ்ச்சி அடைகிறான். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் சொல்வது மிகவும் நல்லது. வாழ்விக்கும் வழியைக் கடைபிடித்துத் வாழ்வடையும் நல்லவன், கீழ் நோக்கிச் செல்லும் மரணத்தின் பாதையைத் தவிர்த்துவிடுகிறான். வீண் பெருமை கொண்ட ஒருவனுக்குரிய எல்லாவற்றையும் கர்த்தர் அழிப்பார். ஒரு விதவைக்குரிய அனைத்தையும் கர்த்தர் பாதுகாக்கிறார். கர்த்தர் கெட்ட எண்ணங்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் தயவுமிக்க வார்த்தைகளில் மகிழ்கிறார். ஏமாற்றிப் பொருட்களைப் பெற்றுக்கொள்பவன், தன் குடும்பத்துக்குத் தானே துன்பத்தை வரவழைத்துக்கொண்டவனாவான். நேர்மையாக இருப்பவனுக்கோ துன்பம் இல்லை. நல்லவர்கள் பதில் சொல்லுமுன் சிந்திக்கிறார்கள். ஆனால் தீயவர்கள் சிந்திக்கும் முன்னரே பேசுகின்றனர். அவை அவர்களுக்குத் துன்பம் தரும். தீயவர்களிடமிருந்து கர்த்தர் வெகு தூரத்தில் உள்ளார். ஆனால் நல்லவர்களின் ஜெபங்களை எப்போதும் கேட்கிறார். ஒருவனின் புன்னகை மற்றவர்களை மகிழச் செய்கிறது. நல்ல செய்திகள் ஜனங்களை நல்லுணர்வுக்கொள்ளச் செய்கின்றன. நீ தவறு செய்கிறாய் என்று சொல்பவர்களைக் கவனிப்பவன் மிகவும் புத்திசாலி ஆகிறான். ஒருவன் கற்றுக்கொள்ள மறுத்தால், அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். தன் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறவனின் பேச்சைக் கவனிப்பவன் மேலும் புரிந்துகொள்கிறான். கர்த்தரை மதிக்கிறவன் அறிவுள்ளவனாகக் கற்றுக்கொள்கிறான். ஒருவன் உண்மையாகவே கர்த்தரை மதிப்பதற்கு முன்பு அவன் பணிவுள்ளவனாக இருக்கவேண்டும்.