லூக்கா 1:26-38

லூக்கா 1:26-38 TAOVBSI

ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம். தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான். அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.