மத்தேயு 10

10
இயேசு பன்னிருவரை அனுப்புதல்
1இயேசு தமது பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்திற்கு அழைத்து, தீய ஆவிகளை விரட்டவும், எல்லாவிதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
2அந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்களின்#10:2 அப்போஸ்தலர்களின் அல்லது திருத்தூதர்கள் பெயர்களாவன:
முதலாவது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவனுடைய சகோதரன் அந்திரேயா;
செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான்;
3பிலிப்பு, பர்த்தொலொமேயு;
தோமா, வரி சேகரிப்பவனாகிய மத்தேயு,
அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு;#10:3 ததேயு மறுபெயர் லெபேயு அல்லது யூதா
4கானானியனாகிய சீமோன்,#10:4 சீமோன் அல்லது செலோத்தே என்றழைக்கப்பட்ட சீமோன் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் ஸ்காரியோத்து ஆகியோர்.
5இயேசு இந்த பன்னிரண்டு பேருக்கும் இந்த அறிவுறுத்தல்களைச் சொல்லி அனுப்பினார்: “நீங்கள் யூதரல்லாதவர்களிடம் போக வேண்டாம், சமாரியர்களின் எந்த பட்டணத்திற்குள்ளும் செல்ல வேண்டாம். 6வழி தவறிப் போன செம்மறியாடுகளான இஸ்ரயேலர்களிடம் மட்டும் போங்கள். 7நீங்கள் போகும்போது, ‘பரலோக அரசு சமீபித்து வருகின்றது’ என்ற செய்தியைப் பிரசங்கியுங்கள். 8நோயுற்றோரை குணமாக்குங்கள், இறந்தவர்களை எழுப்புங்கள், தொழுநோயாளர்களைச் சுத்தப்படுத்துங்கள், பேய்களை விரட்டுங்கள். நீங்கள் விலை கொடுத்து வாங்கவில்லை, எனவே விலையின்றிக் கொடுங்கள்.
9“நீங்கள் போகும்போது, எவ்விதமான தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளை உங்கள் இடுப்பில் உள்ள பணப் பையில் கொண்டுபோக வேண்டாம்; 10பயணப் பையையோ, மாற்று உடையையோ, காலணிகளையோ, கைத்தடியையோ கொண்டுபோக வேண்டாம்; ஏனெனில் வேலையாளுக்கு உரியது அவனுக்குக் கொடுக்கப்படும். 11நீங்கள் எந்தவொரு பட்டணத்திற்குள்ளோ கிராமத்திற்குள்ளோ சென்றாலும், அங்கே தகுதியுள்ள ஒருவனைத் தேடி, நீங்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்படும் வரை அவனுடைய வீட்டிலேயே தங்கியிருங்கள். 12அந்த வீட்டிற்குள் செல்லும்போது, உங்கள் வாழ்த்துதலை அறிவியுங்கள். 13அந்த வீடு தகுதியுள்ளதாக இருந்தால், உங்கள் சமாதானம் அவ்வீட்டில் தங்கட்டும்; இல்லையானால், உங்கள் சமாதானம் உங்களிடம் திரும்பி வரும். 14எவராவது உங்களை வரவேற்காமலோ, உங்கள் வார்த்தையைக் கேட்பதற்கு மனதற்றவர்களாகவோ இருந்தால், நீங்கள் அந்த வீட்டையோ, பட்டணத்தையோவிட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறி விடுங்கள். 15நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நியாயத்தீர்ப்பு நாளில், அந்தப் பட்டணத்திற்குக் கிடைக்கப் போவதைவிட சோதோம், கொமோரா#10:15 இப்பட்டணங்களைப்பற்றி அறிய ஆதி. 19 பார்க்கவும் பட்டணங்களுக்குக்#10:15 நியாயத்தீர்ப்பின் நாளிலே அந்தப் பட்டணத்திற்குக் கிடைக்கப் போவது கடுமையாக இருக்கும் என்பதே இதன் அர்த்தம் கிடைக்கும் தண்டனையானது தாங்கக் கூடியதாக இருக்கும்.
16“செம்மறியாடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புவது போல நான் உங்களை அனுப்புகிறேன். ஆகையால் பாம்புகளைப் போல விவேகம் உள்ளவர்களாயும், புறாக்களைப் போல கபடமற்றவர்களாயும் இருங்கள். 17மனிதரைக் குறித்து விழிப்பாயிருங்கள்; அவர்கள் உங்களைத் தங்கள் நியாயசபைகளில் ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெபஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள். 18என் பொருட்டாக ஆளுநர்களுக்கும், அரசர்களுக்கும் முன்பாக நீங்கள் கொண்டுபோகப்படுவீர்கள். அவர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் முன்னால், நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள். 19அவர்கள் உங்களைக் கைது செய்யும்போது, என்ன பேசுவது, எப்படிப் பேசுவது எனக் கவலைப்படாதிருங்கள். அந்த நேரத்தில், பேச வேண்டிய வார்த்தை உங்களுக்குக் கொடுக்கப்படும். 20ஏனெனில் பேசுவது நீங்களல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்கள் மூலமாகப் பேசுவார்.
21“சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக் கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக் கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராகக் கலகம் செய்து, அவர்களை சாவுக்கு உட்படுத்துவார்கள். 22என்னைப் பின்பற்றும் காரணமாக#10:22 என்னைப் பின்பற்றும் காரணமாக அல்லது என் பெயரின் காரணமாக. எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவு வரை உறுதியாய் நிற்பவனே இரட்சிக்கப்படுவான். 23நீங்கள் ஒரு இடத்தில் துன்புறுத்தப்படுகையில், வேறொரு இடத்திற்குத் தப்பியோடுங்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், மனுமகன் வருவதற்கு முன்னால், நீங்கள் இஸ்ரயேலின் பட்டணங்கள் முழுவதையும் சுற்றி முடிக்க மாட்டீர்கள்.
24“பயிற்சி பெறுபவன் தனக்குப் பயிற்சி கொடுப்பவனைவிட மேலானவன் அல்ல. ஒரு வேலைக்காரன் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல. 25பயிற்சி பெறுபவன் தனக்குப் பயிற்சி கொடுப்பவனைப் போலவும், வேலைக்காரன் தனது எஜமானைப் போலவும் இருந்தால், அதுவே போதுமானது. ஒரு வீட்டின் தலைவன் பெயெல்செபூல் என அழைக்கப்பட்டால், அவன் குடும்பத்தார் அதைவிட எவ்வளவு அதிகமாக தூற்றப்படுவார்கள்!
26“எனவே, அவ்வாறு பயமுறுத்துகிறவர்களுக்குப் பயப்பட வேண்டாம். மறைத்து வைக்கப்பட்டது எதுவும் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதும் இல்லை, ஒளித்து வைக்கப்படுவது எதுவும் வெளியே தெரியாமல் போவதும் இல்லை. 27நான் உங்களுக்கு இருளில் சொன்னவற்றை, பகல் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; உங்கள் காதில் மெதுவாய் சொன்னதை, கூரையின் மேலிருந்து அறிவியுங்கள். 28உடலைக் கொன்றாலும் ஆத்துமாவைக் கொல்ல முடியாதவர்களுக்குப் பயப்பட வேண்டாம். உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். 29ஒரு சிறு தொகைப் பணத்திற்கு, இரண்டு சிட்டுக் குருவிகள் விற்கப்படுகின்றன அல்லவா? ஆனாலும், அவற்றில் ஒன்றேனும் உங்கள் பிதாவின் அனுமதி இல்லாமல், நிலத்திலே விழுவதில்லை. 30உங்கள் தலைமுடிகளின் எண்ணிக்கையும் அறியப்பட்டிருக்கின்றது. 31எனவே பயப்பட வேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும், அதிக பெறுமதியுடையவர்கள்.
32“மனிதருக்கு முன்பாக என்னை யார் ஏற்றுக்கொள்கின்றார்களோ, பரலோகத்தில் இருக்கின்ற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை ஏற்றுக்கொள்வேன். 33மனிதருக்கு முன்பாக யார் என்னை மறுதலிக்கிறார்களோ, பரலோகத்திலிருக்கின்ற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை மறுதலிப்பேன்.
34“பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என நீங்கள் நினைக்க வேண்டாம். நான் சமாதானத்தை அல்ல, முரண்பாட்டை உருவாக்கவே வந்தேன்.
35“ஏனெனில், ‘ஒருவனை அவனது தகப்பனுக்கு எதிராகவும்,
ஒரு மகளை அவளது தாய்க்கு எதிராகவும்,
ஒரு மருமகளை அவளது மாமியாருக்கு எதிராகவும் முரண்படச் செய்யவே நான் வந்தேன்.
36ஒருவனுக்கு அவனுடைய சொந்தக் குடும்பத்தவர்களே எதிரிகளாய் இருப்பார்கள்.’#10:36 மீகா 7:6
37“தன் தகப்பனையோ, தாயையோ என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எவனும், எனக்குத் தகுதியுடையவன் அல்ல; தனது மகனையோ மகளையோ, என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எவனும், எனக்குத் தகுதியுடையவன் அல்ல; 38தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எவனும், எனக்குத் தகுதியுடையவன் அல்ல. 39தனது வாழ்வைக் காத்துக்கொள்ள முயற்சிக்கிறவன், அதை இழந்து போவான். தன் வாழ்வை எனக்காக இழக்கிறவனோ, அதைக் காத்துக்கொள்வான்.
40“உங்களை ஏற்றுக்கொள்கின்றவன் என்னையும் ஏற்றுக்கொள்கின்றான். என்னை ஏற்றுக்கொள்கின்றவன் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கின்றான். 41இறைவாக்கு உரைக்கின்ற ஒருவரை எவனாவது இறைவாக்கினராக ஏற்றுக்கொண்டால், அவன் இறைவாக்கினருக்குரிய வெகுமதியைப் பெற்றுக்கொள்வான். ஒருவர் நீதிமானாய் இருப்பதனால், எவனாவது அவரை ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவன் நீதிமானுக்குரிய வெகுமதியைப் பெற்றுக்கொள்வான். 42இந்தச் சிறியவர்களான எனது சீடர்களுக்கு, எவனாவது ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தால், கொடுத்தவன் நிச்சயமாய் தனக்குரிய வெகுமதியை பெறாமல் போக மாட்டான் என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன்.”

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

மத்தேயு 10: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்