1 நாளாகமம் 22:10-19

1 நாளாகமம் 22:10-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவன் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்குக் குமாரனாயிருப்பான், நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார். இப்போதும் என் குமாரனே, நீ பாக்கியவானாயிருந்து, கர்த்தர் உன்னைக்குறித்துச் சொன்னபடியே உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனேகூட இருப்பாராக. கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, உன் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக. கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு. இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்து லட்சம் தாலந்து வெள்ளியையும், நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன்; நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய். வேலை செய்யத்தக்க திரளான சிற்பாசாரிகளும், தச்சரும், கல்தச்சரும், எந்த வேலையிலும் நிபுணரானவர்களும் உன்னோடிருக்கிறார்கள். பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான். தன் குமாரனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடிருந்து நான்கு திசையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தந்தார் அல்லவா? தேசத்தின் குடிகளை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; கர்த்தருக்கு முன்பாகவும், அவருடைய ஜனத்திற்கு முன்பாகவும், தேசம் கீழ்ப்பட்டிருக்கிறது. இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும், தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.

1 நாளாகமம் 22:10-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவனே என் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான். அவன் எனது மகனாயிருப்பான். நான் அவனுக்குத் தகப்பனாயிருப்பேன். நான் அவனுடைய ஆட்சியின் சிங்காசனத்தை இஸ்ரயேலுக்கு மேலாக என்றென்றும் நிலைத்திருக்கப் பண்ணுவேன்’ என்று என்னிடம் சொன்னார் என்றான். “இப்பொழுதும் என் மகனே, யெகோவா உன்னோடு இருப்பாராக. அவர் கூறியதுபோல யெகோவாவாகிய உன் இறைவனுக்கு ஆலயத்தைக் கட்டுவதில் நீ வெற்றியடைவாயாக. அவர் உன்னை இஸ்ரயேலுக்கு மேலாக ஆளுநனாக நியமிப்பார். அப்போது யெகோவா உனக்கு நீ உன் யெகோவாவாகிய இறைவனின் சட்டங்களைக் கைக்கொள்ளும்படி விவேகத்தையும், அறிவையும் கொடுப்பாராக. யெகோவா மோசேயின் மூலம் இஸ்ரயேலுக்குக் கொடுத்த சட்டங்களையும், விதிமுறைகளையும் மிகக் கவனமாக கைக்கொள்வாயானால் உனக்கு வெற்றி கிடைக்கும். திடன்கொண்டு தைரியமாயிரு. பயப்படாதே, கலங்காதே. “யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவதற்கென நான் ஒரு இலட்சம் தாலந்து நிறையுள்ள தங்கத்தையும், பத்துலட்சம் தாலந்து நிறையுள்ள வெள்ளியையும், ஏராளமான வெண்கலத்தையும், அளவிடமுடியாத இரும்பையும், மரங்களையும், கற்களையும் மிகவும் சிரமத்துடன் ஆயத்தப்படுத்தி வைத்துள்ளேன். அத்துடன் நீயும் வேண்டியதைச் சேர்த்துக்கொள். கல் வெட்டுவதற்கும், மேசன் வேலை செய்வதற்கும், தச்சுவேலை செய்வதற்கும் உன்னிடம் தேர்ச்சிபெற்ற தொழில் வல்லுநர்கள் அதிகம்பேர் இருக்கிறார்கள். தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றில் கைவேலை செய்யக்கூடிய கைவினைஞர்கள் எண்ணற்றவர்கள் உன்னிடம் இருக்கிறார்கள். இப்பொழுது நீ வேலையைத் தொடங்கு; யெகோவா உன்னோடு இருப்பாராக” என்றான். பின்னர் தாவீது தனது மகன் சாலொமோனுக்கு உதவிசெய்யும்படி, இஸ்ரயேலின் தலைவர்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான். அவன் அவர்களிடம், “உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களோடு இல்லையா? அவர் உங்களுக்கு எல்லாப் பக்கங்களிலும் அமைதியைத் தரவில்லையா? நாட்டின் குடிகளை எனது கையில் ஒப்படைத்துள்ளார். நாடு யெகோவாவுக்கும், அவருடைய மக்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறது. உங்கள் இறைவனாகிய யெகோவாவைத் தேடும்படி உங்கள் இருதயத்தையும் ஆத்துமாவையும் இப்பொழுதே அர்ப்பணியுங்கள். இறைவனாகிய யெகோவாவின் பரிசுத்த இடத்தைக் கட்டத் தொடங்குங்கள். அப்பொழுது யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியையும், இறைவனுக்குச் சொந்தமான பரிசுத்த பொருட்களையும் யெகோவாவினுடைய பெயரில் கட்டப்படப்போகும் ஆலயத்திற்குள் கொண்டுவந்து வைக்கலாம்” என்று சொன்னான்.

1 நாளாகமம் 22:10-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவன் என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்கு மகனாக இருப்பான், நான் அவனுக்கு தகப்பனாக இருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார். இப்போதும் என்னுடைய மகனே, நீ பாக்கியவானாக இருந்து, யெகோவா உன்னைக்குறித்துச் சொன்னபடியே உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனே இருப்பாராக. யெகோவா உனக்கு ஞானத்தையும் உணர்வையும் கொடுத்து, உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக. யெகோவா இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த கட்டளைகளையும் சட்டங்களையும் செய்ய நீ கவனமாக இருந்தால் பாக்கியவானாக இருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாக இரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு. இதோ, நான் என்னுடைய சிறுமையிலே யெகோவாவுடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்து லட்சம் தாலந்து வெள்ளியையும், எடைபோட முடியாத அதிகமான வெண்கலத்தையும் இரும்பையும் சேமித்தும், மரங்களையும் கற்களையும் சேமித்தும் வைத்தேன்; நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாக ஆயத்தம் செய்வாய். வேலை செய்யத்தக்க திரளான சிற்பிகளும், தச்சர்களும், கொத்தனார்களும், எந்த வேலையிலும் திறமைவாய்ந்தவர்களும் உன்னோடு இருக்கிறார்கள். பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்திற்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழுந்து காரியத்தை நடத்து; யெகோவா உன்னோடு இருப்பாராக என்றான். தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது: உங்கள் தேவனாகிய யெகோவா உங்களோடு இருந்து நான்கு திசையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தந்தார் அல்லவா? தேசத்தின் குடிகளை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; யெகோவாவுக்கு முன்பாகவும், அவருடைய மக்களுக்கு முன்பாகவும், தேசம் கீழ்ப்பட்டிருக்கிறது. இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமாவையும், உங்கள் தேவனாகிய யெகோவாவை தேடுவதற்கு நேராக்கி, யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியையும், தேவனுடைய பரிசுத்தப் பணிபொருட்களையும், யெகோவாவுடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படி, நீங்கள் எழுந்து, தேவனாகிய யெகோவாவின் பரிசுத்த இடத்தைக் கட்டுங்கள் என்றான்.

1 நாளாகமம் 22:10-19 பரிசுத்த பைபிள் (TAERV)

சாலொமோன் எனது நாமத்துக்காக ஆலயம் கட்டுவான். அவன் எனது குமாரனாக இருப்பான், நான் அவனது தந்தையாக இருப்பேன். நான் சாலோமோனின் அரசைப் பலமுள்ளதாக்குவேன். அவனது குடும்பத்தில் உள்ளவர்கள் என்றென்றும் இஸ்ரவேலை ஆள்வார்கள்’ என்றார்!” என்றான். தாவீது மேலும், “இப்போது மகனே, கர்த்தர் உன்னோடு இருக்கட்டும், உன் செயல்களில் வெற்றி கிடைக்கட்டும். உனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தால் ஆலயம் கட்டுவாய். அவர் சொன்னது போலவே கட்டாயம் நீ செய்வாய். கர்த்தர் உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக்குவார். ஜனங்களை வழி நடத்தவும் கர்த்தருடைய சட்டங்களை மதித்து கட்டுப்பட்டு நடக்கவும் தேவையான ஞானத்தையும், புரிந்துகொள்ளும் திறனையும் தேவனாகிய கர்த்தர் உனக்கு வழங்கட்டும். நீ வெற்றிமிக்கவனாய் இருப்பாய். இஸ்ரவேலுக்காக கர்த்தர் மோசேயிடம் கொடுத்த கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் நீ கவனமாகக் கீழ்ப்படிய வேண்டும். பலமாகவும், தைரியமாகவும் இரு. பயப்படாதே. “சாலொமோன், நான் கடினமான வேலை செய்து கர்த்தருக்கு ஆலயம் கட்டதிட்டமிட்டேன். நான் 3,750 டன் தங்கம் கொடுத்திருக்கிறேன். 37,500 டன் வெள்ளி கொடுத்திருக்கிறேன். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலமும் இரும்பும் கொடுத்திருக்கிறேன். மரமும் கற்களும் கொடுத்திருக்கிறேன். சாலொமோன், உன்னால் மேலும் சேர்க்க முடியும். உன்னிடம் ஏராளமான கல்தச்சர்களும் மரத்தச்சர்களும் உள்ளனர். எல்லா வேலைகளையும் செய்யும் திறமை உடையவர்களும் உனக்கு இருக்கின்றனர். அவர்கள் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்ற வேலை செய்வதில் வல்லவர்கள். எண்ணிபார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளனர். இப்போதே வேலையைத் தொடங்கு. கர்த்தர் உன்னோடு இருக்கட்டும்” என்றான். பிறகு தாவீது, இஸ்ரவேலின் தலைவர்கள் அனைவருக்கும் தனது குமாரன் சாலொமோனுக்கு உதவும்படி கட்டளையிட்டான். தாவீது தலைவர்களிடம், “தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருக்கிறார். அவர் சமாதானத்திற்குரிய காலத்தைக் கொடுத்திருந்தார். நம்மைச் சுற்றி இருப்பவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் உதவினார். கர்த்தருக்கும், அவரது ஜனங்களுக்கும் இப்போது இந்த நிலம் கட்டுப்பட்டிருக்கிறது. இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் உங்கள் இதயத்தையும் ஆத்துமாவையும் கொடுங்கள். அவர் சொன்னபடி செய்யுங்கள். தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்த இடத்தைக் கட்டுங்கள். கர்த்தருடைய நாமத்துக்காக ஆலயம் கட்டுங்கள். பிறகு உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வாருங்கள். மற்ற பரிசுத்தமான பொருட்களையும் ஆலயத்திற்குள் கொண்டு வாருங்கள்” என்றான்.