தீத்துவுக்கு எழுதிய கடிதம் 1:8-16

தீத்துவுக்கு எழுதிய கடிதம் 1:8-16 TAERV

தம் வீட்டில் அந்நிய மக்களை வரவேற்று உபசரிக்கிறவராகவும், நல்லவற்றின் மீது அன்புடையவராகவும் மூப்பர்கள் இருக்க வேண்டும். ஞானமும், நேர்மையுமாய் வாழ்பவராகவும், தூய்மையும், சுய கட்டுப்பாடும் உடையவராகவும் அவர் இருக்க வேண்டும். நாம் போதிக்கின்றவற்றை மூப்பர் உண்மையிலேயே பின்பற்றுபவராக இருக்கவேண்டும். உண்மையான போதனையின் மூலம் மக்களை உற்சாகப்படுத்த முடிந்தவராக அவர் இருக்க வேண்டும். உண்மையான போதனைகளுக்கு எதிரானவர்களை அவர்கள் எங்கே தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வல்லமையும் வேண்டும். பலர் பணிய மறுக்கிறார்கள். அவர்கள் வீணான வார்த்தைகளைப் பேசி மக்களைத் தவறான வழியில் நடத்திச்செல்கிறார்கள். குறிப்பாக யூதரல்லாதவர்கள் எல்லாரும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டுமென்று சொல்கிற யூதர்களை நான் குறிப்பிடுகிறேன். இத்தகையவர்களின் பேச்சு தவறானது என மக்களுக்குச் சுட்டிக்காட்டும் திறமையுடையவராக மூப்பர் இருத்தல் வேண்டும். பயனற்ற இத்தகு பேச்சுக்களைப் பேசுவதை நிறுத்த வேண்டும். எதைப் போதிக்கக் கூடாதோ அதையெல்லாம் போதித்து எல்லாக் குடும்பங்களையும் அவர்கள் அழிக்கிறார்கள். மக்களை ஏமாற்றிச் செல்வம் சேர்க்கவே அவர்கள் இவ்வாறு போதிக்கிறார்கள். கிரேத்தாவில் வசிக்கும் அவர்களின் சொந்த தீர்க்கதரிசி ஒருவர் கூட, “கிரேத்தா மக்கள் பொய்யர்கள், கெட்ட மிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள்” என்று கூறி இருக்கிறார். அந்தத் தீர்க்கதரிசி சொன்னதெல்லாம் உண்மைதான். எனவே அவர்கள் தவறானவர்கள் என்று கூறு. அவர்களிடம் நீ கண்டிப்பாக இரு. பிறகே அவர்கள் விசுவாசத்தில் பலம் பெறுவர். இவ்விதம் யூதக் கதைகளைக் கவனித்துக் கேட்பதை அவர்கள் நிறுத்துவார்கள். உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிற அவர்களின் கட்டளைகளையும் பின்பற்றுவதையும் நிறுத்துவார்கள். தூய்மையானவர்களுக்கு அனைத்தும் தூய்மையாக இருக்கும். பாவம் நிறைந்தவர்களுக்கும், நம்பிக்கை அற்றவர்களுக்கும் எதுவும் தூய்மையாக இராது. உண்மையில் அவர்களின் எண்ணங்கள் பாவம் உடையதாகும். அவர்களின் மனசாட்சி அழிக்கப்பட்டது. தேவனை அறிந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் செயல்களைப் பார்த்தால் அவர்கள் தேவனை ஏற்றுக்கொள்ளாதது தெரியும். அவர்கள் பயங்கரமானவர்கள். அவர்கள் அடக்கமில்லாதவர்கள், அவர்களால் நன்மை செய்ய இயலாது.

தீத்துவுக்கு எழுதிய கடிதம் 1:8-16 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்