18
விடாமுயற்சியுள்ள விதவையின் உவமை
1அதன்பின்பு இயேசு, தமது சீடர்கள் மனந்தளர்ந்து போகாமல், எப்போதும் மன்றாடுகின்றவர்களாய் இருக்க வேண்டும் என்பதைக் காண்பிப்பதற்காக, அவர்களுக்கு ஒரு உவமையைக் கூறினார்: 2“ஒரு பட்டணத்திலே ஒரு நீதிபதி இருந்தான். அவன் இறைவனுக்குப் பயப்படாதவன், மக்களையும் மதிக்காதவன். 3அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள். அவள் தொடர்ந்து அவனிடம் வந்து, ‘எனது பகைவனுக்கு எதிராக எனக்கு நீதி வழங்குங்கள்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டாள்.
4“கொஞ்சக் காலம் அவன் அப்படிச் செய்ய மறுத்தான். ஆனாலும் இறுதியாக அவன், ‘நானோ இறைவனுக்குப் பயப்படாதவன், மனிதரையும் மதிக்காதவன். இருந்தாலும்கூட, 5இந்த விதவை தொடர்ந்து எனக்குத் தொந்தரவு கொடுக்கின்றாள்; அதனால், நான் அவளுக்கு நீதி வழங்குவேன். அப்போது அவள் இப்படித் தொடர்ந்து வந்து, என்னைத் தொந்தரவு செய்ய மாட்டாள்’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்” என்றார்.
6பின்னும் ஆண்டவர், “அநீதியான அந்த நீதிபதி சொன்னதைக் கேட்டீர்களா? 7அப்படியிருக்கும்போது, தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும், தம்மால் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு, இறைவன் நீதியை வழங்காதிருப்பாரோ? அவர் நீதி வழங்கத் தாமதிப்பாரோ? 8நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவர்களுக்கு அவர் விரைவாகவே நீதி வழங்குவார். ஆயினும் மனுமகன் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ?” என்றார்.
பரிசேயனும் வரி சேகரிப்பவனும்
9தங்களை நீதிமான்கள் என்று நினைத்துக்கொண்டு, மற்றவர்களைக் கீழ்த்தரமாய் எண்ணிய சிலரைக் குறித்து, இயேசு இந்த உவமையைச் சொன்னார்: 10“இரண்டு பேர் மன்றாடும்படி ஆலயத்திற்குப் போனார்கள். அதில் ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி சேகரிப்பவன். 11அந்தப் பரிசேயன் எழுந்து நின்று, ‘இறைவனே, நான் மற்ற மனிதர்களைப் போலவோ, கள்வர்கள், தீயவர்கள், தகாத உறவில் ஈடுபடுகின்றவர்கள் அல்லது இந்த வரி சேகரிப்பவனைப் போலவோ இல்லாதபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். 12வாரத்தில் நான் இரண்டு தடவை உபவாசிக்கிறேன், எனது எல்லா வருமானத்திலும் பத்திலொன்றைக் கொடுக்கின்றேன்’ என்று தனக்குத்தானே சொல்லி மன்றாடினான்.
13“ஆனால், வரி சேகரிப்பவனோ தூரமாய் நின்று, வானத்தை நோக்கிப் பார்க்கவும் துணியாமல், தன் மார்பில் அடித்துக்கொண்டு, ‘இறைவனே, பாவியான எனக்கு இரக்கம் காட்டும்’ என்றான்.
14“நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பரிசேயன் அல்ல, இவனே இறைவனுடைய பார்வையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாகத் தீர்க்கப்பட்டு, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான். ஏனெனில், தன்னைத் தானே உயர்த்துகின்ற எவனும் தாழ்த்தப்படுவான்; தன்னைத் தானே தாழ்த்துகின்றவன் உயர்த்தப்படுவான்.”
சிறு பிள்ளைகளும் இயேசுவும்
15குழந்தைகளை இயேசு தொட வேண்டும் என்பதற்காக, மக்கள் அவர்களையும் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடர்கள் இதைக் கண்டபோது, அவர்களைக் கண்டித்தார்கள். 16ஆனால் இயேசுவோ பிள்ளைகளைத் தம்மிடம் வரவழைத்து, “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது. 17உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எவனாவது ஒரு சிறு பிள்ளையைப் போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் ஒருபோதும் அதற்குள் செல்ல மாட்டான்” என்றார்.
செல்வந்தனும் இறையரசும்
18அப்போது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
19அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கின்றாய்? இறைவனைத் தவிர நல்லவர் எவருமில்லையே. 20‘தகாத உறவுகொள்ளாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச் சாட்சி சொல்லாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே”#18:20 யாத். 20:12-16; உபா. 5:16-20 என்றார்.
21அதற்கு அவன், “என்னுடைய சிறு வயதிலிருந்தே, இவற்றையெல்லாம் நான் கடைப்பிடித்து வந்திருக்கிறேன்” என்றான்.
22இயேசு இதைக் கேட்டபோது, அவர் அவனிடம், “உன்னிடம் இன்னும் ஒரு குறைபாடு இருக்கின்றது. உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்போது பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
23இதைக் கேட்டபோது அவன் மிகவும் துக்கமடைந்தான். ஏனெனில், அவன் மிகுந்த செல்வமுடையவனாய் இருந்தான். 24இயேசு அவனைப் பார்த்து, “பணக்காரர்கள் இறைவனுடைய அரசிற்குள் செல்வது எவ்வளவு கடினமாய் இருக்கின்றது! 25பணக்காரன் ஒருவன் இறைவனுடைய அரசிற்குள் செல்வதைவிட, ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள்ளாக நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார்.
26இதைக் கேட்டவர்களோ, “அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?” என்று கேட்டார்கள்.
27அதற்கு இயேசு, “மனிதரால் செய்ய முடியாதவற்றை, இறைவனால் செய்ய முடியும்” என்றார்.
28பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக, எங்களிடம் உள்ளதையெல்லாம் கைவிட்டு வந்தோமே” என்றான்.
29அதற்கு இயேசு, “ஒருவன் இறைவனுடைய அரசின் பொருட்டு, வீட்டையோ மனைவியையோ சகோதரர்களையோ பெற்றோரையோ பிள்ளைகளையோ விட்டுவிட்டிருந்தால், 30அவன் இந்த வாழ்வில் பல மடங்கு அதிகமாகப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் தவறாது பெற்றுக்கொள்வான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன்” என்றார்.
இயேசு தமது மரணத்தை முன்னறிவித்தல்
31இயேசு பன்னிருவரையும் ஒரு பக்கமாய் அழைத்து அவர்களிடம், “நாம் எருசலேமுக்குப் போகின்றோம், மனுமகனைப்பற்றி இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கின்ற எல்லாம் நிறைவேறும். 32மனுமகன் யூதரல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் அவரை ஏளனம் செய்து, அவமதித்து, அவர்மீது துப்பி, 33அவரைச் சாட்டையினால் அடித்து, கொலை செய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலோ, அவர் உயிருடன் எழுந்திருப்பார்” என்று சொன்னார்.
34சீடர்களோ, இவைகளில் ஒன்றையும் விளங்கிக்கொள்ளவில்லை. அவர் சொன்னதன் அர்த்தம் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது. அவர் பேசுவதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
கண் பார்வையற்றவன் பார்வையடைதல்
35இயேசு எரிகோவை நெருங்கியபோது, பார்வையற்ற ஒருவன் வீதி ஓரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். 36மக்கள் கூட்டமாகச் செல்லுகின்ற சத்தத்தை அவன் கேட்டு, என்ன நடக்கின்றதென்று விசாரித்தான். 37அதற்கு அவர்கள், “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு போகின்றார்” என்று அவனுக்குச் சொன்னார்கள்.
38உடனே அவன், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் காட்டும்” என்று சத்தமாய் அழைத்தான்.
39முன்னால் போய்க் கொண்டிருந்தவர்கள், அவனை சத்தமிடாதிருக்கும்படி அதட்டினார்கள். ஆனால் அவனோ, “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் காட்டும்” என்று இன்னும் அதிக சத்தமாய் அழைத்தான்.
40இயேசு நின்று, அந்த மனிதனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனிடம், 41“நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “ஆண்டவரே, நான் பார்வையடைய விரும்புகிறேன்” என்றான்.
42இயேசு அவனிடம், “நீ பார்வையைப் பெற்றுக்கொள்; உன்னுடைய விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது” என்றார். 43உடனே அவன் பார்வை பெற்று, இறைவனைத் துதித்துக்கொண்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றான். இதைக் கண்ட எல்லா மக்களும் இறைவனைத் துதித்தார்கள்.