லூக்கா 1:14-64

லூக்கா 1:14-64 TAOVBSI

உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத் திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான். அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்; தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன். இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள். அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகைகாட்டி ஊமையாயிருந்தான். அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான். அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து, எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள். ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம். தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான். அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான். அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய், சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள். எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து, தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள். மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள். எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள். கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள். எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள். அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றாள். அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி, அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள். அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.