நீதிமொழிகள் 17:1-28

நீதிமொழிகள் 17:1-28 TAOVBSI

சண்டையோடுகூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம். புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான். வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர். துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான். ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக் குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான். பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே. மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது. பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம் போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும். குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான். மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும். துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான். தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி. நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது. சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு. துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே. சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான். வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான். மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான். மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும். துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட, மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான். ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும். மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். நீதிமானை தண்டம் பிடிக்கிறதும், நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல. அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.