14
இயேசு தமது சீடர்களை ஆறுதல்படுத்துதல்
1“உங்கள் உள்ளம் கலங்குவதற்கு இடங்கொடுக்க வேண்டாம். இறைவனில் விசுவாசமாயிருங்கள்; என்னிலும் விசுவாசமாயிருங்கள். 2என்னுடைய பிதாவின் வீட்டிலே அநேக உறைவிடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாதிருந்தால், உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தும்படி நான் அங்கு போகின்றேன் என்று உங்களுக்குச் சொல்லியிருப்பேனா? 3நான் போய், உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்திய பின்பு, திரும்பவும் வந்து, நீங்கள் என்னுடன் இருக்கும்படி உங்களை அழைத்துச் செல்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருப்பீர்கள். 4நான் போகின்ற இடத்திற்கான வழியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” என்றார்.
இயேசுவே வழி
5தோமா இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகின்றீர் என்று எங்களுக்குத் தெரியாதே. அப்படியிருக்க, அங்கு போகும் வழி எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான்.
6அதற்கு இயேசு, “வழியும், சத்தியமும், வாழ்வும் நானே. என் மூலமாய் அன்றி ஒருவனும் பிதாவிடம் வர முடியாது. 7நீங்கள் உண்மையாக என்னை அறிந்திருந்தால், என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள். இப்பொழுதிலிருந்தே நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கின்றீர்கள்” என்றார்.
8அதற்குப் பிலிப்பு, “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும். அது எங்களுக்குப் போதும்” என்றான்.
9அப்போது இயேசு அவனிடம் சொன்னதாவது: “பிலிப்புவே, நான் இவ்வளவு காலம் உங்களோடிருந்தும், நீ இன்னும் என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் கண்டிருக்கின்றவன் பிதாவைக் கண்டிருக்கிறான். அப்படியிருக்க, ‘பிதாவை எங்களுக்குக் காண்பியும்’ என்று நீ எப்படிச் சொல்லலாம்? 10நான் பிதாவில் இருக்கின்றதையும், பிதா என்னில் இருக்கின்றதையும் நீ விசுவாசிக்கவில்லையா? நான் உங்களுக்குச் சொல்கின்ற இந்த வார்த்தைகள் என்னுடையதல்ல. அவை என் பிதாவின் வார்த்தைகளே. அவர் எனக்குள் இருந்து தமது செயல்களைச் செய்கின்றார். 11நான் பிதாவில் இருக்கின்றேன் என்றும், பிதா என்னில் இருக்கின்றார் என்றும் நான் சொல்லும்போது அதை நம்புங்கள்; இல்லாவிட்டால், நான் செய்த அற்புதங்களின் பொருட்டாவது, அதை நம்புங்கள். 12நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், என்னில் விசுவாசம் வைக்கின்றவன், நான் செய்த செயல்களை அவனும் செய்வான். நான் என் பிதாவினிடத்திற்கு போகின்றபடியால், அவன் இவைகளைப் பார்க்கிலும் பெரிதான செயல்களையும் செய்வான். 13நீங்கள் என் பெயரில் எதைக் கேட்கின்றீர்களோ, அதை நான் செய்வேன். மகனால் பிதாவுக்கு மகிமை உண்டாகும்படியாக அதைச் செய்வேன். 14என்னுடைய பெயரில் நீங்கள் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்.
பரிசுத்த ஆவியானவரை வாக்களித்தல்
15“நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், நான் கொடுக்கும் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். 16நான் உங்களுக்காகப் பிதாவிடம் வேண்டிக்கொள்வேன். அப்போது அவர் காலமெல்லாம் உங்களுடன் இருக்கும்படி, இன்னொரு உறுதுணையாளரை#14:16 உறுதுணையாளரை – இதற்கு உதவியாளர், ஆறுதல்படுத்துபவர், தேற்றுபவர் ஆலோசகர், எமக்காக வாதாடுபவர் போன்ற அர்த்தங்கள் உண்டு. உங்களுக்குக் கொடுப்பார். 17அவரே உண்மையை வெளிப்படுத்தும் ஆவியானவர். இந்த உலகத்தார் அவரைக் காணாமலும், அறியாமலும் இருக்கின்றபடியால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர் உங்களுடனும் உங்களுக்குள்ளும் இருப்பதால், நீங்களோ அவரை அறிந்திருக்கிறீர்கள். 18நான் உங்களை ஆதரவற்றவர்களாக விட்டுவிட மாட்டேன். நான் உங்களிடத்தில் திரும்பவும் வருவேன். 19இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காண மாட்டாது. ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் வாழ்வதால், நீங்களும் வாழ்வீர்கள். 20அந்த நாள் வரும்போது, நான் பிதாவில் இருப்பதையும், நீங்கள் என்னில் இருப்பதையும், நான் உங்களில் இருப்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். 21என்னுடைய கட்டளைகளை ஏற்று, அவைகளுக்குக் கீழ்ப்படிகின்றவர்கள் எவர்களோ, அவர்களே என்னில் அன்பாயிருக்கின்றவர்கள். என்னில் அன்பாயிருக்கின்றவர்களை பிதா அன்பு செய்வார். நானும் அவர்களில் அன்பாயிருந்து, என்னை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன்.”
22அப்போது யூதாஸ் ஸ்காரியோத் அல்லாத மற்ற யூதாஸ் அவரிடம், “ஆண்டவரே, உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப் போகின்றீரே, அது ஏன்?” என்று கேட்டான்.
23அதற்கு இயேசு, “எவனாவது என்னில் அன்பாயிருந்தால், அவன் என்னுடைய போதனைக்குக் கீழ்ப்படிவான். என்னுடைய பிதா அவனில் அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடம் வந்து, அவனுடன் குடியிருப்போம். 24என்னில் அன்பாயிராதவன் என்னுடைய போதனைக்குக் கீழ்ப்படிய மாட்டான். நீங்கள் கேட்கின்ற இந்த வார்த்தைகள் என்னுடைய வார்த்தைகள் அல்ல; அவை என்னை அனுப்பிய பிதாவுக்குரிய வார்த்தைகள்.
25“நான் உங்களுடன் இருக்கும்போதே இவைகளையெல்லாம் உங்களுக்குச் சொல்லியிருக்கின்றேன். 26ஆனால், என்னுடைய பெயரிலே பிதா அனுப்பப் போகின்ற பரிசுத்த ஆவியானவரான உறுதுணையாளர், உங்களுக்கு எல்லாவற்றையும் போதிப்பார். நான் உங்களுக்குச் சொன்ன ஒவ்வொன்றையும் அவர் உங்களுக்கு நினைவுபடுத்துவார். 27சமாதானத்தை உங்களுக்குக் கொடுத்துவிட்டுப் போகின்றேன்; என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கின்றேன். உலகம் கொடுக்கும் விதமாய், நான் அதைக் கொடுக்கவில்லை. உங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; பயப்படவும் வேண்டாம்.
28“நான் உங்களைவிட்டுப் போகப் போகின்றேன் என்றும், உங்களிடத்தில் திரும்பி வருவேன் என்றும், நான் சொன்னதைக் கேட்டீர்கள். நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், நான் பிதாவிடம் போகின்றதைக் குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில், பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். 29அது நிகழும் முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன். அதனால் அது நிகழும்போது நீங்கள் என்னை விசுவாசிப்பீர்கள். 30இனிமேலும் நான் உங்களுடன் அதிகமாய் பேசப் போவதில்லை. ஏனெனில் இந்த உலகத்தின் அதிபதி வருகின்றான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை. 31ஆயினும் நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டிருப்பதை மட்டுமே நான் செய்கின்றேன் என்றும் உலகம் அறிந்துகொள்ள வேண்டும்.
“எழுந்திருங்கள், இப்போது நாம் இங்கிருந்து போவோம்” என்றார்.