யோவான் 9

9
பிறவியிலே பார்வையற்றிருந்த ஒருவனை இயேசு குணமாக்குதல்
1இயேசு நடந்து போகையில், பிறந்ததிலிருந்தே பார்வையற்றிருந்த ஒருவனைக் கண்டார். 2அவருடைய சீடர்கள் அவரிடம், “போதகரே, இவன் பார்வையற்றவனாய் பிறந்தது யார் செய்த பாவத்தினால்? இவனுடைய பாவத்தினாலா? அல்லது இவனுடைய பெற்றோரின் பாவத்தினாலா?” என்று கேட்டார்கள்.
3இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “இவனுடைய பாவத்தினாலோ, இவனுடைய பெற்றோரின் பாவத்தினாலோ அல்ல. இவனுடைய வாழ்க்கையில் இறைவனுடைய செயல்கள் வெளிப்படும்படியாகவே இப்படி ஏற்பட்டிருக்கிறது. 4பகல் வேளையாய் இருக்கும்போதே, என்னை அனுப்பியவருடைய வேலையை நாம் செய்ய வேண்டும். இரவு வருகின்றது, அப்போது ஒருவராலும் வேலை செய்ய முடியாது. 5நான் உலகத்தில் இருக்கையில், நானே உலகத்தின் ஒளியாய் இருக்கின்றேன்” என்றார்.
6அவர் இவைகளைச் சொன்ன பின், தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சிறிதளவு சேறுண்டாக்கி, அவனுடைய கண்களிலே அதைப் பூசினார். 7பின்பு அவர் அவனிடம், “நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு” என்றார். சீலோவாம் என்பதன் அர்த்தம், “அனுப்பப்பட்டவன்” என்பதாகும். அவன் அப்படியே போய் கழுவி, பார்வையடைந்து வீடு திரும்பினான்.
8அவனுடைய அயலவரும் முன்பு அவன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்ததைக் கண்டவர்களும், “இங்கே உட்கார்ந்திருந்து பிச்சை கேட்டவன் இவன் அல்லவா?” என்றார்கள். 9சிலர், “இது அவன் தான்” என்றார்கள்.
இன்னும் சிலர், “இல்லை, இது அவனைப் போன்ற வேறொருவன்” என்றார்கள்.
ஆனால் அவனோ, “நான்தான் அவன்” என்றான்.
10அப்போது அவர்கள் அவனிடம், “அப்படியானால் உனக்கு எப்படி பார்வை கிடைத்தது?” என்றார்கள்.
11அதற்கு அவன், “இயேசு என்று அழைக்கப்படும் ஒருவர் சிறிதளவு சேறுண்டாக்கி, அதை என் கண்களில் பூசி, சீலோவாம் குளத்தில் போய் கழுவும்படி எனக்குச் சொன்னார். அப்படியே நான் போய் கழுவியபோது, என்னால் பார்க்க முடிந்தது” என்றான்.
12அப்போது அவர்கள் அவனிடம், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவன், “எனக்குத் தெரியாது” என்றான்.
பரிசேயரின் விசாரணை
13முன்பு பார்வையற்றிருந்த அந்த மனிதனை, மக்கள் பரிசேயரிடம் கொண்டுவந்தார்கள். 14இயேசு சேறு உண்டாக்கி, அந்த மனிதனின் கண்களைத் திறந்த நாள் ஒரு ஓய்வுநாளாயிருந்தது. 15எனவே பரிசேயரும் அவனிடம், “நீ எப்படிப் பார்வை பெற்றாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “அவர் எனது கண்களில் சேற்றைப் பூசினார். நான் அதைக் கழுவினேன். இப்போது நான் பார்க்கின்றேன்” என்றான்.
16அப்போது பரிசேயரில் சிலர் இயேசுவைக் குறித்து, “இவன் இறைவனிடமிருந்து வந்தவனல்ல. ஏனெனில் இவன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளவில்லையே” என்றார்கள்.
அதற்கு மற்றவர்கள், “பாவியான ஒருவனால், இப்படிப்பட்ட அற்புத அடையாளங்களை எப்படிச் செய்ய முடியும்?” என்றார்கள். அதனால் அவர்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டது.
17அவர்கள் மீண்டும் அந்த பார்வையற்றவனைப் பார்த்து, “உனது கண்களைத் திறந்தாரே, அவரைக் குறித்து நீ என்ன சொல்கின்றாய்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவன், “அவர் ஒரு இறைவாக்கினர்” என்றான்.
18அந்த மனிதனுடைய பெற்றோரை அழைத்து விசாரிக்கும் வரைக்கும், பார்வையற்றவனாய் இருந்தவன் இப்போது பார்வையடைந்திருக்கிறான் என்பதை யூதர்கள் நம்பவில்லை. 19அவர்கள் அவனுடைய பெற்றோரிடம், “இவன்தானா உங்கள் மகன்? இவன் பார்வையற்றவனாய்ப் பிறந்தான் என்று சொல்கின்றீர்களே, இப்போது எப்படி பார்வையடைந்தான்?” என்று கேட்டார்கள்.
20அதற்கு அவனுடைய பெற்றோர், “இவன் எங்கள் மகன் என்பதும், இவன் பார்வையற்றவனாய் பிறந்தான் என்பதும் எங்களுக்குத் தெரியும். 21ஆனால் இவனால் இப்போது எப்படிப் பார்க்க முடிகிறது என்பதோ, இவனுடைய கண்களைத் திறந்தது யார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனையே கேளுங்கள். அவன் வயது வந்தவனாய் இருக்கின்றானே; அவனே தனக்காகப் பேசுவான்” என்றார்கள். 22அவனுடைய பெற்றோர் யூதருக்குப் பயந்தபடியினாலேயே இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவை எவனாவது மேசியா என ஏற்றுக்கொண்டால், அவன் ஜெபஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தீர்மானித்திருந்தார்கள். 23அதனாலேயே அவனுடைய பெற்றோர், “அவன் வயது வந்தவன்; அவனையே கேளுங்கள்” என்று சொன்னார்கள்.
24பார்வையற்றவனாயிருந்த அவனை அவர்கள் இரண்டாவது முறையாகவும் அழைத்து, “நீ இறைவனுக்கு மகிமையைக் கொடு. அவன் ஒரு பாவி என்று எங்களுக்குத் தெரியும்” என்றார்கள்.
25அதற்கு அவன், “அவர் ஒரு பாவியோ இல்லையோ எனக்குத் தெரியாது. எனக்கு ஒன்று மட்டும் தெரியும். நான் பார்வையற்றிருந்தேன், இப்போது பார்க்கின்றேன்!” என்றான்.
26அப்போது அவர்கள் அவனிடம், “அவன் உனக்கு என்ன செய்தான்? அவன் எப்படி உன் கண்களைத் திறந்தான்?” என்று கேட்டார்கள்.
27அவன் பதிலளித்து, “ஏற்கெனவே நான் உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மறுபடியும் ஏன் அதைக் கேட்கின்றீர்கள்? நீங்களும் அவருடைய சீடர்களாக விரும்புகிறீர்களோ?” என்று கேட்டான்.
28அப்போது அவர்கள் ஆத்திரத்துடன் அவனை அவமதித்துப் பேசி, “நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயின் சீடர்கள். 29மோசேயுடன் இறைவன் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இவனைப் பற்றியோ, இவன் எங்கிருந்து வந்தான் என்றோ எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.
30அதற்கு அவன், “இது மிகவும் விசித்திரமாக இருக்கின்றது! நீங்களோ, அவர் எங்கிருந்து வந்தவர் என்பதே தெரியாது என்கின்றீர்கள். ஆனால் அவரோ எனக்குப் பார்வை தந்து என் கண்களைத் திறந்துவிட்டிருக்கின்றார். 31பாவிகளின் மன்றாடலை இறைவன் கேட்பதில்லை என்பது நமக்குத் தெரியும். மாறாக தமது திட்டத்தைச் செய்கின்ற இறைபக்தியுள்ளவனின் மன்றாடலையே அவர் கேட்கின்றார். 32பிறந்ததிலிருந்து பார்வையற்றிருந்த ஒருவனுடைய கண்கள் திறக்கப்பட்டு அவன் பார்வையடைந்ததாக, ஒருவருமே ஒருபோதும் கேள்விப்பட்டதே இல்லை. 33அவர் இறைவனிடமிருந்து வந்திராவிட்டால், அவரால் ஒன்றையுமே செய்திருக்க முடியாது” என்றான்.
34அதற்கு அவர்கள், “பிறப்பிலேயே பாவத்தில் மூழ்கியிருந்த நீ எங்களுக்குப் போதிக்கத் துணிந்துவிட்டாயோ!” என்று சொல்லி அவனை வெளியே தள்ளிவிட்டார்கள்.
ஆவிக்குரிய பார்வை குறைபாடு
35யூதர்கள் அவனை வெளியே தள்ளிவிட்டார்களென்று இயேசு கேள்விப்பட்டார். அவர் அவனைத் திரும்பவும் கண்டபோது, “நீ மனுமகனில் விசுவாசமாயிருக்கின்றாயா?” என்று கேட்டார்.
36அதற்கு அவன், “ஐயா, அவர் யார் என்று சொல்லும். அப்போது நான் அவர்மீது விசுவாசம் வைக்கிறேன்” என்றான்.
37அதற்கு இயேசு, “நீ அவரைக் கண்டிருக்கிறாய்; இப்போது உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறவரே அவர்” என்றார்.
38அதற்கு அவன், “ஆண்டவரே, நான் விசுவாசிக்கின்றேன்” என்று சொல்லி, அவரை வழிபட்டான்.
39அப்போது இயேசு, “நியாயத்தீர்ப்பிற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன். இதனால் பார்வையற்றவர்கள் காண்பார்கள். காண்கின்றவர்கள் பார்வையற்றவராவார்கள்” என்றார்.
40அப்போது அவருடன் இருந்த சில பரிசேயர்கள் இதைக் கேட்டு, “என்ன! நாங்களும் பார்வையற்றவர்களோ?” என்று கேட்டார்கள்.
41அதற்கு இயேசு, “நீங்கள் பார்வையற்றவர்களாயிருந்தால், பாவத்தின் குற்றம் உங்கள் மீது சுமத்தப்பட மாட்டாது; ஆனால் உங்களால் பார்க்க முடியும் என்று நீங்கள் சொல்கின்றபடியால், உங்களது குற்றம் நிலைத்திருக்கின்றது” என்றார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யோவான் 9: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்