2 கொரிந்தியர் 9:6-15

2 கொரிந்தியர் 9:6-15 TAOVBSI

பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார். வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும். விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார். தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள். இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும். அவர்கள் இந்தத் தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அனுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கீழ்ப்படிதலோடே அறிக்கையிட்டிருக்கிறதினிமித்தமும், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் உதாரத்துவமாய்த் தர்மஞ்செய்கிறதினிமித்தமும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி; உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினிமித்தம் உங்கள்மேல் வாஞ்சையாயிருக்கிறார்கள். தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.