சங்கீத புத்தகம் 27

27
தாவீதின் பாடல்.
1கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர்.
யாருக்கும் நான் பயப்படமாட்டேன்!
கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர்.
எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன்.
2தீய ஜனங்கள் என்னைத் தாக்கக்கூடும்.
என்னைத் தாக்கி என் சரீரத்தை அழிக்க என் பகைவர்கள் முயலக்கூடும்.
3ஒரு படையே என்னைச் சூழ்ந்தாலும் நான் அஞ்சமாட்டேன்.
போரில் ஜனங்கள் என்னைத் தாக்கினாலும் நான் பயப்படேன்.
ஏனெனில் நான் கர்த்தரை நம்புகிறேன்.
4எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன்.
இதுவே என் கோரிக்கை:
“என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி
கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்.”
5ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார்.
அவரது கூடாரத்தில் என்னை ஒளித்து வைப்பார்.
அவரது பாதுகாப்பிடம் வரைக்கும் என்னை அழைத்துச் செல்வார்.
6என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர்.
அவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார்.
அப்போது அவரது கூடாரத்தில் பலிகளைச் செலுத்துவேன்.
மகிழ்ச்சி ஆரவாரத்தோடு என் பலிகளை அளிப்பேன்.
கர்த்தரை, மகிமைப்படுத்தும் பாடல்களை இசைத்துப் பாடுவேன்.
7கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும்.
8கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன்.
என் இருதயத்திலிருந்து உம்மிடம் பேசவாஞ்சிக்கிறேன்.
கர்த்தாவே, உம்மிடம் பேசுவதற்காக உமக்கு முன்பாக வருகிறேன்.
9கர்த்தாவே, என்னிடமிருந்து விலகாதேயும்!
உமது ஊழியனாகிய என்னிடம் கோபங்கொண்டு, என்னைவிட்டு விலகாதேயும்!
எனக்கு உதவும்! என்னைத் தூரத்தள்ளாதிரும்.
என்னை விட்டு விடாதிரும்!
என் தேவனே, நீரே என் இரட்சகர்!
10என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர்.
ஆனால் கர்த்தர் என்னை எடுத்து தமக்குரியவன் ஆக்கினார்.
11கர்த்தாவே, எனக்குப் பகைவருண்டு.
எனவே உமது வழிகளை எனக்குப் போதியும்.
சரியான காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் போதியும்.
12எனது சத்தருக்கள் என்னைத் தாக்கினார்கள்.
என்னைப்பற்றி பொய்யுரைத்தனர்.
என்னைத் துன்புறுத்த பொய் கூறினர்.
13நான் மரிக்கும் முன்னர்
கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன்.
14கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு.
பெலத்தோடும் தைரியத்தோடும் இருந்து, கர்த்தருக்குக் காத்திரு.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீத புத்தகம் 27: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்