யோவான் 3

3
மறுபிறப்பைக் குறித்த போதனை
1பரிசேயனும், யூத அதிகாரிகளில் ஒருவனுமான நிக்கொதேமு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். 2ஒரு நாள் இரவு அவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நீர் இறைவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில், இறைவனைத் தம்முடன் கொண்டிராத ஒருவரால், நீர் செய்கின்ற அற்புத அடையாளங்களை செய்ய முடியாது” என்றான்.
3இயேசு அதற்குப் பதிலாக, “நான் உனக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால்,#3:3 மறுபடியும் பிறக்காவிட்டால் – கிரேக்க மொழியில் மேலிருந்து பிறக்காவிட்டால் என்ற அர்த்தமும் உண்டு. இறைவனுடைய அரசை அவனால் கண்டுணர முடியாது” என்றார்.
4அப்போது நிக்கொதேமு அவரிடம், “வயதுசென்ற பின் ஒருவன் மீண்டும் பிறப்பது எப்படி? அவன் தன் தாயின் கர்ப்பத்திற்குள் இரண்டாவது தடவை போய் மீண்டும் பிறக்க முடியுமா?” என்றான்.
5இயேசு அதற்குப் பதிலாக, “நான் உனக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், ஒருவன் தண்ணீரினாலும், ஆவியானவரினாலும் பிறவாவிட்டால், அவன் இறைவனுடைய அரசுக்குள் போக முடியாது. 6மனிதனால் பிறப்பது மனிதனாய் இருக்கும்; ஆனால் ஆவியானவரால் பிறப்பது ஆவியாய் இருக்கும் 7‘நீங்கள் மறுபடியும் பிறந்திட வேண்டும்’ என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து நீ வியப்படையக் கூடாது. 8#3:8 காற்று – கிரேக்க மொழியில் ஆவி என்று இன்னொரு அர்த்தமும் உண்டு.காற்று தான் விரும்பிய இடத்தை நோக்கியே வீசுகிறது; அதன் சத்தத்தைக் கேட்கிறாய். ஆனால் அது எங்கிருந்து வருகின்றது என்றோ, அது எங்கே போகின்றது என்றோ உனக்குத் தெரியாது. ஆவியானவரால் பிறந்த ஒவ்வொருவனது பிறப்பும் இப்படியே இருக்கின்றது” என்றார்.
9அப்போது நிக்கொதேமு, “இது எப்படி சாத்தியமாகும்?” என்று கேட்டான்.
10இயேசு அவனிடம், “நீ இஸ்ரயேல் மக்களுடைய ஆசிரியனாய் இருந்தும், உன்னால் இவைகளை விளங்கிக்கொள்ள முடியவில்லையா? 11நான் உனக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், நாங்கள் அறிந்ததைப் பேசுகின்றோம். நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சி சொல்கின்றோம். ஆயினும் நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றீர்கள். 12நான் உங்களுக்கு பூமிக்குரிய காரியங்களைக் குறித்துச் சொன்னதையே விசுவாசிக்காமல் இருக்கின்றீர்கள்; அப்படியிருக்க பரலோக காரியங்களைக் குறித்து நான் சொன்னால், அதை நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? 13பரலோகத்தில் இருந்து வந்தவரான மனுமகனைத் தவிர, ஒருவனும் ஒருபோதும் பரலோகத்திற்குள் போனதில்லை. 14பாலைநிலத்திலே மோசே, பாம்பை மேலே உயர்த்தியதைப் போல மனுமகனும் மேலே உயர்த்தப்பட வேண்டும். 15அதனால், மனுமகனில் விசுவாசமாயிருக்கின்ற ஒவ்வொருவனும் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.
16“ஏனெனில், இறைவன் உலகத்தவர்களை அதிகமாய் நேசித்தபடியால், தனது ஒரே மகனைக் கொடுத்தார். அவரில் விசுவாசமாயிருக்கின்றவன் எவனோ, அவன் கெட்டழிந்து போகாமல், நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ளும்படியே அப்படிச் செய்தார். 17உலகத்தவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பளிக்க, இறைவன் தமது மகனை இவ்வுலகிற்கு அனுப்பவில்லை. அவர் மூலமாக உலகத்தவர்களை இரட்சிப்பதற்காகவே அவரை அனுப்பினார். 18அவரில் விசுவாசமாயிருக்கின்ற எவருக்கும் நியாயத்தீர்ப்பு இல்லை. ஆனால் அவரை விசுவாசிக்காதவர்களுக்கோ ஏற்கெனவே நியாயத்தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஏனெனில் அவர்கள் இறைவனுடைய ஒரே மகனை#3:18 மகனை – கிரேக்க மொழியில் மகனின் பெயரில் என்றுள்ளது. நம்பவில்லை. 19அவர்களின் நியாயத்தீர்ப்புக்கான காரணம் இதுவே: உலகத்திற்குள் ஒளி வந்தது. மனிதர்களோ ஒளியை அல்ல, இருளையே விரும்பினார்கள். ஏனெனில் அவர்களது செயல்கள் தீயவைகளாய் இருந்தன. 20தீயசெயலைச் செய்கின்ற ஒவ்வொருவனும், வெளிச்சத்தை வெறுக்கிறான். அவன் வெளிச்சத்திற்குள் வர மாட்டான். தன் தீய செயல்கள் பகிரங்கமாகி விடும் என்று அவன் பயப்படுகிறான். 21ஆனால் உண்மையின்படி வாழ்கின்றவனோ, வெளிச்சத்திற்குள் வருகின்றான். தன் செயல்கள் அனைத்தும், இறைவனின் விருப்பப்படியே செய்யப்பட்டிருப்பதால், அது தெளிவாகத் தெரியும்படி, அவன் வெளிச்சத்திற்குள் வருகின்றான்” என்றார்.
இயேசுவைக் குறித்த யோவான் ஸ்நானகனின் சாட்சி
22இதற்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயாவின் நாட்டுப் புறத்துக்கு வந்தார்கள். அங்கே அவர் சிறிது காலம் அவர்களுடன் தங்கி, மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். 23சாலிமுக்கு அருகே இருந்த அயினோன் என்ற இடத்தில், தண்ணீர் அதிகமாய் இருந்ததால் அங்கே யோவானும் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தான். ஞானஸ்நானம் பெறுவதற்காக மக்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தார்கள். 24இது யோவான் சிறைக்குள் இடப்படும் முன்னே நடைபெற்றது. 25யோவானுடைய சீடர்களுக்கும் சில யூதர்களுக்கும் இடையில், சம்பிரதாய சுத்திகரிப்பைக் குறித்து விவாதம் ஏற்பட்டது. 26யோவானுடைய சீடர்கள் யோவானிடத்தில் வந்து அவனிடம், “போதகரே, யோர்தானுக்கு அக்கரையில் உம்மோடிருந்த ஒருவரைக் குறித்து நீர் சாட்சி கொடுத்தீரே. அவரும் ஞானஸ்நானம் கொடுக்கின்றார். எல்லோரும் அவரிடம் போகின்றார்களே” என்றார்கள்.
27யோவான் அதற்குப் பதிலாக, “ஒருவர், பரலோகத்திலிருந்து கொடுக்கப்படுவதை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். 28‘நான் மேசியா அல்ல, அவருக்கு முன்பாக அனுப்பப்பட்டவன்’ என்று நான் சொன்னதற்கு நீங்களே எனக்குச் சாட்சிகள். 29மணப்பெண் யாருக்கு உரியவளோ, அவரே மணமகன். மணமகனின் தோழனோ, அவர் அருகே நின்று அவர் சொல்வதைக் கேட்கின்றான். அவன் மணமகனுடைய குரலைக் கேட்டு, மனமகிழ்ச்சி அடைகிறான். அதுவே எனக்குரியதான மனமகிழ்ச்சி. அது இப்போது நிறைவடைந்திருக்கின்றது. 30அவர் பெருகவும், நான் சிறுகவும் வேண்டும்.
31“மேலே இருந்து வருகின்றவர், எல்லோருக்கும் மேலானவராக இருக்கின்றார்; கீழே உலகத்திலிருந்து வருகின்றவனோ, உலகத்திற்கே சொந்தமாயிருக்கிறான். அவன் உலகத்திற்குரிய விதமாகவே பேசுகின்றான். பரலோகத்திலிருந்து வருகின்றவரோ, எல்லோரிலும் மேலானவராக இருக்கின்றார். 32அவர் தாம் கண்டதையும் கேட்டதையும் குறித்து சாட்சி கூறுகிறார். ஆனால் அவருடைய சாட்சியையோ ஒருவரும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றார்கள். 33அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்கின்றவனோ, இறைவன் உண்மையுள்ளவர் என்பதை உறுதிப்படுத்துகிறான். 34இறைவனால் அனுப்பப்பட்டவரோ, இறைவனுடைய வார்த்தைகளைப் பேசுகின்றார். ஏனெனில், இறைவன் அவருக்கு ஆவியானவரை அளவின்றிக் கொடுத்திருக்கிறார். 35பிதா மகனை நேசிப்பதால், அவர் எல்லாவற்றையும் மகனுடைய கைகளிலே ஒப்படைத்திருக்கிறார். 36இறைவனின் மகனில் விசுவாசமாயிருக்கின்றவன் எவனோ, அவனுக்கு நித்திய வாழ்வு உண்டு. இறைவனின் மகனைப் புறக்கணிக்கின்றவன் எவனோ, அவன் அந்த வாழ்வைக் காண மாட்டான். ஏனெனில், இறைவனுடைய உக்கிர கோபம் அவன்மீது நிலைத்திருக்கும்” என்றான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யோவான் 3: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்