1 நாளாகமம் 28:11-21

1 நாளாகமம் 28:11-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானமும் இருக்கவேண்டிய மாதிரியையும், ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும், ஆசாரியரையும் லேவியரையும் வரிசைகளாக வகுக்கிறதற்கும், கர்த்தருடைய ஆலயப்பணிவிடை வேலை அனைத்திற்கும், கர்த்தருடைய ஆலயத்து வேலையின் பணிமுட்டுகள் அனைத்திற்குமுரிய கட்டளையையும் கொடுத்தான். அவன் பற்பல வேலைக்கு வேண்டிய சகல பொற்பாத்திரங்களுக்காக நிறையின்படி பொன்னையும், பற்பல வேலைக்கு வேண்டிய சகல வெள்ளிப்பாத்திரங்களுக்காக நிறையின்படி வெள்ளியையும், பொன் விளக்குத்தண்டுகளுக்கும் அவைகளின் பொன் விளக்குகளுக்கும், ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி விளக்குத்தண்டுகளிள் ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய வெள்ளியையும், சமுகத்தப்பங்களை வைக்கும் ஒவ்வொரு மேஜைக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி மேஜைகளுக்கு வேண்டிய வெள்ளியையும், முள்குறடுகளுக்கும் கலங்களுக்கும் தட்டுகளுக்கும் வேண்டிய பசும்பொன்னையும், பொன் கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும், வெள்ளிக்கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும், தூபங்காட்டும் பீடத்திற்கு நிறையின்படி வேண்டிய புடமிடப்பட்ட பொன்னையும் கொடுத்து, செட்டைகளை விரித்துக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்து, இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான். தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக்கைவிடவுமாட்டார். இதோ, தேவனுடைய ஆலயத்து வேலைக்கெல்லாம் ஆசாரியர் லேவியருடைய வகுப்புகள் இருக்கிறது; அந்த எல்லாக் கிரியைக்கும் சகலவித வேலையிலும் நிபுணரான மனப்பூர்வமுள்ள சகல மனுஷரும், உன் சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும், சகல ஜனங்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்.

1 நாளாகமம் 28:11-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு தாவீது தன் மகன் சாலொமோனிடம், ஆலயத்தின் முன்மண்டபம், அதற்கான கட்டடங்கள், களஞ்சியங்கள், மேல்பகுதிகள், உள்ளறைகள், பாவநிவிர்த்திக்கான இடம் ஆகியவற்றின் வரைபடங்களைக் கொடுத்தான். அத்துடன் யெகோவாவின் ஆலய முற்றங்கள், சூழ உள்ள எல்லா அறைகள், இறைவனின் ஆலயத்தின் அர்ப்பணிப்பு காணிக்கைகளை வைக்கும் திரவியக் களஞ்சியம் போன்றவற்றைக் குறித்து, இறைவனின் ஆவியானவர் தன் மனதில் வெளிப்படுத்திய எல்லா திட்டங்களையும் கொடுத்தான். அவன் ஆசாரியர்கள், லேவியர்கள் ஆகியோரின் பிரிவுகளைப்பற்றியும், யெகோவாவின் ஆலயத்தின் பணியின் எல்லா வேலைகளைப்பற்றியும், வழிபாட்டிற்குப் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களைப்பற்றியும் எல்லா அறிவுறுத்தல்களையும் அவனுக்குக் கொடுத்தான். பலவிதமான வழிபாடுகளில் பயன்படுத்த தங்கப் பாத்திரங்களுக்குத் தேவையான தங்கத்தின் அளவையும், வெள்ளிப் பாத்திரத்திற்குத் தேவையான வெள்ளியின் நிறையையும் குறிப்பிட்டான்: ஒவ்வொரு விளக்கிற்கும் அதன் தாங்கிக்கும் தேவையான தங்கத்தையும் குறிப்பிட்டான். அத்துடன் வெள்ளி விளக்குகளுக்கும் அதன் தாங்கிகளுக்கும் தேவையான வெள்ளியையும் குறிப்பிட்டு ஒவ்வொரு விளக்கின் பாவனைக்கேற்ப கொடுத்தான். இறைவனுக்கு அர்ப்பணிக்கும் அப்பங்களை வைக்கும் ஒவ்வொரு மேஜைகளுக்கும் தேவையான தங்கத்தையும் குறிப்பிட்டான். அத்துடன் மேஜைகளுக்குத் தேவையான வெள்ளியையும் குறிப்பிட்டான். இன்னும் முள்ளுக் கரண்டிகள், தெளிப்புக் கிண்ணங்கள், பெரிய ஜாடிகள் ஆகியவற்றுக்கு வேண்டிய சுத்தத் தங்கத்தையும், ஒவ்வொரு தங்கப் பாத்திரத்திற்கும் தேவையான தங்கத்தையும் வெள்ளிப் பாத்திரத்திற்குத் தேவையான வெள்ளியையும் குறிப்பிட்டான். தூபபீடத்திற்குத் தேவையான சுத்தமான தங்கத்தையும் குறிப்பிட்டான். அத்துடன் யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தங்கள் செட்டைகளை விரித்துப் பாதுகாக்கும் தங்க கேருபீன்களின் தேருக்கான வரைபடத்தையும் கொடுத்தான். “இவையெல்லாவற்றையும் யெகோவா தமது கரத்தின் எழுத்தாக எனக்குத் தந்திருக்கிறார். அவர் இந்த வரைபடத்தின் எல்லா விவரங்களையும் எனக்கு விளக்கியிருக்கிறார்” என்று தாவீது சொன்னான். தாவீது தன் மகன் சாலொமோனிடம், “நீ திடன்கொண்டு தைரியத்துடன் இந்த வேலையைச் செய். பயப்படாதே, மனந்தளராதே; என் இறைவனாகிய யெகோவா உன்னோடிருக்கிறார். யெகோவாவின் ஆலயத்தில் வேலைகளெல்லாம் முடியும்வரை அவர் உன்னைக் கைவிடமாட்டார்; நீ அசைக்கப்படவுமாட்டாய். இறைவனுடைய ஆலயத்தின் எல்லா வேலைகளுக்கும் ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களின் பிரிவுகள் ஆயத்தமாக இருக்கின்றன. எல்லாத் தொழிலிலும் திறமையாயிருக்கிற ஆர்வம் உடையவர்கள் எல்லோரும் உனக்கு வேலைகளில் உதவி செய்வார்கள். எல்லா அதிகாரிகளும், எல்லா மக்களும் உனது ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்ப்படிந்து நடப்பார்கள்” என்றும் சொன்னான்.

1 நாளாகமம் 28:11-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தாவீது தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன இடம் இருக்கவேண்டிய மாதிரியையும், ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய யெகோவாவுடைய ஆலயமுற்றங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும், ஆசாரியர்களையும் லேவியர்களையும் வரிசைகளாக பிரிப்பதற்கும், யெகோவாவுடைய ஆலய பணிவிடைவேலை அனைத்திற்கும், யெகோவாவுடைய ஆலயத்து வேலையின் பணிபொருட்கள் அனைத்திற்குமுரிய கட்டளையையும் கொடுத்தான். அவன் பற்பல வேலைக்கு வேண்டிய எல்லாப் பொற்பாத்திரங்களுக்காக எடையின்படி பொன்னையும், பற்பல வேலைக்கு வேண்டிய எல்லா வெள்ளிப்பாத்திரங்களுக்காக எடையின்படி வெள்ளியையும், பொன் விளக்குத்தண்டுகளுக்கும் அவைகளின் பொன் விளக்குகளுக்கும், ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் எடையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி விளக்குத்தண்டுகளிள் ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் எடையின்படி வேண்டிய வெள்ளியையும், சமூகத்து அப்பங்களை வைக்கும் ஒவ்வொரு மேஜைக்கும் எடையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி மேஜைகளுக்கு வேண்டிய வெள்ளியையும், முள்குறடுகளுக்கும் கலங்களுக்கும் தட்டுகளுக்கும் வேண்டிய பசும்பொன்னையும், பொன் கிண்ணங்களில் ஒவ்வொரு கிண்ணத்திற்கும் எடையின்படி வேண்டியதையும், வெள்ளிக் கிண்ணங்களில் ஒவ்வொரு கிண்ணத்திற்கும் எடையின்படி வேண்டியதையும், தூபங்காட்டும் பீடத்திற்கு எடையின்படி வேண்டிய புடமிடப்பட்ட பொன்னையும் கொடுத்து, இறக்கைகளை விரித்துக் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்து, இந்த மாதிரியின்படி எல்லா வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் யெகோவாவுடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான். தாவீது தன்னுடைய மகனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாக இருந்து, இதை நடத்து: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய யெகோவா என்னும் என்னுடைய தேவன் உன்னோடு இருப்பார்; யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவதின் எல்லா செய்கைகளையும் நீ முடிக்கும்வரை, அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார். இதோ, தேவனுடைய ஆலயத்து வேலைக்கெல்லாம் ஆசாரியர்கள் லேவியர்களுடைய வகுப்புகள் இருக்கிறது; அந்த எல்லா செய்கைக்கும் சகலவித வேலையிலும் திறமையுள்ளவர்களான மனப்பூர்வமுள்ள சகல மனிதர்களும், உன்னுடைய சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும், எல்லா மக்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்.

1 நாளாகமம் 28:11-21 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு அவன் தன் குமாரன் சாலொமோனுக்கு ஆலயத்தை கட்டுவதற்கான திட்டங்களைப்பற்றிக் கூறினான். நுழைவு மண்டபம், கட்டிடங்கள், அறைகள், கருவூல அறைகள், அதன் மேல் வீடுகள், அதின் உள்ளறைகள், கிருபாசனம் போன்றவற்றின் மாதிரிகளைக் கொடுத்தான். தாவீது ஆலயத்தின் அனைத்து பாகங்களுக்கும் திட்டம் வைத்திருந்தான். அவன் அவற்றை சாலொமோனிடம் கொடுத்தான். அவன் கர்த்தருடைய ஆலயத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தின் திட்டங்களையும் கொடுத்தான். அவன் கருவூல அறைகளுக்கும் பரிசுத்தமானப் பொருட்கள் வைக்கும் அறைகளுக்கும் உரிய திட்டங்களையும் கொடுத்தான். ஆசாரியர் குழுக்களைப் பற்றியும் லேவியர்களைப் பற்றியும் சாலொமோனுக்கு தாவீது கூறினான். கர்த்தருடைய ஆலயத்தில் செய்ய வேண்டிய சேவைகளைப் பற்றியும் சேவைகளுக்குரிய பொருட்களைப் பற்றியும் கூறினான். ஆலயத்தில் பயன்படுத்தவேண்டிய தங்கம், வெள்ளி பற்றிய அளவினையும் கூறினான். தங்க விளக்குகள் மற்றும் விளக்குத் தண்டுகள் பற்றியும் திட்டங்களுண்டு. வெள்ளி விளக்குகள், மற்றும் விளக்குத் தண்டுகள் பற்றியும் திட்டங்களுண்டு. இவ்விளக்குகளுக்கும் விளக்குத் தண்டுகளுக்கும் எவ்வளவு தங்கமும் வெள்ளியும் தேவைப்படும் என்பதையும் சொன்னான். தேவைப்படுகிற இடங்களில் வெவ்வேறு விளக்குத் தண்டுகள் இருந்தன. பரிசுத்த அப்பம் வைப்பதற்குரிய மேஜை செய்ய தேவையான தங்கம் பற்றியும் கூறினான். வெள்ளி மேஜைகளுக்கு வேண்டிய வெள்ளியின் அளவைப் பற்றியும் தாவீது கூறினான். முள் குறடுகளுக்கும் தூவப் பயன்படும் கலங்களுக்கும், தட்டுகளுக்கும் வேண்டிய தங்கத்தைப் பற்றியும் கூறினான். பொன் கிண்ணங்களுக்குத் தேவையான பொன்னின் அளவையும், வெள்ளிக் கிண்ணங்களுக்கு தேவையான வெள்ளியின் அளவையும் தாவீது கூறினான். நறுமணப்பொருட்கள் எரிக்கும் பீடத்திற்கு வேண்டிய பரிசுத்த பொன்னின் அளவைப் பற்றியும் கூறினான். தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்தான். இவை தங்கத்தால் ஆனவை. தாவீது, “கர்த்தருடைய வழிகாட்டுதலால் இத்திட்டங்களை நான் எழுதினேன். அவரது உதவியால்தான் அனைத்தும் திட்டமிடப்பட்டது” என்றான். தாவீது மேலும் தன் குமாரன் சாலொமோனிடம், “உறுதியாக இரு. தைரியமாக இந்த வேலையை முடித்துவிடு. பயப்படாதே. ஏனென்றால் என் தேவனாகிய கர்த்தர் உன்னோடும் இருப்பார். அனைத்து வேலைகளும் முடியும்வரை அவர் உனக்கு உதவுவார். அவர் உன்னை விட்டுப் போகமாட்டார். கர்த்தருடைய ஆலயத்தை நீ கட்டி முடிப்பாய். ஆசாரியர்களின் குழுவும், லேவியர்களும் தேவாலயத்தின் எல்லா வேலைகளுக்கும் தயாராக உள்ளனர். திறமையுள்ள ஒவ்வொருவரும் தயாராக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஆலயத்தின் வேலைகளுக்கு உதவுவார்கள். உனது அனைத்து ஆணைகளுக்கும், அதிகாரிகளும் ஜனங்களும் கீழ்ப்படிவார்கள்” என்றான்.