1 நாளாகமம் 13:5-14

1 நாளாகமம் 13:5-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச் சேர்ந்த சீகோர் நதிதுவக்கி ஆமாத்தின் எல்லைமட்டுமுள்ள இஸ்ரவேலையெல்லாங்கூட்டி, கேருபீன்களின் நடுவே வாசம்பண்ணுகிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத் யாரீமுக்கடுத்த பாலாவிலிருந்து கொண்டுவரும்படிக்கு, அவனும் இஸ்ரவேலர் அனைவரும் அவ்விடத்திற்குப் போனார்கள். அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது ரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள். தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழு பலத்தோடும் தேவனுக்கு முன்பாகச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள். அவர்கள் கீதோனின் களமட்டும் வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான். அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன் கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான். அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள் மட்டும் வழங்கிவருகிற பேரேஸ் ஊசா என்னும் பேரிட்டு, அன்றையதினம் தேவனுக்குப் பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்துக்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி, பெட்டியைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டிலே சேர்த்தான். தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.

1 நாளாகமம் 13:5-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனவே தாவீது கீரியாத்யாரீமிலுள்ள இறைவனது பெட்டியைக் கொண்டுவருவதற்காக எகிப்திலுள்ள சீகார் ஆறுதொடங்கி, லேபோ ஆமாத் வரையுள்ள இஸ்ரயேலின் எல்லா மக்களையும் கூடிவரச் செய்தான். கேருபீன்களின் நடுவில் அமர்ந்திருக்கும் யெகோவாவாகிய இறைவனின் பெயர் விளங்கும் பெட்டியை எடுத்து வருவதற்கு, தாவீதும் கூடியிருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் யூதேயாவிலிருந்த கீரியாத்யாரீமுக்கடுத்த பாலாவுக்கு போனார்கள். ஊசாவும் அகியோவும் வழிகாட்ட அவர்கள் இறைவனின் பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள். தாவீதும் எல்லா இஸ்ரயேல் மக்களும் பாடல்களோடும், யாழோடும், மத்தளங்களோடும், கைத்தாளத்தோடும், எக்காளத்தோடும் இறைவனுக்கு முன்பாக தங்கள் முழு பலத்தோடும் பாடிக் கொண்டாடினார்கள். அவர்கள் கீதோனிலுள்ள சூடடிக்கும் களத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டதினால், ஊசா தனது கையை நீட்டி பெட்டி விழுந்துவிடாதபடி பிடித்தான். ஊசா பெட்டியைத் தன் கையினால் தொட்டபடியினால் யெகோவாவின் கோபம் அவனுக்கு எதிராகப் பற்றியெரிந்தது. அதனால் அவர் ஊசாவை அடித்தார். அவன் அந்த இடத்திலே இறைவனுக்கு முன்பாக இறந்தான். அவ்வாறு யெகோவாவின் கோபம் ஊசாவை அடித்ததினால் தாவீது கோபப்பட்டு, அந்த இடத்திற்கு இந்நாள்வரை வழங்கிவருகிறபடி, பேரேஸ் ஊசா என்று பெயரிட்டான். தாவீது அன்றையதினம் இறைவனுக்குப் பயந்து, “நான் எப்படி இறைவனின் பெட்டியை என்னிடத்திற்குக் கொண்டுவருவேன்” எனக் கூறினான். எனவே அவன் பெட்டியைத் தாவீதின் நகரத்திற்கு எடுத்துச் செல்லவில்லை. அதற்குப் பதிலாக கித்தியனான ஓபேத் ஏதோமின் வீட்டிற்குக் கொண்டுபோனான். இறைவனது பெட்டி ஓபேத் ஏதோமின் குடும்ப இல்லத்தில் மூன்று மாதங்கள் இருந்தது. யெகோவா ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும், அவனுக்குள்ள எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.

1 நாளாகமம் 13:5-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச் சேர்ந்த சீகோர் நதிதுவங்கி ஆமாத்தின் எல்லைவரையுள்ள இஸ்ரவேலையெல்லாம் சேர்த்து, கேருபீன்களின் நடுவே வாசம்செய்கிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமிலுள்ள பாலாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அந்த இடத்திற்குப் போனார்கள். அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை வழிநடத்தினார்கள். தாவீதும் எல்லா இஸ்ரவேலர்களும் தங்களுடைய முழு பெலத்தோடும் தேவனுக்கு முன்பாக சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் இசைத்து மகிழ்ச்சியாக ஆடிப்பாடினார்கள். அவர்கள் கீதோனின் களம்வரை வந்தபோது, மாடுகள் தடுமாறியதால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன்னுடைய கையை நீட்டினான். அப்பொழுது யெகோவா ஊசாவின்மேல் கோபம்மூண்டவராக, அவன் தன்னுடைய கையைப் பெட்டியின் அருகில் நீட்டியதால் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான். அப்பொழுது யெகோவா ஊசாவை அடித்ததால் தாவீது கவலைப்பட்டு, அந்த இடத்திற்கு இந்த நாள்வரை சொல்லப்பட்டவருகிற பேரேஸ் ஊசா என்னும் பெயரிட்டு, அன்றையதினம் தேவனுக்கு பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடம் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி, பெட்டியைத் தன்னிடம் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் சேர்த்தான். தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடம் மூன்று மாதங்கள் இருக்கும்போது, யெகோவா ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.

1 நாளாகமம் 13:5-14 பரிசுத்த பைபிள் (TAERV)

எகிப்திலுள்ள சீகோர் ஆறுமுதல் லெபோ ஆமாத்தின் எல்லைவரையுள்ள அனைத்து ஜனங்களையும் தாவீது கூட்டினான். அவர்கள் அனைவரும் உடன்படிக்கைப் பெட்டியை கீரியாத் யாரீமிலிருந்து கொண்டுவருவதற்காகக் கூடினார்கள். தாவீதும் அவனோடு இருந்த மற்ற இஸ்ரவேலர்களும் யூதாவிலுள்ள பாலாவிற்குச் சென்றனர். (பாலா என்பது கீரியாத்யாரீமின் இன்னொரு பெயர்) உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவர அவர்கள் அங்கே போனார்கள். உடன்படிக்கைப் பெட்டி என்பது தேவனாகிய கர்த்தருடைய பெட்டி. அவர் கேருபீன்களுக்கு மேலே அமர்ந்திருக்கிறார். இப்பெட்டி கர்த்தருடைய நாமத்தாலேயே அழைக்கப்படுகிறது. ஜனங்கள் உடன்படிக்கைப் பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து தூக்கி வந்தனர். அதனைப் புதிய வண்டியில் வைத்தனர். ஊசாவும் அகியாவும் அவ்வண்டியை ஓட்டினார்கள். தாவீதும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தேவனுக்கு முன்பாக கொண்டாடினார்கள். அவர்கள் தேவனை புகழ்ந்து பாடினார்கள். அவர்கள் சுரமண்டலங்களையும், மேளங்களையும், கைத்தாளங்களையும், எக்காளங்களையும் இசைத்தனர். அவர்கள் கீதோனின் தானியத்தைப் பிரித்தெடுக்கும் களம் வந்தனர். வண்டியை இழுத்து வந்த மாடுகள் இடறின. உடன்படிக்கைப் பெட்டியானது ஏறக்குறைய விழுவது போலானது. ஊசா, அதனை ஒரு கையால் விழாமல் பிடித்துக்கொள்ள கையை நீட்டினான். ஊசாவின் மேல் கர்த்தருக்கு பெருங் கோபம் உண்டாயிற்று, ஊசா பெட்டியைத் தொட்டதால் கர்த்தர் அவனைக் கொன்றுப்போட்டார். எனவே அவன் தேவனுக்கு முன்னால் மரித்துப் போனான். தேவன் தனது கோபத்தை ஊசாவின் மேல் காட்டினார். இதனால் தாவீதுக்குக் கோபம் வந்தது. அன்று முதல் இன்றுவரை இந்த இடம் “பேரேஸ் ஊசா” என்றே அழைக்கப்படுகிறது. தாவீது அன்று தேவனுக்குப் பயந்தான். தாவீது, “தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை இங்கு என்னிடம் என்னால் கொண்டுவர முடியாது!” என்றான். எனவே தாவீது தனது நகரத்திற்கு உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் செல்லவில்லை. அவன் உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டில் விட்டுவிட்டுப் போனான். இவன் காத் நகரத்தைச் சேர்ந்தவன். உடன்படிக்கைப் பெட்டியானது ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்களுக்கு இருந்தது. ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும், அவனுக்குரிய அனைத்தையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.